“அனைத்து சமூக மக்களுக்கும் பிடித்தமானவராக இருந்தவர் கருமுத்து கண்ணன்” என்று அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.
மதுரை கருமுத்து கண்ணன் மறைவை முன்னிட்டு இன்று அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் குறிப்பு:
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் தக்காராக இருந்து, கோவில் நிலங்களை மீட்டெடுத்து, திருப்பணிகள் பல செய்து, கோவில் வருமானத்தைப் பெருக்கியவரும், தியாகராஜா கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து, கல்வியை வியாபார நோக்கில் இல்லாமல், அடுத்த தலைமுறையை முன்னேற்றும் தூண்டுகோலாகப் பயன்படுத்தியவரும் நூற்பாலை மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியவருமான அமரர் கருமுத்து கண்ணன், வாழ்க்கை அனைவராலும் போற்றத் தக்கதாகும்.
அமரர் கருமுத்து கண்ணன், தந்தை கருமுத்து தியாகராஜ செட்டியார், இலங்கையில் படித்து வளர்ந்தவர். தமிழ்ப் பற்றாளரான அவர், இலங்கையில் நடத்தி வந்த நாளிதழ் மூலம், தமிழ் வளர்ச்சிக்கும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மலையகத் தமிழர்களின் உரிமைக்காகவும் பாடுபட்டவர். பின்னர் தமிழகம் திரும்பி, தமிழ்நாடு எனும் நாளிதழை நடத்தி, மிகச் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு அடையாளமும் ஆதரவும் அளித்தார்.
தனது தந்தையின் மறைவுக்கு பின்னர், இளம்வயதிலேயே தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் என நிர்வாகத்தை கவனிக்கத் தொடங்கிய கருமுத்து கண்ணன், மதுரை மாநகரின் வளர்ச்சிக்கும் பெருமளவில் பங்கு வகித்துள்ளார். கட்சி பேதமில்லாது, அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து, மக்களுக்கும், நாட்டிற்கும் எது நல்லதென்று யோசித்து, அதைத் தீர்க்கமாகச் செயல்படுத்துவதில் வல்லவராக இருந்தார்.
அவரது உயர்ந்த எண்ணங்களைப் புரிந்து கொண்ட மத்திய மாநில அரசுகள், அவரது தொலை நோக்குப் பார்வையையும், அவரது தொழில் சார்ந்த அனுபவங்களையும் அங்கீகரித்தன. மத்திய மாநில அரசுகளின் ஆலோசனைக் குழுக்களிலும் இடம்பெற்றிருந்தார். அனைத்து சமூக மக்களுக்கும் பிடித்தமானவராக இருந்தவர்.
கல்விக் கட்டணம் என்ற பெயரில், பெற்றோரை கடனில் தள்ளாமல், அனைவருக்கும் கல்வி எளிய கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என்று அறத்துடன் செயல்பட்ட பெருமைக்குரியவர் கருமுத்து கண்ணன். தனது தியாகராஜர் மில்ஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறார்.
மதுரையின் அடையாளங்களில் ஒருவரான அமரர் கருமுத்து கண்ணன் மறைந்தாலும், அவரது கல்விப் பணிகளும், ஆலய திருப்பணிகளும், எளிய மக்களை முன்னேற்ற அவர் எடுத்த தொழில் முயற்சிகளும், காலமெல்லாம் அவரது புகழைப் பேசிக் கொண்டிருக்கும்.
அன்னாரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து அவரது இல்லம் சென்றிருந்தோம். அவரை போன்றே அவரது இல்லமும், சூழலும் மிக அமைதியாகவும், எளிமையானதாகவும் இருந்தது. அவரது பகட்டில்லா பண்பும், சுயநலமில்லா குணமும் அவரது இல்லத்திலும் எதிரொலித்தது.
அவரின் மகன் ஹரி தியாகராஜனிடம் உரையாடும்போது, அமரர் கருமுத்து கண்ணன் குறித்து அவர் தெரிவித்த பல புதிய தகவல்கள் ஆச்சரியமூட்டியது. போற்றுதலுக்குரிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் அமரர் கருமுத்து கண்ணன்.

