திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வாழ்த்து அறிக்கை:
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர், தோழர் “பெ மணியரசன் அவர்களின் 75 பெருவிழா” வரும் ஞாயிறு (11.06. 2023) அன்று, திருச்சி, திருவெறும்பூரில் நடைபெற இருப்பதைச் சமூக வலைத்தளங்களில் கண்டு மகிழ்ந்தேன். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
1980 களின் இறுதியில், அவரை முதன் முதலாகச் சந்தித்தேன் என்று நினைவு. அப்போதுதான், அவர் நண்பர்கள் பலருடன், சிபிஎம் கட்சியிலிருந்து விலகி வெளியே வந்து, எம் சி பி ஐ என்று தனியே ஓர் அமைப்பைத் தொடங்கி இருந்தார்!
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட அவருடன் கிடைத்த நட்பு, என் அரசியல் புரிதல்களை மேலும் கூர் தீட்டிக்கொள்ள உதவியது! மூத்த தோழரான அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகள் பல! அவர் தலைமையேற்று நடத்திய அமைப்பின் சார்பில், 1990 பிப்ரவரி மாதம், சென்னை, பெரியார் திடலில், தமிழ்த் தேசத் தன்னுரிமை மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் அவர் எனக்குத் தந்தார்!
1990 மே மாதம் நாங்கள் தொடங்கிய விடுதலைக் குயில்கள் என்னும் அமைப்பும், பிறகு 1994 ஜனவரியில் தோழர் தியாகுவும் நானும் இணைந்து தொடங்கிய தமிழ் தமிழர் இயக்கமும், தோழர் மணியரசன் இயக்கத்தோடும் ஐயா நெடுமாறன் அவர்களின் இயக்கத்தோடும் இணைந்து பயணித்தன!
அப்போதெல்லாம் தஞ்சைப் பகுதிக்கு ஏதேனும் கூட்டங்களுக்குச் சென்றால், அவர் வீட்டில்தான் தங்குவேன்!

1996 ஆம் ஆண்டு ஏறத்தாழ 25 நாள்கள், அவருடன் வேலூர்ச் சிறையில் இருந்த நினைவுகளை என்றும் என்னால் மறக்க முடியாது! இப்படி அவரைப் பற்றிய பல நினைவுகள் எனக்குள் உண்டு!
பிறகு கொள்கை வேறுபாடுகளின் அடிப்படையில், அரசியல் தளத்தில் நாங்கள் பிரிந்து விட்டாலும், தனிப்பட்ட பகைமை எதுவும் இன்றுவரையில் எனக்கு இல்லை!
அவர் என்னைத் தோழர் சுபவீ என்று அன்பாக அழைத்த அந்தக் காலத்தில் கொண்ட அதே அன்பும் – நட்பும், அறிவாலயத்தின் ஒட்டுத் திண்ணைக் குடியிருப்பாளர் என்று கேலி செய்யும் இந்த காலத்திலும் அப்படியே தொடர்கின்றன!
தோழர் மணியரசன் வாழ்க பல்லாண்டு!

