2019 ஆகஸ்டுமாதம் பிறந்த நாளை ஒட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜயகாந்த். அப்போது கோயம்பேட்டில் உள்ள அவரது லீ கிளப்பில் விஜயகாந்தை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் உடல் நல்ல நிலையில் இருந்தாலும் கூட நீண்ட நேரம் அவரால் நிற்கவும் முடியவில்லை; உட்காரவும் முடியவில்லை.
பின்னால் ஒருவர் இருந்து உதவி செய்து கொண்டிருந்தார். வாயில் இருந்து வார்த்தைகள் சத்தமாக வெளிவரவில்லை. அவர் ஆர்வமாக பேசும் போது குரல் உள்ளடங்கி விட்டது. இருந்தாலும் சிந்தனை தெளிவாக இருந்தது. அரசியல் விஷயங்களை நன்றாக நினைவு வைத்திருந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருக்கிறீர்களே எப்படி பொழுது போகிறது என்று கேட்டபோது குழந்தை போல் தூங்குவது போல் காண்பித்து சோபாவில் படுத்துக்கொண்டு ஆங்கில படங்கள் பார்ப்பேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அவர் நடித்த படங்களை அவர் அதிகம் பார்த்தது கிடையாது.
விஜயகாந்த் தனி கட்சி தொடங்கி எழுச்சி பெற காரணமாக இருந்தவர்களில் மறைந்த மாலை முரசு நிர்வாக ஆசிரியர் ஐயா பா.ராமச்சந்திர ஆதித்தனார் முக்கியமானவர்.
தமிழ்நாட்டில் மாற்று அரசியல் வேண்டும். புதிய அரசியல்வாதிகள் வரவேண்டும் என்று அடிப்படையில் அவர் விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவித்தார். நிதி உதவியும் கூட அவருக்கு கிடைத்தது. தனது நாளிதழில் விஜயகாந்துக்கு முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டார். அவர் கட்சி ஆரம்பித்தபோது வீட்டுக்கே சென்று விஜயகாந்த்துக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்தி விட்டு வந்தார்.
இப்போது நாம் தமிழர் கட்சி சீமானும் பாஜக தலைவர் அண்ணாமலையும் செய்துவரும் திமுக-அதிமுக எதிர்ப்பை அன்றே தீவிரமாக செய்தவர் விஜயகாந்த். இதனால் தான் அவர் விரைவாக மக்கள் ஆதரவு பெற்று அதிக சதவீத ஓட்டுகளை பெற முடிந்தது. ஆனாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த பிறகு தான் அவரது வீழ்ச்சி தொடங்கியது . அந்த கூட்டணியின் போது அதிக எம்எல்ஏக்கள் பெற்று எதிர்கட்சி தலைவர் ஆனாலும் கூட அவர் எதிர்த்த உடனே அவரது எம்எல்ஏக்களை இழுத்து கட்சியை சிதைத்து விட்டார்கள்.
அதிமுக-திமுக இரண்டுக்குமே சிம்ம சொப்பனமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் அவரது மனைவி மைத்துனர் தலையீடு அதிகரிக்க அதிகரிக்கவே கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் வெளியேறும் சூழ்நிலை உருவானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து நாக்கை துருத்தி பேசிய பிறகு விஜயகாந்த் மீது அதிமுக கடும் கோபம் கொண்டது. அதற்கு ஏற்ப கட்சியையும் உடைக்க முயற்சி நடந்தது. என்றாலும் அவர் உடல் நலத்தோடு இருந்த வரை கட்சி அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பிறகு மெல்ல மெல்ல குடும்பத்தினர் ஆதிக்கத்திற்குள் வந்துவிட்டது.

விஜயகாந்துக்கு பிறகு அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்து விடுவார்கள் என்ற பேச்சு அப்போது எழுந்தது. இப்போது அதற்கான சூழ்நிலை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜயகாந்த் நல்ல அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை அழகர்சாமி நாயுடு மதுரையில் காங்கிரஸ் பிரமுகர் ஆவார். அவர்களுக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் ‘அரிசி ஆலை போன்றவை இருந்தன.
அவரது சகோதரிகள் சகோதரர்கள், அனைவருமே விஜயகாந்துடன் நல்ல உறவு உடன் இருந்தனர். இதனால் தான் அவரால் தான் சம்பாதித்த பணத்தை நன்றாக முதலீடு செய்து மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி போன்ற சொத்துக்களை வாங்கி அதை பராமரிக்க முடிந்தது.
கோயம்பேட்டில் தேமுதிகவுக்கு கல்யாண மண்டபம், அலுவலகம் திறந்தார்.
ஆனால் அது பால வேலை காரணமாக ஒரு பகுதி இடிக்கப்பட்ட போது கொஞ்சம் மனம் உடைந்து விட்டார். தேர்தல் சமயங்களில் கூட்டணி தொடர்பான பேரங்களில் விஜயகாந்த் குடும்பத்தினர் சொல்வதையே அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படித்தான் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
திரை உலகிலும் நடிகர் சங்கத்திலும் எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். ஈழப்போர் நடக்கும் போது அதற்காக முழு ஆதரவு அளித்தவர். தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயரிட்டவர். கேப்டன் மறக்க முடியாத தலைவர்; நடிகர்.
திரு.குமார் ராமசாமி ஆதித்தன் @ கே.கே.ஆர்.ஆதித்தன். (முகநூல்-கட்டுரை) மாலை முரசு சென்னை, ஆசிரியர். பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்.

