அரசியல் தேர்தல் களத்தில் நுழைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நித்யா ராமன் சென்னையின் தெருக்களில் நடந்து சென்று மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்தவர். குறிப்பாக, விளிம்புநிலை மக்களுக்கு அடிப்படை வசதியான பொதுக் கழிப்பறைகூட ஏன் போராடிப் பெற வேண்டியிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியவர்.
2010-ல் சென்னையில் தொடங்கிய சமூகப் பணி
2010-ம் ஆண்டு நித்யா ராமன், ‘டிரான்ஸ்பரன்ட் சென்னை’ (Transparent Chennai) என்ற ஆய்வு மற்றும் தரவுத் திட்டத்தைத் தொடங்கினார். இது சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் செயல்பட்டது. நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFMR) கீழ், வளர்ச்சி நிதி மையத்தின் திட்டமாக இது செயல்பட்டது.
சென்னையில் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பொதுச் சேவைகள், அவை அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட விவரங்களை இவரது குழுவினர் ஆவணப்படுத்தினர். இதன்மூலம், தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதற்கான ஆதாரங்களை மக்கள் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப முடிந்தது.
பொதுக் கழிப்பறை வசதிகளுக்காக ஆய்வு
நித்யா ராமன் தலைமையிலான குழு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகள் மற்றும் சமூகக் கழிப்பறைகளை ஆய்வு செய்தது.
மறுகுடியமர்வு குடியிருப்புகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை என்பதைக் கண்டறிந்தது. அங்கு வசிக்கும் மக்களுக்கு அருகிலேயே கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான வசதிகளும் இருக்க வேண்டும் என்பதில் குழு கவனம் செலுத்தியது.
நித்யா ராமனுடன் பணியாற்றிய சுயாதீன குடிநீர் மற்றும் சுகாதார ஆலோசகர் சோம்யா சேதுராமன், குறைந்தபட்ச வளங்களைக் கொண்டே அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் நித்யா செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குடிசை அகற்றுவதற்கு முன் மாற்று வசதிகள் அவசியம்!
ஐஐடி மெட்ராஸ் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை இணைப் பேராசிரியர் கல்பனா கருணாகரன், நித்யா ராமன் நகர்ப்புற ஏழைகளின் பிரச்சினைகளில் மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்டவர் என்று பாராட்டியுள்ளார்.
டிரான்ஸ்பரன்ட் சென்னை அமைப்பில் பணியாற்றிய பிரபு ராஜா கூறுகையில், குடிசைப் பகுதிகளை அகற்றுவதற்கு முன்பு முறையான திட்டமிடல் அவசியம் என்று நித்யா தொடர்ந்து வலியுறுத்தினார். மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும்போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்றும், புதிய குடியிருப்புகளில் அத்தியாவசிய வசதிகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசின் குடிசைப் பகுதி தரவுகளுடன் பொதுக் கழிப்பறைகள் குறித்த மக்கள் வழங்கிய தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, சென்னையில் சுகாதார வசதிகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய அவர் முயன்றார்.
சென்னைக்கான பேருந்து வழித்தட வரைபடம்!
2010-ம் ஆண்டில் சென்னைக்கான எளிதில் தேடக்கூடிய பேருந்து வழித்தட வரைபடத்தையும் நித்யா ராமன் குழு உருவாக்கியது. இதற்காகத் தனிக் குழுவினர் மாநகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகளுடன் பயணம் செய்து தகவல்களைச் சேகரித்தனர்.
அப்போது கூகுள் மேப்ஸில் இன்றுள்ள வசதிகள் இல்லாத நிலையில், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தையும் தொடங்கும் இடத்தையும் குறிப்பிட்டு, அதற்கான பேருந்து எண்களை அறிந்துகொள்ள இந்த வரைபடம் உதவியது.
மேலும், பொதுக் கழிப்பறைகள், விபத்து அதிகம் நடைபெறும் இடங்கள், பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
சென்னையில் சாலைகளில் உள்ள பள்ளங்களைக் கூட மக்கள் தாங்களாகவே வரைபடத்தில் பதிவு செய்யும் மற்றொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உயரம்!
சென்னையின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, தரவுகள் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர முயன்ற நித்யா ராமன், 16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயராகப் பொறுப்பேற்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
சென்னையின் தெருக்களில் தொடங்கிய அவரது சமூகப் பயணம், அமெரிக்காவின் முக்கிய நகரத்தின் தலைமைப் பொறுப்பை நோக்கி விரிவடைந்துள்ளது.
