Madras Murasu

யானைத் தொழில்..! நீங்களும் புத்திசாலித்தானே..?

நான் பிறந்து வளர்ந்த சாத்தான்குளத்தில் சுமார் 2000-க்கும் அதிகமான பொற்கொல்லர்கள் இருந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் இருந்தன. நகைப்பட்டறைகளில் தெரிக்கிற தங்கத்துகள்களை பட்டறைச் சிறுவர்களிடம் விலைக்கு வாங்குகிற சில்வான வணிகர்கள் இருந்தார்கள். இப்படியான உதிரி தங்கப்பிசிறுகளை ஒன்றாகச் சேர்த்து உருக்கும் சிறுசிறு குகைகள் ஒரு கட்டத்தில் உடைந்து போகும் அதை நுணுக்கி உருக்கி அதில் ஒட்டியிருக்கும் தங்கத்தை எடுக்கிறவர்கள்; தங்கத்தின் தரத்தை உரசிப்பார்க்கும் உரைகல்லில் சேகரமான தங்கப்பொடிகளை உருக்கி எடுப்பவர்கள்; நகை செய்தபின் அதை பாலீஷ் செய்ய நூலினால் செய்யப்பட்ட ரம்பத்தைப் போட்டு துடைப்பார்கள்.
அந்த நூலில் சிறிதளவு தங்கத்துகள்கள் இருக்கும் அதை உருக்கி தங்கத்தைச் சேகரிக்கிறவர்கள்; இரவில் நகைக்கடை பஜாரின் சாலைகளை சிறிய பிரஷ்களால் கூட்டிப் பெருக்கி அந்த மணலை நீர் விட்டு சலித்து கிடைக்கும் தங்கத்துகளை புளிபோட்டு ஒற்றியெடுப்பவர்கள்; 16, 18, 20 என பல்வேறு கேரட் தரத்தில் இருக்கும் தங்கத்தையெல்லாம் ஒன்றாக உருக்கி நகை செய்வதற்கு உரிய 22 கேரட் தங்கமாக மாற்றும் மூஸூ போடுதல் என்றழைக்கப்படும் தொழிலில் ஈடுபட்டவர்கள்; பொற்கொல்லர்கள் வீட்டுச்சாக்கடையை வழித்து அதை அலசியலசி தங்கத்துகள் எடுப்பவர்களென தங்கத் தொழிலையொட்டி ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்ந்துவந்தனர்.
நாங்கள் தெக்கத்தி மனிதர்கள். நான்கைந்து நாட்களுக்கு முன்பு கடலில் பிடித்து ஐஸ் போட்டு கொண்டு வரும் மீனைக் கண்ணால் காண்பதே பாவமெனக் கருதுகிறவர்கள். எங்கள் ஊரைச் சுற்றியுள்ள உவரி, பெரியதாழை, மணப்பாடு, கூடுதாழை போன்ற கடற்புரங்களில் இருந்து அப்போதுதான் பிடித்த ஃபிரெஷ்ஷான மீன்கள் எங்கள் மீன்சந்தைக்கு வரும். பலவிதமான கடல் உயிரினங்களை ஒரே இடத்தில் பார்க்கலாம் என்பதால் அப்பாவோடு மீன் கடைக்குப் போக நச்சரிப்போம். ‘டேய் இரிடா… இப்பத்தாம்டா மீன் வந்து இறங்கி இருக்கும்… ஆசாரிமாரெல்லாம் வாங்கினதுக்கப்புறம்தான்டா மீன்காரன் நம்ம முகத்தையே பார்ப்பான்… இப்போ போய் நின்னோம்னா எட்டு பங்கு விலை சொல்லுவான்’ என்பார்.
விலை உயர்ந்த மீன் ரகங்களை கேட்ட பணத்தை வீசியெறிந்து பொற்கொல்லர்கள் வாங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். டேய் நடுமீனெல்லாம் ஆசாரிமாருக்கத்தான். தலையும் வாலும் சின்னச்சின்ன மீன்களும்தான் நமக்கு கிடைக்கும் என்பார். ஞாயிற்றுக் கிழமை ஆட்டுக்கறிக் கடைகளிலும் அக்காலத்தில் இதுதான் நிலைமை. அவர்களுக்குத் தூய கறி கொடுத்தது போக, எலும்பும் சக்கையும்தான் பிறருக்கு எஞ்சும். அந்த அளவுக்கு பொற்கொல்லர்களின் பொருளாதாரம் உச்சத்தில் இருந்தது.
