ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’.
எழுத்தாளர் இரா.முருகனின் மறைவு குறித்து கமல் :
அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.
அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன்.
‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான்.
நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்”
சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை.
சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல.
அன்புடன்,
முருகனின் நண்பன், தமிழின் காதலன்
கமல்ஹாசன்
