Madras Murasu

நவீன எரிவாயு தகன மேடை கேட்டு சேலத்தில் கவுன்சிலர் ஆவேசம்

”சேலத்தில் நவீன எரிவாயு தகனமேடை பயன்பாட்டிற்கு வரவில்லையெனில், என்னையே ஆயுதமாக்கிப் போராடி அதை மக்கள் பயன்பாட்டிற்கு எடுத்து வருவேன்!’’ என்று சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் ஈசன் இளங்கோ ஆவேசமாக பேசினார்.  அவரது ஆவேச பேச்சு சிறிது நேரம் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி 34-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்குச் சில முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் முன்வைத்துள்ள 3 முக்கியக் கோரிக்கைகள்:

1. திருநங்கைகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்!
* ஜனநாயகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் சம உரிமையும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும். அந்த வகையில், சமூகத்தில் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் திருநங்கைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
* உள்ளாட்சி அமைப்புகளில் திருநங்கைகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது உரிய இடஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே இதற்கான நடவடிக்கைகளைச் சேலம் மாநகராட்சி வாயிலாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
“திருநங்கைகளுக்கு இரக்கம் மட்டுமல்ல, உரிமையும் வேண்டும்! உதவி மட்டுமல்ல, அதிகாரத்தில் பங்கும் வேண்டும்!”

2. நவீன எரிவாயு தகனமேடையை உடனடியாகத் திறக்க வேண்டும்!
* சேலம் மாநகராட்சி 34-வது கோட்டத்தில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
* இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மாமன்றத் தீர்மானத்தின்படி (கோப்பு எண்: E3/1431/2026, தீர்மான எண்: 1276/2025-2026, நாள்: 05.03.2026), ‘ஆத்மா அறக்கட்டளை’யிடம் மயான நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்து, தகனமேடையை உடனே இயக்க வேண்டும்.
* மக்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வசதி முடங்கிக் கிடப்பது தனக்குக் கடும் மன உளைச்சலைத் தருவதாகத் தெரிவித்த அவர்:
“குறிப்பிட்ட காலத்திற்குள் இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மக்கள் பிரதிநிதியான நான் என்னையே ஆயுதமாக்கிப் போராடி, அந்த நவீன தகன மேடையைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவேன்!” என எச்சரித்துள்ளார்.

3. “எனது குப்பை – எனது பொறுப்பு” இயக்கத்தில் உயர் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்!

* 34-வது கோட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் “எனது குப்பை – எனது பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கத்தின் 105 நிகழ்வுகள் நடத்தி உள்ளேன் இனி வரும் நிகழ்வுகளில் மாநகராட்சி உயர் அலுவலர்கள் நேரடியாகப் பங்கேற்க வேண்டும்.
* களத்திற்கு வரும் அதிகாரிகள், தூய்மை விழிப்புணர்வுடன் சேர்த்து பொதுமக்களின் குடிநீர், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி தொடர்பான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
*
“தூய்மை என்பது விழிப்புணர்வுடன் முடிந்துவிடக் கூடாது; மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்போதுதான் அதன் முழு நோக்கமும் நிறைவேறும்!”
மேற்கண்ட மூன்று முக்கியக் கோரிக்கைகளையும் சேலம் மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ வலியுறுத்தியுள்ளார்.

ஈசன் இளங்கோ,
மாமன்ற உறுப்பினர் ,
34-வது கோட்டம்
சேலம் மாநகராட்சி.
நாள்: 23.10.2026
இடம்: சேலம்.

Scroll to Top