Madras Murasu

A2B-யில் நுழைந்த போதி ட்ரீ யார்..?

இந்தியாவின் பிரபலமான உணவக நிறுவனமான ஆடையார் ஆனந்த பவன் (A2B) நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை ரூ.1,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் வாங்கியுள்ள போதி ட்ரீ சிஸ்டம்ஸ் (Bodhi Tree Systems), சர்வதேச அளவில் முதலீடு செய்யும் நிறுவனமாகும்.

யார் இந்த போதி ட்ரீ?

2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை ஜேம்ஸ் முர்டோக் (James Murdoch), உதய் சங்கர் (Uday Shankar) ஆகியோர் இணைந்து உருவாக்கினர். ஊடக உலகின் பெரும் தொழிலதிபரான ரூபர்ட் முர்டோக்கின் இளைய மகன்தான் ஜேம்ஸ் முர்டோக்.

21st Century Fox நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் ஜேம்ஸ் முர்டோக்கிற்கு உண்டு. பின்னர் Lupa Systems என்ற தனியார் முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

மற்றொரு நிறுவனரான உதய் சங்கர், இந்திய ஊடகத் துறையில் முக்கிய ஆளுமை. ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றியவர். அவரது தலைமையில்தான் ஸ்டார் இந்தியா வளர்ச்சி அடைந்ததுடன், ஹாட்ஸ்டார் (Hotstar) இணையவழி ஒளிபரப்புத் தளமும் அறிமுகமானது. பின்னர் டிஸ்னி ஆசியா பசிபிக் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

கத்தார் நாட்டின் நிதி ஆதரவு!

2022 பிப்ரவரி மாதம் போதி ட்ரீ நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கத்தார் நாட்டின் இறையாண்மை முதலீட்டு நிறுவனமான கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி (QIA), இந்த முயற்சிக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

ஊடகம், தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதே தொடக்ககால நோக்கமாக இருந்தது.

இந்த நிறுவனம் ஏற்கெனவே ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட் (ALLEN Career Institute), ஜியோஸ்டார் (JioStar) போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

தற்போது A2B நிறுவனத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியிருப்பது அதன் உணவுத் துறை விரிவாக்கத்தில் முக்கியமான நடவடிக்கையாகும்.

முதலீடு மட்டுமல்ல; நிறுவனங்களை வளர்ப்பதும் இலக்கு!

போதி ட்ரீ நிறுவனத்தின் அணுகுமுறை வெறுமனே பணத்தை முதலீடு செய்வது மட்டுமல்ல. ஏற்கெனவே வலுவான வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனங்களில் முதலீடு செய்து, தொழில்நுட்பம், நிர்வாகம், சர்வதேச சந்தை விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் அவற்றை உலகளாவிய நிறுவனங்களாக வளர்ப்பதே அதன் முக்கிய வியூகமாகும்.

Scroll to Top