‘சிடெட்’ எனப்படும் மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் 3 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 23 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி சிடெட் தேர்வுகள் நடக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ( CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகவும் பட்டப்படிப்பு முடித்து பிஎட்., முடித்தவர்கள் 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். பட்டயப்படிப்பும் பிஎட் படிப்பும் முடித்தவர்கள், இந்த இரண்டு தாள்களையும் எழுத தகுதி உடையவர்கள்.
2024 ஆம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை சிடெட் தேர்வு அறிவிப்பு வெளியாகி விட்டது. இத்தேர்வை நடத்தும் சிபிஸ்இ அமைப்பு இத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதற்கு தேர்வர்கள் நவம்பர் 3 ஆம் தேதி முதல் நவம்பர் 23 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் பொதுப் பிரிவினர், ஓ.பி.சி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஒரு பேப்பர் எழுதினால் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு தாள்களையும் எழுதினால் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதற்குத் தேர்வர்கள் விண்ணப்பித்ததை அடுத்து, விண்ணப்பித்த போது ஏதேனும் தவறுகள் செய்து இருந்தால் அனை திருத்த, நவம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது.
அதற்காக காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் ஷிஃப்ட்டில், தாள் ஒன்றும், மதியம் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 ஆவது ஷிஃப்ட்டில் தாள் இரண்டுக்கும் தேர்வு நடைபெறுகிறது. ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மட்டுமே இத்தேர்வு நடைபெறும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, அப்போது இந்த தேர்வுகளை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இந்நிலையில் 2023 ம் ஆண்டுக்கான தேர்வு குறித்த விவரங்கள், தேர்வு நடைபெறும் மொழிகள், பாடத்திட்டம், தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2023/11/2023110320.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். முந்தைய வினாத்தாள், விண்ணப்பிக்கும் முறை போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://ctet.nic.in/ஆகியவற்றில் கிளிக் செய்து உள்ளே சென்று பார்க்கலாம்.
மத்திய, மாநில அரசு நடத்தும் பள்ளிகள், தமிழ்நாடு அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகளில் நிரந்தர பணியில் சேர இந்த சான்றிதழ் செல்லும். தனியார் பள்ளிகளிலும் இந்த சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