நாமளும் எப்பப்பா பெரிய சீலா மீனை வீட்டுக்கு வாங்கிட்டு வந்து சமைப்போம் என ஒருநாள் கேட்டேவிட்டேன். அப்பா ஒரு கணம் என்னைப் பார்த்தார் ‘மகனே யானை சாணம் போடும்; எலி புழுக்கைதான் போடும்’ நீ பெரிதாகச் சம்பாதிக்க வேண்டுமானால் யானைத் தொழில்களைச் செய்யவேண்டும். தங்கம் ஒரு யானைத் தொழில்’ என்றார்.
உண்மைதான். என்னுடைய பெரியப்பா தங்கக் கட்டுப்பாடு இருந்த காலத்திலேயே கோல்டு பிஸ்கட் வணிகம் செய்தவர். ஒன்றுவிட்ட அண்ணன் இயந்திர நகை உற்பத்தி யுகத்துக்கு முன்னரே பிஸினஸ் டூ பிஸினஸாக ரெடிமேட் நகை தொழில் செய்துவந்தார். இன்னொரு அண்ணாச்சி, வங்கியில் அடமான நகைகளை ஏலம் எடுத்து பாலீஷ் செய்து மறுவிலைக்கு விற்பவர். இன்னொரு அண்ணாச்சி சில்வான தங்கம் எடுப்பவர். அவர்கள் எல்லோருமே செழிப்பாக இருந்தார்கள். குடிசைத்தொழிலாகத் தீப்பெட்டி தயாரித்து வந்த நாங்கள் கீழ் நடுத்தர வாழ்க்கையே வாழ்ந்தோம். என்னை எப்படியாவது தங்கத்தொழிலுக்குள் புகுத்திவிட வேண்டுமென்பதற்காக அப்பா என்னை கோடை விடுமுறைகளில் நகைக்கடைகளில் வேலைக்கு விடுவார். நான் அங்கும் கடையில் அமர்ந்து புத்தகங்கள் வாசித்துக்கொண்டிருப்பேன். எந்த முதலாளி பொறுத்துக்கொள்வார். கல்லாவிலிருந்து பத்து ரூபாயை எடுத்து வீசி நாளையிலிருந்து வராதே என்பார்கள். நல்ல வேளையாக தங்கத்துக்கு இணையான தமிழ் என்னிடம் இருந்ததால் பிழைத்து வந்துவிட்டேன்.
இந்த நெடுங்கதையை இந்தச் சபையிலே சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தன்னைத் தொட்டவனை தமிழும் தங்கமும் ஒருபோதும் கைவிட்டதில்லை. தங்கத்தொழிலுக்குள் நுழைந்திருக்கும் GoldCart தொழிலும் சிறக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இதன் Founders-களை வாழ்த்துகிறேன்.
தங்கம்தான் என்றில்லை. தங்கத்தோடு தொடர்புடைய எதைச் செய்தாலும் வாழ்க்கையில் உச்சத்துக்குப் போய்விடலாம். 1848-ல் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மகாணத்தில் தங்கம் அதிகளவு கண்டுபிடிக்கப்பட்டபோது உலகெங்கிலுமிருந்து வணிகர்கள் தங்கத்தைத் தேடி கலிஃபோர்னியாவுக்குப் படையெடுத்தார்கள். இதைத்தான் ‘கலிஃபோர்னியா கோல்டுரஷ்’ என்பார்கள். அப்படி வந்த தொழிலாளர்கள் தங்கச்சுரங்கத்தில் மிகக்கடினமான வேலைகளைப் பார்க்க வேண்டியிருந்தது. அவர்கள் வழக்கமாக அணியும் ஆடைகளால் அந்தக் கடினமான சூழலைத் தாங்க முடியவில்லை. எளிதில் கிழிந்து தொங்க ஆரம்பித்தது. 1853-ல் ஒரு ஜெர்மனி துணி வியாபாரி சான்பிரான்சிஸ்கோ பகுதி தங்கச்சுரங்களுக்குத் தார்ப்பாய், கொட்டகைத் துணி உள்ளிட்டவற்றை சப்ளை செய்ய வந்தார். தொழிலாளர்களின் ஆடைகள் கிழியும் பிரச்னையைக் கண்டார்.
