Madras Murasu

கப்பல் மோதல்களை முன்கூட்டியே தடுக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

கடலில் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI), மெய்நிகர் யதார்த்தம் (VR) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தானியங்கி கப்பல் வழிசெலுத்தல் முறையை உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கடலில் பயணிக்கும் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்த்து, வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது பயணப் பாதையைத் தாங்களாகவே தீர்மானித்துக் கொள்ளும் நவீன தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் கடல்சார் பொறியியல் துறை (Department of Ocean Engineering) சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பத்திற்கு ‘SEANAV’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நிகழ்நேர டிஜிட்டல் இரட்டைத் தொழில்நுட்ப (Digital Twin) அடிப்படையில் செயல்படும் தளமாகும்.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் உண்மையான கடல் சூழலைப் போன்ற மெய்நிகர் கடல் உருவாக்கப்படுகிறது. அதில் தானியங்கி கப்பல்களின் செயல்பாடுகளைச் சோதிக்கவும், பயிற்சி அளிக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும்.

கடலில் ஏற்படும் உயரமான அலைகள், புயல் உள்ளிட்ட கடுமையான வானிலை மாற்றங்களையும் இந்த மெய்நிகர் தளத்தில் உருவாக்க முடியும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் பயணிப்பதற்கான பாதையைத் தீர்மானிக்கவும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பாதையில் தொடர்ந்து செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பரபரப்பான கடல் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் பல கப்பல்கள் எவ்வாறு பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்பதையும் இந்தத் தொழில்நுட்பம் மூலம் சோதிக்க முடியும்.

கடல்சார் பணியாளர்களுக்கு மெய்நிகர் யதார்த்த (VR) தொழில்நுட்பம் மூலம் பயிற்சி அளிக்கும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

கப்பல் போக்குவரத்தில் புதிய மாற்றம்!

இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஆயிரக்கணக்கான மணிநேர மெய்நிகர் சோதனைகளை மேற்கொள்ள முடியும். இதனால் சோதனைச் செலவுகள் குறைவதுடன், கடல் போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகரிக்கும். எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த கப்பல் போக்குவரத்துக்கும் உதவியாக இருக்கும்.

இந்த ஆய்வு, அமெரிக்க இயந்திரப் பொறியாளர்கள் சங்கத்தின் (ASME) Journal of Offshore Mechanics and Arctic Engineering என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டு கனடாவின் வான்கூவரிலும், 2026-ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவிலும் நடைபெற்ற ASME OMAE மாநாடுகளிலும் இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கட்டுரை: https://doi.org/10.1115/1.4070802

Scroll to Top