கடுமையான உடல்நலக் குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தாய் எடுத்துள்ள முடிவுக்கு நீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருவில் உள்ள குழந்தைக்குக் குறிப்பிடத்தக்க நரம்பியல் மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி ஒரு பெண் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
கர்ப்பிணிப் பெண்ணின் மூன்றாவது மாதப் பரிசோதனையில், கருவின் மூளையில் உள்ள திரவ அறைகள் விரிவடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பரிசோதனையிலும் இந்தக் குறைபாடு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான நரம்பியல் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், மூளையின் முக்கியப் பகுதியான கார்பஸ் காலோசம் (Corpus Callosum) உருவாகாத குறைபாடும், இருபுற மூளைத் திரவ அறைகளிலும் மிதமான அளவில் விரிவாக்கமும் இருப்பது தெரியவந்தது.
இதனால் குழந்தை பிறந்த பிறகு அறிவாற்றல் குறைபாடு, நடத்தைப் பிரச்சினைகள், சமூகத் தொடர்பில் சிக்கல்கள், வலிப்பு நோய் மற்றும் அறிவுசார் இயலாமை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், குழந்தையின் பாதிப்பின் தீவிரத்தைப் பிறப்பதற்கு முன்பே துல்லியமாகக் கணிக்க முடியாது என்றும், கூடுதல் மூளை அல்லது மரபணுக் குறைபாடுகள் இருந்தால் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாயின் முடிவுக்கு முக்கியத்துவம்:
ஏற்கெனவே 24 வாரங்களைக் கடந்திருந்ததால், மருத்துவக் குழு கர்ப்பத்தைக் கலைப்பது அவசியமில்லை என்று கருத்துத் தெரிவித்தது. இதையடுத்து கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி பெண் நீதிமன்றத்தை நாடினார்.
‘’இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தாய்க்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.’’
கடுமையான குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தை இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத சூழல் இருக்கும்போது, தாய் எடுக்கும் வேதனையான முடிவை நீதிமன்றம் மதிக்க வேண்டும்.
பெற்றோரின் வாழ்நாள் முழுவதும் குழந்தையின் பராமரிப்புப் பொறுப்பு தொடரும் என்பதையும், அக்குழந்தை கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், குழந்தை பிறந்த பிறகு ஏற்படக்கூடிய துன்பங்களையும், பெற்றோரின் மனவேதனையையும் கருத்தில் கொண்டு, கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி வழங்கினார்.
முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவக் குழுத் தலைவர் அக்டோபர் 13-ம் தேதி கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி மறுத்திருந்தார். அந்த நடவடிக்கையையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
குறிப்பு: இந்தத் தீர்ப்பு குறிப்பிட்ட வழக்கின் மருத்துவ மற்றும் சட்டச் சூழ்நிலைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இது அனைத்து கர்ப்பக் கலைப்பு வழக்குகளுக்கும் பொதுவான அனுமதி என்று பொருளல்ல.
