தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்காக, தனியாக உயர்கல்வி ஆள்சேர்ப்பு வாரியம் (Higher Education Recruitment Board – HERB) அமைக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் (TRB) உள்ளது. இந்த வாரியம் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், உயர்கல்வித் துறைக்குத் தேவையான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு தனி அமைப்பு அவசியம் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், தனி ஆள்சேர்ப்பு அமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட சுமார் 2,700 ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 6,000 காலிப் பணியிடங்களைத் தாங்களே நிரப்பும் வகையில் HERB என்ற தனி அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத் தேர்வு முறையில் மாற்றம் தேவை!
இதற்கிடையே, பல்கலைக்கழகத் தேர்வு முறைகளிலும் அடிப்படை மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதற்குப் பதிலாக, சிந்திக்கும் திறன், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன் மற்றும் கற்ற அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக உயர் சிந்தனைத் திறன் (Higher Order Thinking Skills – HOTS) அடிப்படையிலான தேர்வு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
அரசுக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகள், புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் எதிர்காலத் திறன்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அரசுக் கல்லூரிகளில் வேலைவாய்ப்புப் பயிற்சிக்கு முக்கியத்துவம்!
அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த நடைமுறைப் பயிற்சி, இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கல்லூரி முதல்வர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்டமளிப்பு விழாக்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!
உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களை முறையாகவும் கண்ணியமாகவும் நடத்துவதற்கான நிலையான செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பட்டமளிப்பு விழாக்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஊர்வலம், மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வரையறைகளை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
