பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, 14.10.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம்-தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 464 படுக்கைகளைக் கொண்ட பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிக்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, கிழக்கு தாம்பரம், வார்டு-48க்குட்பட்ட காளிதாசர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ், ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் 1.25 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையின் தரம் மற்றும் அதன் அளவீடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் அருகில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பருவமழைக்கு முன்னதாக முடித்திடவும், மழைநீர் வடிகாலுக்கான இணைப்பினை ஏற்படுத்திடவும், உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி பணிகளை மேற்கொள்ளவும் தலைமைச் செயலாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நீர்வளத்துறை
நீர்வளத்துறையின் சார்பில் மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் ரெட்டேரியில் ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆழப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணியினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பார்வையிட்டு, ஏரியின் வடக்கு நீர் வெளியேற்றும் கதவணையினை ஆய்வு மேற்கொண்டு, பருவமழைக்கு முன்னதாக ஏரியில் கழிவுகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவொற்றியூர் துறைமுகம்
பின்னர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருவொற்றியூர் துறைமுகத்தில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செவுள் வலை மற்றும் தூண்டில் மீன்பிடி விசைப்படகுகளுக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமானப் பணியினை தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு அமைக்கப்படும் கடல் நீர் தடுப்பணைகள் மற்றும் மீன்பிடி படகுகள் கரையில் கட்டுமிடத்தினை ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை உரிய காலத்திற்குள் உரிய தரத்துடன் மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி
இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட எஸ்பிளனேடு சாலையில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் 463 மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினையும், பிரகாசம் சாலையில் ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் 1.11 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பருமழைக்கு முன்னதாக பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மழைநீர் வடிகால்களின் வண்டல் வடிகட்டித் தொட்டிகளை உரிய அளவீடுகளுடன் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக அமைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நகர்ப்புர சாலை மேம்பாட்டுத் திட்டம்-2ன் கீழ், சென்னை காவல் ஆணையாளர் அலுவலக பக்கவாட்டில் உள்ள ஜோதி வெங்கடாசலம் சாலையில் ரூ.54.77 இலட்சம் மதிப்பீட்டில் 580 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சாலையினைப் பார்வையிட்டு, அங்குள்ள மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து, பக்கவாட்டில் நடைபாதையினை அமைத்திடவும் அறிவுறுத்தினார்.
மேலும், வார்டு-63க்குட்பட்ட பிளாக்கர்ஸ் சாலையில் ரூ.93 இலட்சம் மதிப்பீட்டில்
212 மீ. நீளத்தில் அமைக்ப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி பார்வையிட்டு, மின்சார கேபிள்கள் சேதமடையாமலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் எச்சரிக்கையுடன் பணியாற்றிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மழைநீர் வழிந்தோடும் வகையிலும், உரிய கால்வாய் இணைப்புகளை ஏற்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலைத்துறை-மழைநீர் வடிகால்
நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 650 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 320 மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்றுள்ளது. இதனைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் அவர்கள் மேலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்திடவும், வண்டல் வடிகட்டித் தொட்டியினை சீராக அமைத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உயர்கல்வித்துறை – மாணவியருக்கான தங்கும் விடுதி
உயர்கல்வித்துறையின் சார்பில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில்
ரூ.53.10 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 1. 34 இலட்சம் ச.அ. பரப்பளவில் புதிதாக கட்டப்பட உள்ள சென்னை பல்கலைக்கழக முதுநிலை மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான தங்கும் விடுதிக்கான இடத்தினையும், கட்டட வரைபடத்தினையும் பார்வையிட்டு, பணியினை விரைவில் தொடங்கிட அறிவுறுத்தினார். இந்த விடுதியில் முதுநிலை மாணவிகளுக்கு 352 படுக்கைகள், ஆராய்ச்சியாளர்களுக்கு 134 படுக்கைகள் என மொத்தம் 486 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த விடுதிக் கட்டடம் சமையலறை, உணவுக்கூடம், கழிப்பறை, மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளுடன் அமையப்பெற உள்ளது.

