ஐஐடி மெட்ராஸ் ‘பள்ளி இணைப்புத்’ திட்டத்தின்கீழ் ஜனவரி 2027 தொகுப்புக்கான விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் தங்கள் வழக்கமான பாடத் திட்டங்களைத் தாண்டி அண்மைக்காலத் தொழில்நுட்பங்கள், பல்துறை சார்ந்த பாடங்கள், தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தியா முழுவதும் 6,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 2.25 லட்சம் மாணவ- மாணவிகள் பதிவுசெய்துள்ளனர். இத்திட்டத்தில் மேலும் பள்ளிகள் இணைவதன் மூலம் தங்கள் மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட முன்னணி கல்வி- ஆராய்ச்சி நிறுவனங்களில் கல்வி பயிலும் வாய்ப்புகளைப் பெற முடியும்.
8 வார காலத்திற்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புக்கான வகுப்புகள் ஜனவரி 11, 2027 அன்று தொடங்கும். வரும் தொகுப்புக்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 8, 2027-ஆம் தேதியுடன் நிறைவடையும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு செய்யலாம் https://code.iitm.ac.in/schoolconnect/.
பள்ளி இணைப்புக் கூட்டாண்மை, பாடத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு connect@study.iitm.ac.in -ல் தொடர்பு கொள்ளலாம். இப்பாடத் திட்டத்தில் பாடம் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500.
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். தற்போது வளர்ந்து வரும் மற்றும் பல்துறைப் படிப்புகளை உள்ளடக்கிய 20 பாடங்களை இந்தப் படிப்பு வழங்குகிறது. மாணவர்களின் பல்வேறு அறிவுத்திறன்களைக் கண்டறியவும், பிரபலமாகிவரும் தொழில்களைப் புரிந்துகொள்ளவும், தங்களது எதிர்கால கல்வி, தொழில் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்கவும் இப்படிப்பு உதவுகிறது.
மக்கள் தொடர்பகம் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் (Centre for Outreach and Digital Education- CODE) மூலம் இப்பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு தங்கள் வழக்கமான பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெறாத பாடங்கள், தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஆர்வமுள்ள படிப்புகளைக் கண்டறியவும், சிறப்புத் துறைகள் குறித்த தொடக்கநிலைப் புரிதலையும் பெற முடியும்.
இந்த முன்னோடித் திட்டத்தின் நன்மைகள் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டுமென அழைப்பு விடுத்த திட்ட ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும்போது, “இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் இக்கூட்டாண்மையில் இடம்பெற வேண்டும் என்பதே ஐஐடி மெட்ராஸ்-ன் விருப்பம், பள்ளிகளுக்கு இணைப்புக் கட்டணமோ விண்ணப்ப பதிவுக் கட்டணமோ இல்லை.
ஆர்வமுள்ள பள்ளிகள், தகவல் தொடர்புக்காக ஒரேயொரு ஆசிரியரை மட்டும் நியமித்து (Single Point of Contact SPOC), ஆன்லைன் மூலம் தங்கள விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். இக்கூட்டு முயற்சியில் இணையும் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை எளிதாக்கப்பட்டு, பாடத்திட்டம் ஒருங்கிணைக்கப்படும்” எனக்குறிப்பிட்டார்.
தரவு அறிவியலும் செயற்கை நுண்ணறிவும், மின்னணு அமைப்புகள், விண்வெளிப் பொறியியல், இணையப் பாதுகாப்பு, கட்டிடக்கலையும் தயாரிப்பு வடிவமைப்பும், தடயவியல், விளையாட்டுத் தொழில்நுட்பம், டிஜிட்டல் மனிதவியல், சூழலியல், கணிதம், பொருளாதாரம் உள்ளிட்ட 20 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இப்பாடங்களை ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரிய உறுப்பினர்களும் நிபுணர்களும் கற்பிக்கின்றனர்.
இம்முயற்சியின் வாயிலாக, பள்ளி நிலையிலேயே தரமான கல்வி அனுபவத்தைப் பெறும் வாய்ப்பை ஐஐடி மெட்ராஸ் வழங்குகிறது. இதன் மூலம் மாணவ- மாணவிகள் ஆரம்பகட்டத்திலேயே வளர்ந்துவரும் துறைகளுடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும், நிபுணர்களால் உருவாக்கப்பட்டு கற்பிக்கப்படும் பாடங்கள் மூலம் மாணவர்கள் வகுப்பறையில் கூடுதலாக கற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
