Madras Murasu

ஆபாச குறுஞ் செய்தி ; த.வெ.க எம்.எல்.ஏ மீது காவல்துறையில் மாவட்ட கலெக்டர் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் புகாரில், த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் முறைப்படி புகார் அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியருக்கு முறையற்ற வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், அவரது இல்லத்திற்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளை மிரட்டியதாகவும் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில், தமிழக பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை புகாரைப் பதிவு செய்துள்ளதாகவும் நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான விசாரணை

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், எம்.எல்.ஏ மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மாவட்ட ஆட்சியரிடமிருந்தோ தலைமைச் செயலாளரிடமிருந்தோ புகார் எதுவும் வரவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி வி. லட்சுமிநாராயணன், ஊடகச் செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு திடீர் திருப்பம்!

நீதிமன்றத்தில் புகார் வரவில்லை என அரசு தரப்பு தெரிவித்த அதே நாளில், திங்கட்கிழமை பிற்பகலில் மாவட்ட ஆட்சியர் நேரடியாகக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

மேலும், பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் எழுந்துள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ளும் விசாரணையை ஐ.ஜி. நிலையிலான அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என்றும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் எச்சரித்தார்.

முக்கியமாக, நவம்பர் 27-ஆம் தேதி விசாரணையின் முன்னேற்ற அறிக்கையையும், டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் இறுதி விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Scroll to Top