பிரிட்டிஷார் ஆட்சியின் போது 1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி “Tinnevelly’ மாவட்டம் என பெயரிட்டனர். முதலில் திருநெல்வேலி நகரத்தை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பாளையக்காரர்களுககு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற போது பாளையங்கோட்டையைத்தான் பிரிட்டிஷார் தங்களது இராணுவ தலைமையிடமாக வைத்திருந்து செயல்பட்டனர். பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டதாலும், திருநெல்வேலி சீமை என நாயக்கர் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடர்ந்து ”திருநெல்வேலி மாவட்டம்” என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று. 20-10-1986 முதல் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி என்ற புதிய மாவட்டமும், கடந்த 12-11-2019 முதல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டமும் உதயமானது. இம்மாவட்டதிலுள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்ற இரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டு எல்லாவிதத்திலும் வேகமாக வளர்ந்தன.
திருநெல்வேலி தலபுராணம், திருநெல்வேலி பெயர் காரணத்திற்கான பாரம்பரியத்தை விவரிக்கிறது. தீவிர சிவ பக்தரான வேதசர்மா என்பவர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புனிதயாத்திரை மேற்கொண்டார். ஒரு நாள் அவருடைய கனவில் சிவபெருமான் தோன்றி புனித நதியான தாமிரபரணி நதிக்கரையில் தான் குடிகொண்டிருக்கும் கோவிலுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி சிவபக்தரான வேதசர்மா மகிழ்ச்சியடைந்து தாமிரபரணி நதிக்கரையில் சிந்துபூந்துறை எனும் இடத்திற்கு வந்து அங்கு குடும்பத்துடன் வசித்து வரலானார். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டதினால் சிவபக்தர் வேதசர்மா வீடு வீடாக யாசகம் செய்து நெல்மணிகளை சேகரித்து தன்னுடைய அன்றாட சிவ பூஜைகளை செய்து வந்தார்.
ஒரு நாள், யாசமாக கேட்டு சேகரித்த நெல்மணிகளை தாமிரபரணி ஆற்றின் கரையில் காயவைத்துவிட்டு ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றார். அப்போது திருநெல்வேலியில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை நீக்கி மழை பெய்து அருளுமாறு சிவபெருமானிடம் மனமுருகி வேண்டினார். அவருடைய உறுதியான பக்தியின் காரணமாக சிவனருளால் அங்கே மழை திடீரென்று கொட்டியது. இப்படி திடீரென்று பெய்த மழையில் ஆற்றின கரையில் காய வைத்த நெல்மணிகள் சேதமாகிவிடுமே அதனால் இன்று இறைவனுக்கு உணவு தயாரிக்க இயலாது போகிவிடுமே என்று பயந்து கொண்டே அங்கே சென்றார். அங்கு ஓர் அதிசயத்தை கண்டார். அவர் காய வைத்திருந்த நெல்மணிகளை சுற்றியிருந்த இடத்தில் மழை பெய்த போதிலும் காய வைத்திருந்த நெல்மணிகள் மீது ஒரு துளி மழை நீர் கூட விழாமல் இருந்த அதியசத்தை கண்டு இறைவன் அருளை எண்ணி மெய் மறந்து நின்றார். இவ்வாறு நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் அதிலிருந்து புராணப்படி இந்நகரமானது “திரு“ “நெல்“ ”வேலி” என அழைக்கப்படலாயிற்று.
உலக வரைபடத்தில் 08.8’ மற்றும் 09.23’ இடையேயுள்ள அட்சரேகையிலும் 77.09’ மற்றும் 77.54’ இடையேயுள்ள தீர்க்க ரேகையிலும் திருநெல்வேலி மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்த்தின் மொத்த பரப்பளவு 3,876.06 சதுர கி.மீ. ஆகும். திருநெல்வேலி மாவட்டமானதுச் தென்கிழக்கில் மன்னார்வளைகுடா, வடக்கே விருதுநகர், கிழக்கே தூத்துக்குடி, மேற்கே கேரளா மற்றும் தென்காசி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.
சுற்றுலா: அடைவது எப்படி?
விமானம் மூலம் – தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. அல்லது மதுரை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 170 கி.மீ.
சாலை வழியாக – வேய்ந்தான் குளம் புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி
புகை வண்டி – திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்.
