அமலாக்கப்பிரிவு இயக்குநராக முதல் முறையாக 2018, நவம்பா் 19 அன்று இரண்டு ஆண்டுகளுக்கு சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். 2020-இல் அவரது முந்தைய இரண்டு ஆண்டுகள் பணி நியமன உத்தரவு திடீரென மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இதன்படி, 2021 நவம்பர் 18-ஆம் தேதிக்குப் பிறகு சஞ்சய் குமார் மிஸ்ரா ஓய்வுபெறுவார்; புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2021 நவம்பர் 17 அன்று மிஸ்ராவின் பதவிக் காலத்தை 2022 நவம்பர் 18 வரை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து நரேந் திர மோடி அரசு உத்தரவிட்டது.
அதுமட்டுமல்லாமல், 2 ஆண்டுகளாக உள்ள சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்களின் பதவிக்காலத்தை மோடி அரசு, திடீரென 5 ஆண்டுகளாக அதிகரித்தது. அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. மிஸ்ராவை 5 ஆண்டுகள் பதவியில் தக்கவைப்பதற்காக இந்த வேலையைச் செய்தது.
நீட்டிக்கக் கூடாது :
இதனை அப்போதே கண்டித்த உச்ச நீதிமன்றம், இதற்கு மேலும் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று கூறியிருந்தது. “அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக் காலத்தை குறுகிய காலம் மட்டும்தான் நீட்டிக்க வேண்டும். சஞ்சய்குமார் மிஸ்ரா (எஸ்கே மிஸ்ரா) பதவிக் காலத்தை மீண்டும் நீட்டிக்கக் கூடாது” என தீர்ப்பில் கறாராக தெரிவித்திருந்தது. திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பதவி நீட்டிப்பு சலுகையை அனுபவிக்கும் முதல் நபர் என்ற பெயரை சஞ்சய் குமார் மிஸ்ரா பெற்றார். இன்னும் சொல்லப்போனால், சஞ்சய் குமார் மிஸ்ராவுக்காகவே சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக அப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்கின.
இந்த பதவி நீட்டிப்பின் அடிப்படையில், கூடுதலாக ஓராண்டு பதவியைப் பெற்ற மிஸ்ரா, 2022 நவம்பர் 18 அன்றாவது ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், நரேந்திர மோடி அரசானது, மிஸ்ரா ஓய்வு பெற வேண்டிய தேதிக்கு ஒருநாள் முன்னதாக – 2022 நவம்பர் 17 அன்று, அவருக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, 2023 நவம்பர் 18 வரை மேலும் ஓராண்டுக்கு மிஸ்ரா பதவியில் இருப்பார் என்று அறிவித்தது. “2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடித்தான், சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், ஒன்றிய அரசு தன்னிச்சையாக பதவி நீட்டிப்பு வழங்கியது ஜனநாயகத்திற்கு விரோதமானது” என்று அப்போதே கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
அத்துடன், மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பை எதிர்த்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சமூக ஆர்வலரும், மத்தியப்பிரதேச மகளிர் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான டாக்டர் ஜெயா தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
“அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலத்தை அவ்வப்போது நீட்டிக்க முடியாது. அமலாக்க இயக்குநரின் பதவிக்காலத்தை நீட்டிக்க இந்திய ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. முக்கிய விசாரணைகள் நிலுவையில் உள்ளதால், அமலாக்க இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கிறோம் என்ற காரணத்திற்குள் ஒன்றிய அரசு புகுந்து கொள்ள முடியாது. அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு நியமனம் செய்ய தகுதியான பல திறமையான அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் இந்த பதவி நீட்டிப்பால், மத்திய ஊழல் தடுப்பு ஆணைய (Central Vigilance Commission) சட்டம் பரிந்துரைக்கும் நடைமுறைகளின் படி நியமனம் பெறுவதற்கான வாய்ப்பை இழக்கின்றனர்” என்று மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
“ஜனநாயகம் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களாகும். ஆனால், தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே ஒன்றிய அரசு அழித்துள்ளது. அம லாக்க முகமைகளில் நியமன மானது நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். மாறாக, நியமனம் ஒரு தலைப்பட்சமான முறையில் நடந்தால், பின்னர் அந்த பதவிகள் கருவிகளாகப் பயன்படுத்தப்படலாம்” என்றும் அச்சத்தை வெளியிட்டிருந்தனர்.
அடுக்கடுக்கான கேள்விகள்
இந்த வழக்கு, நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில், நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகி யோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா-வுக்கு மேலும் நீட்டிப்பு வழங்கப்படக்கூடாது என்ற உத்தரவு இருந்த போதும் அவருக்கு 3-ஆவது முறை யாக பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது எப்படி? ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன? அந்த ஒரு நபரால் மட்டுமே அந்த பதவிக்குரிய கடமையை செய்யமுடியுமா?
அமலாக்கத்துறையில் அவரது வேலையைச் செய்யக்கூடிய வேறு ஆள் இல்லையா? சஞ்சய் குமார் மிஸ்ரா மட்டும் அவ்வளவு இன்றியமை யாதவராக ஏன் இருக்கிறார்? அப்படிப்பட்ட இன்றியமையாத நபர், நாளை ஓய்வுபெற்றுவிட்டால், அந்த பதவியின் நிலை அதோ கதியாகி விடுமா?” என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதற்கு சரியான பதில் கூற முடியாத சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பணமோசடி தொடர்பான வழக்குகளில் சட்டப் பிரிவுகள் அனைத்தும் மாற்றப்பட உள்ளன. எனவே சஞ்சய் மிஸ்ரா பதவியில் இருப்பது அவசியம்” என்று சமாளித்தார். இந்த வழக்கு மே 8 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது” என்றும் துஷார் மேத்தா உறுதியளித்தார்.
இந்நிலையில்தான், செவ்வாயன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய பி.ஆர். கவாய் தலைமை யிலான 3 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டி க்கப்பட்டது சட்டவிரோதமானது; 2021-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது; எனவே, அவர் ஜூலை 31 வரை மட்டுமே பதவியில் இருக்க வேண்டும், அதற்குப் பின் அந்தப் பதவியில் அவர் நீடிக்கக் கூடாது” என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

