மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கி மென்பொருட்களைப் பயன்படுத்தி, வங்கிகளின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் ஊடுருவி மோசடியில் ஈடுபடுவதாக சைபர் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளை மோசடியாக மேற்கொள்வதுடன், டிஜிட்டல் ஆதாரங்களையும் அழித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), இந்த எச்சரிக்கையை நிதி நிறுவனங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளது.
தானியங்கி முறையில் பணம் திருட்டு!
சரியான பாதுகாப்பு இல்லாத மென்பொருட்கள், இணைய சேவையகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி வங்கிகளுக்குள் ஊடுருவும் குற்றவாளிகள், தானியங்கி பணப் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் பணம் செலுத்தும் இணையத் தொடர்பு வசதிகளை (APIs) குறிவைக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகக் குறுகிய நேரத்தில் மோசடிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இதனால் மோசடியைக் கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்கு வங்கிகளுக்குக் கிடைக்கும் நேரம் வெகுவாகக் குறைகிறது.
போலிக் கணக்குகள் மூலம் பணம் மாற்றம்!
மோசடி மூலம் திருடப்படும் பணம், பல்வேறு வங்கிகளில் உள்ள இடைத்தரகர் கணக்குகள் (Mule Accounts) வழியாகப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பின்னர் உடனடி பணப் பரிமாற்ற சேவை (IMPS), தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் (NEFT) ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது அல்லது எடுக்கப்படுகிறது.
மேலும், பணப் பரிவர்த்தனைப் பதிவுகளை அழித்து, தங்களது டிஜிட்டல் தடயங்களை மறைப்பதால் குற்றவாளிகளைக் கண்டறிவதும், பணத்தை மீட்பதும் சவாலாக மாறியுள்ளது.
6 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க உத்தரவு!
சைபர் தாக்குதல் சம்பவங்கள் கண்டறியப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் CERT-In அமைப்புக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் DAKSH இணையதளம் மூலமாகவும் ஆறு மணி நேரத்திற்குள் தகவல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் நடத்தப்படும் சைபர் தாக்குதல்களைத் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
