அக்னி என்ற பெயரில் முகநூலில் அறிமுகமானவர் தம்பி பிரேம்குமார். இவர், தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துப் புத்தகக் கண்காட்சிகளுக்கும் சென்று, அங்குள்ள நிறை குறைகளை மீம்ஸ் மூலமாக நகைச்சுவை உணர்வுடன் பொதுவெளியில் பகிர்ந்து வருபவர்; தமிழ் இலக்கியத்தின் மீது தீராத பேரார்வம் கொண்டவர். மறைந்துபோன இலக்கியப் பதிவுகளையும், புதைந்துபோன தமிழ் இலக்கிய வரலாறுகளையும் மீட்டெடுப்பதில் தம்பி பிரேம்குமார் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறார்.
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போதும் வாசிக்க வேண்டிய நல்ல நூல்களை அறிமுகம் செய்வது இவரது மகத்தான பணி. சமீபத்தில் நண்பர்களோடு இணைந்து இவர் தொகுத்து வெளியிட்ட தமிழ் இலக்கிய நூல்களின் பட்டியல், வாசகர்கள் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தத் தமிழ்ப்பணியின் தொடர்ச்சியாக, தம்பி பிரேம்குமார் தற்போது எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் நேர்காணல்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து, ‘எழுத்துக்கு அஞ்சும் சமூகம்’ என்ற தலைப்பில் நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்.
இதனைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல், தற்போது நடைபெற்று வரும் கோவை புத்தகக் கண்காட்சியில், வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19-ஆம் தேதி) காலச்சுவடு அரங்கில் வெளியிடப்பட உள்ளது.
இக்காலத்தில் இளைஞர்களில், பெரும்பாலானோர் சினிமா நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்யவும், முதல்நாள் முதல்காட்சியைப் (FDFS) பார்க்கவும் முண்டியடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால், அவற்றுக்கு மத்தியில் தம்பி பிரேம்குமார், இஸ்க்ரா போன்ற பல இளைஞர்கள் இந்தச் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். இவர்கள் நம் மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு தொடர் சங்கிலியாக இணைந்து செயலாற்றி வருகிறார்கள்.
தம்பி பிரேம்குமார் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் தங்கப் பதக்கங்களை வென்றவர். தற்போது முனைவர் பட்ட ஆய்வாளராகவும், ஆகச்சிறந்த திறனாய்வாளராகவும் விளங்கும் தமிழ் இலக்கிய மாணவர் பிரேம்குமாரின் இலக்கியப் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
-ராம் தங்கம்