பிரான்சில் கிடைக்கிற டெனாய் என்கிற நீல நிற கடினமான துணியில் அவர்களுக்கு பேண்ட் தைத்துகொடுத்தால் கிழியாமல் இருக்கும் என முடிவெடுத்தார். அவரது டெய்லர் நண்பர் இன்னொரு யோசனையும் சொல்கிறார். அடிக்கடி மடங்குகிற பகுதிகளில் காப்பர் ரிவீட் அடித்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார். அந்த ஜெர்மன் வியாபாரி பெயர் Levi Strauss. அதுதான் ஜீன்ஸ். உலகப்புகழ் பெற்ற லீவைஸ் ஜீன்ஸ் 501 மாடல் இப்படித்தான் உருவானது. பிறகு உலகமே ஜீன்ஸ் பேண்டுகளை வெறித்தனமாக வாங்கி அணிய ஆரம்பித்தது. பாருங்கள் இந்த சபையிலேயே இத்தனை பேர் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கிறீர்கள். நண்பர்களே லீவைஸ் ஆண்டொன்றுக்கு 78,000 கோடி வர்த்தகம் செய்கிறது. தன்னைத் தொட்டவனைத் துலங்க வைக்கும் ஆற்றல் தங்கத்துக்கு உண்டு.
தமிழ்ப் பண்பாட்டில் பிறப்பு முதல் இறுதிவரை ஒவ்வொரு தருணத்திலும் தங்கத்தின் இடம் தவிர்க்க முடியாதது. எங்களூரில் இன்றும் பிறந்த குழந்தைக்கு, ஊரிலேயே வீரமான பெண்ணைத் தேர்ந்தெடுத்து தங்க மோதிரத்தால் தேனைத்தொட்டு சேனை கொடுப்பார்கள். பெயர் சூட்டுகையில் மோதிரம், செயின் போடுகிறார்கள். மொட்டையடித்து காது குத்துவார்கள். பூப்படைகையில் நகை சூட்டுகிறார்கள். திருமணத்தின்போது அவளது வாழ்வாதாரத்துக்கு நகைபோட்டு அனுப்புகிறார்கள். மாப்பிள்ளைக்கு நெற்றிப்பட்டம், தாய்மாமனுக்கு மச்சினனுக்கு மோதிரம் போடுகிறார்கள். அரக்கு மெழுகில் தங்கம் சேர்த்து சீமந்த வளையல் அணிவிக்கிறார்கள். தாய் மறைந்த பிறகு அவளது தாலியை கொள்ளியிட்ட தலைச்சன் மகனுக்குக் கொடுக்கிறார்கள்.
நம்முடைய பண்பாட்டில் புழங்குகிற வார்த்தைகளைக் கவனியுங்கள். உயர்ந்த மனிதனைத் தங்கமான மனுஷன் என்கிறோம். ‘பத்து மாற்றுப் பொன் னொத்தநின் மேனியும்’ என காதலியின் மேனி பத்தரை மாற்றுத் தங்கம் என்கிறான் பாரதி. நேரத்தின் அருமையை காலம் பொன் போன்றது என்கிறோம். முப்போகம் விளையும் நிலத்தை பொன்னு விளையற பூமி என்கிறோம். பெற்ற பிள்ளையை தங்கக்குட்டி எனக் கொஞ்சி மகிழ்கிறோம். உயர்ந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் நாம் ஏன் பொன்னுக்கு நிகராக வைக்கிறோம்? தங்கம் துரு பிடிப்பதில்லை. எத்தனை ஆண்டுகள் தண்ணீருக்குள் கிடந்தாலும், பல நூற்றாண்டுகள் மண் மூடிக் கிடந்தாலும் அதன் பொலிவு கெடுவதில்லை. நெருப்பில் சுட்டாலும், சம்மட்டியால் அடித்தாலும், உரலிட்டு இடித்தாலும் அதன் குணம் மாறுவதில்லை. எந்நாட்டிலும் எக்காலத்திலும் அதன் மதிப்பு குறைவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பூமியில் எவ்வளவு தங்கம் இயற்கையாக உள்ளதோ அவ்வளவுதான் தங்கம். எத்தனை முயற்சித்தாலும் அசலான தங்கத்தை செயற்கையாக உருவாக்கிட முடியாது.
