Madras Murasu

கொள்கைக் குன்று ஆ.கோபண்ணா

கொள்கைக் குன்று ஆ.கோபண்ணா
காங்கிரஸ் என்றே இலங்கும்
காங்கிரஸ் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆ.கோபண்ணாவின் உதடுகள்
வேறெந்த நாமத்தையும்
ஜெபிப்பதில்லை.
காங்கிரஸ்
காங்கிரஸ்
காங்கிரஸ்தான்.
வேறெதும் என்றால், அது
காந்தி, நேரு, காமராஜ், இந்திரா காந்தி,
ராஜிவ் காந்தி, சோனியா காந்தி –
இவர்களைக் குறித்துத்தான்.
இப்போது ராகுல்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் –
முழுநேர அர்ப்பணிப்பு உணர்வுடன் –
எவரின் குழு மனப்பான்மைக்கும்
அகப்படாமல்
( காங்கிரஸ் என்பதால் இதைச்
சொல்லித்தானே ஆகவேண்டும் 😄) நாள்பொழுதையெல்லாம் –
வீட்டுக்கும் சத்யமூர்த்தி பவனுக்குமான காலவெளியாகத் தகவமைத்துக்கொண்ட
அவரின் வாழ்க்கையை நான்
வியப்போடு அருகிருந்து
பார்த்திருக்கிறேன்.
ஈவிகே.சம்பத், கண்ணதாசன்,
ஜெயகாந்தன் மூவரும்தான் –
காங்கிரஸ் குடும்பத்திலிருந்து
வந்த இவரைத் தம் சொற்பொழிவுகளால் –
கருத்துப் பொழிவுகளால்
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே
கட்டிப்போட்ட
பெருமைக்குரியவர்கள்.
இலக்குவனக் கோடைக்
கடக்க முற்படாத சீதையைப் போல –
அந்தப் பேரியக்கத்தின் சித்தாந்தத்தில்
கட்டுண்டுக் கிடந்தவரை –
“சட்டம் படித்துவிட்டு,
கறுப்பு அங்கியை மாட்டிக்கொண்டு,
நீதிமன்றத்துக்குப் போய் வாதிட்டு,
கைநிறைய பணமள்ளிக்கொண்டு வா”
என்றால்,
“இதோ…” என்று
கிளம்பிவிடுவாரா என்ன?
படித்த சட்டத்தை உதறிவிட்டு,
காங்கிரஸ் அலுவலகத்துக்குக்
கிளம்பிவிட்டவரைத் தடுக்க.
பெற்றோராலும் சரி,
கட்டிய மனைவியாலும் சரி,
இன்றுவரை ஏலவில்லை.
மூப்பனாரிடம் ஜெயகாந்தன்
ஒருமுறை சொன்னார் :
“கோபண்ணா இருப்பதாலேயே
எனக்கு காங்கிரஸின் மேல்
காதல் மிகுகிறது!”
நாட்டின் தலைவிதி காங்கிரஸ் –
நாட்டின் நற்பேறு காங்கிரஸ் –
நாட்டின் எதிர்காலம் காங்கிரஸ்
என்பதில்
மாளாத நம்பிக்கை கொண்டவராக
கோபண்ணா இருக்கிறார்.
ஒருமுறை தாளாமல் கேட்டுவிட்டேன் :
“ஸார், உங்கள் அர்ப்பணத்துக்கு
உரிய அங்கீகாரத்தைக்
காங்கிரஸ் வழங்கியிருக்கிறதா?”
ஏதோ சுடுசொல் கேட்டுவிட்டவரைப்
போல் நொந்தார்.
பிற்பாடு சொன்னார் :
“காங்கிரஸில்
நான் தொண்டாற்றுவதே
எனக்கான அங்கீகாரம்தான் ரதன் !”.
பெருந்தலைவர் காமராஜரின் வரலாறு,
மாமனிதர் நேருவின் மகத்தான
புகைப்பட வரலாறு என்று –
இருபெரும் காங்கிரஸ் காப்பியங்களைப் படைத்திருக்கும் கோபண்ணா – ‘சேது சமுத்திரத் திட்டம் ஏன் எதற்காக?’; ‘கொடியின் கதை’; ‘பெரியாரும் பெருந்தலைவரும்’; ‘காந்தியைக் கொன்ற கொடியவர்கள்’: ‘மதச்சார்பின்மை ஏன் எதற்காக?’; ‘இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்-உண்மை நிலை என்ன?’; ‘ஏன் வேண்டும் அணு மின்சாரம்?’; ‘Modi, a mistake’ ; சாதனைகளின் சிகரம் அன்னை சோனியா’; ‘வெல்லட்டும் காங்கிரஸ்’; ‘திராவிட இயக்கங்களும் காமராஜரும்’; ‘பெருந்தலைவர் பேசுகிறார்’; ‘காங்கிரஸ் கொள்கை முழக்கம்’…
இப்படி சிறுசிறு நூல்களாக, சின்னஞ்சிறுப் பிரசுரங்களாக வெளியிட்டிருக்கும்
நூற்றுக்கணக்கான புத்தகங்கள்
அனைத்தும் – எப்போதும் –
காங்கிரஸ் கட்சியைப் பறைசாற்றித்
துலங்கும் ஆவணங்கள்.
இவற்றை அலமாரியில் வைத்திருந்தாலே,
எந்தவொரு காங்கிரசுக்காரரும்
எந்தவொரு எதிர் அஸ்திரத்தையும்
எதிர்கொண்டு பொருதிவிடலாம்.
இப்போது இந்திரா காந்தி என்னும்
பேராளுமையைத் தமிழில்
புத்தகமாக வடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து ராஜீவைப் படைப்பதற்குக்
குறிப்புகளைக்
கோத்துக் கொண்டிருக்கிறார்.
அத்தனை கருத்துப் பேழைகளை
அந்த இயக்கத்துக்காக செதுக்கியிருக்கிற திரு.கோபண்ணா அவர்கள்,
‘காங்கிரஸ் சித்தாந்தத்தின்
தமிழ்நாட்டு அத்தாரிட்டி ‘
என்பது என்
ஆணித்தரமான முடிபு.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக
அவர் பிரசுரித்து வெளியிட்டுவரும்
‘தேசிய முரசு’ வார இருமுறை இதழ்
தமிழ்ச் சமூக வெளிக்கு வழங்கியிருக்கும்
அரசியல் கருத்துகள் –
காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமன்றி,
இந்திய மக்கள் சமூகத்துக்கானதுமாகும்.
அந்தக் கடமையை அவர்
உணர்ந்திருப்பதால்தான் –
அவர் மனம்
அங்கீகாரத்துக்கு ஏங்குவது இல்லை.
பதவிகளுக்கு முண்டியடிப்பது இல்லை.
பதவியிலிருப்பவர்களுக்குக்
கொடி பிடிப்பதும் இல்லை.
இன்று 01.09.2026
அவர் பிறந்தநாள்
உணர்ச்சிவயத்தால்
பதிவு சற்றே நீண்டுவிட்டது .
நான் நேருவை நேசிப்பதனாலேயே
என்னை நேசிக்கும்
கோபண்ணா அவர்களுக்கு
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
முதுமையைத் தொட்டுவிட்ட
இந்த இளைஞர் இன்னமும் –
காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் –
அதன் விழைவான நேரிய மக்கள் சமூகத்துக்கும் கருத்துக் கொடைகளை
வழங்கிக் கொண்டிருப்பார்.
Rathan Chandrasekar (பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர்)
Scroll to Top