அதிமுகவில் இரட்டை துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த ஈபிஎஸ் , ஓபிஎஸ் கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு தனித்தனியே பிரிந்தனர். அதன்பிறகு, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ்சையும் கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து ஈபிஎஸ் நீக்கினார்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட தீர்ப்புகள் வெளியான நிலையில், சமீபத்தில் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 10 நாட்களில் முடிவெடுப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அந்த அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் தான், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கரீத்துள்ளது.