என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நான் இரண்டு விதமான பொருளாதார யோசனைகளை ஏற்றுக்கொள்வதில்லை. வீடு வாங்காதீர்கள். அந்தப் பணத்தை ம்யூச்சுவல் ஃபண்டில் போட்டால் எங்கேயோ போய்விடலாம் என்பார்கள். அப்படிச் சொல்பவர்கள் யாரென பார்த்தால் குறைந்தது இரண்டு சொந்த வீடு வைத்திருப்பார்கள். இன்னொன்று தங்கம் வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல என்று சொல்பவர்கள். அப்படிச் சொல்லும் நிதி ஆலோசகர்கள் இல்லத் திருமணவிழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். தங்கள் பிள்ளைகளுக்கு நூறு பவுன் நகை போட்டு கல்யாணம் நடத்துவார்கள்.
தங்கத்தின் விலை எதிர்காலத்தில் குறைந்துவிடும் எனும் ஆருடத்தை எனது நான்கு வயதிலிருந்து கேட்டு வருகிறேன். இப்போது எனக்கு நாற்பத்து நான்கு வயதாகிறது. யாரும் வாங்குவதை நிறுத்தவில்லை. சொல்கிறவர்களும் நிறுத்தவில்லை.
சுரங்கத்தில் ஒரு டன் தாதுவை வெட்டி எடுத்து அரைத்துச் சலித்தால் பத்து கிராம் தங்கம் கிடைக்கிறது. அதற்கு ஆகும் எரிசக்தி உயர்ந்துகொண்டே போகிறது. இன்னொருபுறம் உலகின் தங்கத்தாது வளம் குறைந்துகொண்டே போகிறது. வெட்டியெடுக்கப்படும் தங்கத்தில் 20% எலெக்டிரானிக்ஸ் மற்றும் டெக்னாலஜி கருவிகளுக்குத் தேவைப்படுகிறது. 10% தங்கம் மருத்துவக்கருவிகளுக்குத் தேவைப்படுகிறது. விண்வெளி ஆய்வுக்கும் தங்கம் ஓர் அத்தியாவசிய அடிப்படைப் பொருள். உலகப் பொருளாதாரத்தின் இன்னமும் செல்லுபடியாகிற மாற்றுக் கரன்சியாக தங்கம்தான் நீடிக்கிறது. உலகப்பெரும் வங்கிகளெல்லாம் டன் கணக்கில் தங்கத்தை வைத்திருக்கின்றன. பணம் என்பதே கையிருப்பு தங்கத்துக்கான பதிலீடு மாற்று என்பதாகத்தான் இருக்கிறது.
மறுபக்கம் உலக அரசியலைக் கவனித்தால், மானுட வரலாற்றிலேயே திரும்புகிற திசையெல்லாம் சர்வாதிகாரிகளால் உலகம் ஆளப்படுகிறது. முதலாளித்துவமும் ஆயுதப்பெருக்கமும் போர்களையும் ஆக்கிரமிப்புகளையும் தீவிரப்படுத்துகிறது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் போரும் உள்நாட்டுக்கலவரமும் நடந்துகொண்டிருக்கிறது. என்னுடைய அடிப்படை அறிவுக்கு எட்டியவரை தங்கத்தின் விலை குறையுமெனத் தோன்றவில்லை.
