சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் காலியாகவுள்ள இடத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டும் பணி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சுமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதிக் கட்டடம் கட்டப்படுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.7.2023) ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து உயர்கல்வி பயில சென்னைக்கு வருகை தரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கிக் கல்வி பயில ஏதுவாக, சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 15.12.1961 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதுவரையில் சுமார் 25,000 மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி உயர் கல்வி பெற்று பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை, எம்.சி. ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் சுமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதிக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னையில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் துறைகளில் பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதால் அவர்களது தங்குமிடத் தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களது திறனை மேம்படுத்தவும் எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் புதியதாக மொத்தம் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 484 மாணவர்கள் தங்குமளவிற்கு தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கூடிய 121 தங்கும் அறைகள், நூலகம், உடற்பயிற்சிக்கூடம், பார்வையாளர் அறை, பன்னோக்கு அரங்கம் ஆகிய நவீன வசதிகளுடன் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விடுதிக் கட்டடம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

