இந்தியாவில் விவசாயத்திற்கான நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) இந்தோ-பிரெஞ்சு நீரியல் அறிவியல் மைய (Indo-French Cell for Water Sciences – IFCWS) ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இதில், ‘ப்ளூ வாட்டர் பொட்டென்ஷியல்’ (Blue Water Potential) என்ற புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். விவசாயப் பகுதிகளில் நீர் வரவு, நீர் பயன்பாடு மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டு, நீர் மேலாண்மைக்கான திட்டங்களை உருவாக்க இந்தக் குறியீடு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறியீடு, நிலத்தடி நீர் மீண்டும் பூமிக்குள் சேமிக்கப்படும் அளவுக்கும், விவசாயப் பாசனத்திற்குத் தேவைப்படும் நிலத்தடி நீரின் அளவுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கணக்கிடுகிறது.
இதன் மூலம் எந்த வகையான விவசாயம் நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துகிறது, எந்த வகையான விவசாயம் நிலத்தடி நீர் சேமிப்புக்கு உதவுகிறது என்பதை அறிய முடியும்.
ஆய்வில் வெளியான முக்கியத் தகவல்கள்
ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு ராயலசீமா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாதுளை, சாத்துக்குடி, திராட்சை போன்ற நீர்ப்பாசன வசதியுடன் கூடிய நீண்டகாலப் பழத்தோட்டங்கள், ஆண்டுக்கு சுமார் 1,000 முதல் 1,200 மில்லி மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மழையை நம்பி பயிரிடப்படும் நிலக்கடலை விவசாயம் மற்றும் புல்வெளிகள் ஆண்டுக்கு 200 முதல் 300 மில்லி மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் சேமிப்புக்குப் பங்களிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வின் மற்றொரு முக்கியக் கண்டுபிடிப்பு விவசாயிகளிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகும். ஆய்வு செய்யப்பட்ட கிராமத்தில் 26 சதவீதம் உள்ள வசதிபடைத்த விவசாயிகள் பெரும்பகுதி நிலத்தடி நீரைப் பயன்படுத்துகின்றனர்.
அதேநேரத்தில், பெரும்பான்மையாக உள்ள ஏழை விவசாயிகளும் கால்நடை மேய்ப்பவர்களும் நிலத்தடி நீர் மீண்டும் சேமிக்கப்படுவதற்குப் பங்களிக்கின்றனர்.
மேலும், இந்தக் கணக்கீட்டை வெவ்வேறு விவசாயப் பகுதிகளிலும் பயன்படுத்துவதற்கான திறந்தநிலை மென்பொருளையும் ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது.
நிலத்தடி நீர் பாதுகாப்பு, விவசாயத் திட்டமிடல் மற்றும் நீடித்த நீர் மேலாண்மைக்கு இந்த ஆய்வு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆதாரம்: இந்திய அறிவியல் கழகம் (IISc), Journal of Hydrology, 2026.
