தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத்துறை தலைவருமான ஆ.கோபண்ணா அறிக்கை:
’காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கண்டிப்பாக கட்டப்படும் என கர்நாடக காங்கிரஸ் அரசு கூறியதற்கு தமிழக காங்கிரசை தேவை இல்லாமல் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சீண்டிப் பார்த்திருக்கிறார். இதற்கு உள்நோக்கம் கற்பித்து காங்கிரஸ் கட்சியை பற்றி கடுமையாக விமர்சிக்கிறார். கடந்த காலத்தில் கர்நாடகத்திலே முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை 2022 – 2023 நிதியாண்டிலே ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா ?
அன்றைக்கு நிதி ஒதுக்கப்பட்ட போது விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று கூறினார். அப்படி நிதி ஒதுக்கிய போது இதே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எங்கே இருந்தார் ? அன்று வாய் மூடி மௌனியாக இருந்த அண்ணாமலை இன்றைக்கு பூமிக்கும் வானத்திற்கும் எகிறி குதிக்கிறார்.
தமிழக காங்கிரசை பொறுத்தவரை நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாதகமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரின் அளவிற்கு பாதிப்பு ஏற்படுகிற வகையில் மேகதாதுவில் அணை கட்டப்படுவதை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். மேகதாது அணை கட்டுவதற்கு ரூபாய் 9000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அந்த அணை கட்டப்படுமேயானால் காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

நமது உரிமையின்படி நாம் பெற வேண்டிய தண்ணீரை தடுக்கிற வகையில் காவேரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே தமிழக எல்லையிலே இருக்கிற பிலி குண்டுலு நீர் அளவை நிலையத்திற்கு மேலே அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டால் தமிழகத்தின் நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும். இதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளிவருகிற நீர் தமிழகத்திற்கு இயல்பாக வர வேண்டியதாகும். அந்த நீரை தடுப்பது தான் மேகதாது அணையின் நோக்கமாகும். இந்த அடிப்படையில் தான் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கிறோம்.
கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ஆதரவாக ஒரே குரலாக பேசுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழக அரசு எடுக்கிற முடிவுகளுக்கு எதிராக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பேசி வருவது கர்நாடகத்திற்கு சாதகமாகவே கருதப்படும். தமிழக காங்கிரசை விமர்சிக்கிற அண்ணாமலை கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருக்கிற பா.ஜ.க.வை விமர்சிப்பாரா ? ஆனால், தமிழக காங்கிரசை பொறுத்தவரை கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டின் நலனை காப்பதற்காக தமிழக அரசு எடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் திண்டாடி திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக அரைவேக்காட்டுத்தனமாக ஊடகங்களில் வெளிச்சம் பெறுவதற்காக அற்பத்தனமான கருத்துகளை அண்ணாமலை கூறி வருகிறார். இதன்மூலம் மலிவான அரசியல் நடத்தி, தமிழக பா.ஜ.க-வை வளர்க்கலாம் என்ற அண்ணாமலையின் கனவு பகல் கனவாகத் தான் முடியும்.
இவ்வாறு கோபண்ணா கூறியுள்ளார்.