முண்டந்துறை புலிகள் சரணாலயம்
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.1988 இல் தேசிய புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் 817 ச.கி.மீ.இல் ஏற்படுத்தப்பட்டது.புலிகள் சரணாலயம் சேரன்மகாதேவியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் அம்பாசமுத்திரத்திலிருந்து 15கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.அருகில் மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையம் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு சாலை வழியாக முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு செல்ல்லாம். ஏராளமான பேரூந்துகள் அம்பாசமுத்திரம் களக்காடு சாலை வழியாக இயக்கப்படுகின்றன. முண்டந்துறை புலிகள் சரணாலயம் வெளிப்பகுதியிலிருந்து 817 ச.கி.மீ. மையப்பகுதியிலிருந்து 459 ச.கீ.மீ. மற்றும் இடைப்பகுதியிலிருந்து 358 ச.கி.மீ. பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட 24 இயற்கை வழிகள் உள்ளன. இது மலையேற்றத்திற்கு ஒரு பரபரப்பான அனுபவத்தை வழங்குகிறது. அனைத்து தினங்களிலும் பார்வை நேரமாக காலை 6 மணி முதல் மாலை 6ம ணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சிறந்த பருவமாக செப்டம்பர் முதல் ஜனவரி வரையாகும். முண்டந்துரை மற்றும் தலையணை வனப்பகுதியில் தங்குமிடங்கள் உள்ளன.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூந்தன்குளம் பகுதி 1994 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. இப்பகுதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 38கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இங்க தார்சாலையில் வசதியாக இணைக்கப்பட்டுள்ள கூந்தன்குளம் மற்றும் கடன்குளம் நீர்பாசன வசதிகள் காணப்படுகின்றன.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அதிக எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள் காணப்படுகின்றன.தென்னிந்தியாவிலேயே பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு தேவையான நீர் அதிக கொள்ளவை கொண்டுள்ளது. பறவைகள் சரணாலயத்தின் தேசியப்பெயராக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து 38கி.மீ.தொலைவில் நாங்நேரி தாலுகாவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பறவைகள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு வருகை புரிகின்றது. இந்தகிராமத்தில் மக்கள் அரிதாகவே வசிக்கின்றனர். டிசம்பர் இறுதியில் பறவைகள் புலம்பெயர்ந்து வருகின்றன.ஜீன் மற்றும் ஜீலை மாதங்களில் முட்டைகளை இட்டு குஞ்சு பொரிக்கின்றன. பின்னர் இந்த இளம் பறவைகள் பறந்து செல்லும் வயதை அடைந்து இங்கிருந்த புலம்பெயர்ந்த செல்கின்றன.
ஓவியங்கள் போன்று வரையப்பட்ட வண்ணமயமான பறவைகள் வடகிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு வருகை புரிகின்றன. ஐந்து தலைமுறைகளாக இந்த பறவைகள் அதிர்ஷ்டவசமாக பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த பறவைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை மக்கள் சேகரித்து குனோ என்ற பறவைகளின் கழிவுகள் உரங்கள் தயாரிக்க பயன்படுகின்றன. இந்த பறவைகள் சுதந்திரமாக இங்கு சுற்றிதிரிகின்றன.
மாஞ்சோலை
திருநெல்வேலியிருந்து 57கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.1062 அடி உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை மலைப்பகுதியியை சுற்றி ஏராளமான தோட்டப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் இப்பகுதியை சுற்றி காணப்படுகின்றன. பாம்பே பர்மா என்ற தேயிலைத்தோட்டம் மிகப்பிரபலமானதாக அறியப்படுகிறது. இங்கே 4000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கபடும் உதகமண்டலத்தை போன்று அருமையான சூழலை தருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை நெல்லைக்கு வற்றாத ஜீவநதியான தாமிரபரணியை தருகிறது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை மட்டுமல்ல, அந்தப்பகுதியையே பசுமையாக வைத்து பிராணவாயு உற்பத்தியோடு விலங்கினங்களின் தாயகமாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. (நெல்லை சீமையின் முழுமையான சுற்றுலா தகவல்களை அந்த மாவட்டத்தின் அதிகாரப்பூர்வமான https://tirunelveli.nic.in/ta/ இணையதளத்தில் முழு விபரத்தை காணலாம் மாவட்ட சுற்றுலா அலுவலகம்: 0462-2500104)