தங்கம் ஒரு சிறந்த முதலீடா, வட்டிக்கணக்குப் பார்த்தால் குட்டி போடுமா என்றெல்லாம் எனக்குத் தெளிவில்லை. ஆனால், வாழ்வின் உக்கிரமான தருணங்களில் தங்கத்தைப் போல உடன் நிற்பது எதுவுமில்லை. இந்தியப் பெருங்கடலிலே சுனாமி வந்தது. விளைவாக பல நாடுகள் உருக்குலைந்தன. அதில் இந்தோனேஷியாவும் தாய்லாந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்கு சேமிக்கும் வழக்கம் இல்லை. வங்கிக்கணக்கு கிடையாது. ஆனால், அவர்களுக்குத் தங்க நகைகள் மீது கடுமையான மோகம். தங்களது கையிலிருந்த தங்கத்தை உடனடியாக விற்று தங்கள் வாழ்வாதாரத்தை வெகு சீக்கிரத்தில் மீட்டுக்கொண்டார்கள்.
விடுதலை வேள்விக்குத் தேசத்தைத் தயார் செய்ய பல்வேறு சேவைகளில் ஈடுபட்ட காந்தி 1934-ல் கஸ்தூரிபா நிதி ஹரிஜன நிதியை திரட்ட தமிழ்நாடு வந்தார். மதுரை, சென்னை, திருநெல்வேலி, கோவை என ஆயிரக்கணக்கில் திரண்ட பெண்கள் தாங்கள் அணிந்திருந்த கம்மல், வளையல், மோதிரம், மூக்குத்தியை கழட்டிக்கொடுத்தார்கள். கேரளாவில் காந்தி ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த 16 வயதுப் பெண் (கெளமுதி டீச்சர்) தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழட்டிக்கொடுத்துவிட்டு இனி வாழ்நாளில் எந்த நகையும் அணியப்போவதில்லை என சூலுரைத்தார். இன்றைய சுதந்திரத்தில் நமது முன்னோர்களின் கண்ணீர், வியர்வை, ரத்தம் மட்டும் அல்ல. நமது பூட்டிமார்கள் கழட்டிக்கொடுத்த தங்கமும் இருக்கிறது.
இரண்டாம் உலகப்போரில் யூத இன அழிப்பு கொலைக்களத்தில் தன்னிடம் இருக்கும் அத்தனை ஆற்றலையும் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றுகிற ஷிண்ட்லருக்கு அவரால் காப்பாற்றப்பட்டவர் தன்னுடைய நன்றியை தெரிவிக்கும்பொருட்டு தனது தங்கப்பல்லை உடைத்தெடுத்து ஆபரணமாக்கி பரிசளிப்பார். அத்தனை உணர்ச்சிகரமான காட்சி அது.
உஸ்பெஸ்கிஸ்தானின் புகாரா நகர் மையத்தில் முல்லா நஸ்ரூதினுக்கு ஒரு சிலை இருக்கிறது. குளத்தை நோக்கி ஒரு தங்க நாணயத்தை நீட்டிக்கொண்டிருப்பார். டூரிஸ்டு கைடுகள் அதனையொட்டி ஒரு நாட்டாரியல் கதை சொல்வார்கள். நீச்சல் தெரியாத ஒரு கஞ்சப்பயல் தண்ணீருக்குள் விழுந்துவிடுவான். ஊரார் பதறி தங்கள் கைகளை நீட்டி ‘கையைக் கொடு கையக்கொடு’ என்றார்களாம். எதையுமே கொடுத்துப் பழகியிராத கஞ்சன் நீரில் மூழ்கிக்கொண்டிருந்தானாம். முல்லா ஒரேயொரு தங்க நாணயத்தை நீட்டியதும் அதைப் பற்றிக்கொள்ள நீரிலிருந்து துள்ளிப்பாய்ந்து எழுந்தானாம் அந்தக் கஞ்சன். இந்தக் கதையை நம்மூரில் இருக்கும் ஒரு வணிக இனத்தவரைக் குறிக்கும் வகையில் திரித்துச்சொல்பவர்களும் உண்டு.
நண்பர்களே, தங்கம் எவ்வகையில் கிடைத்தாலும் பாய்ந்து பற்றிக்கொள்ளுவதே புத்திசாலித்தனமென தோன்றுகிறது. நன்றி, வணக்கம்.
( Selventhiran – 31-08-2026 அன்று சென்னையில் நடந்த GoldCart அறிமுகவிழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)
Scroll to Top