‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற கோஷத்துடன் தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை அப்போது அண்ணாமலை சொல்லி வருகிறார்.
இந்நிலையில், இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்திற்குச் கட்சியினர் புடைசூழ சென்றார். கோவிலை சுற்றி வந்து மாதாவை வணங்கினார். மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டார். கோவிலுக்குள் சென்று பக்தி பரவசத்துடன் சிறிது நேரம் அமைதியாக நின்றபடி மாதாவிடம் வேண்டிக் கொண்டார். அண்ணாமலைக்கு கோவில் அருட்தந்தை ஆசிர்வாதம் செய்தார்.

மாதா பேரயலம் சென்றது குறித்து, அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில், ‘’ஆங்கிலேய, போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் காலத்து வரலாற்றுச் சிறப்புகள் மிக்க பேராலயமான இது. சுமார் 450 ஆண்டுகள் பழமையானது. தூத்துக்குடியின் முதல் மாதா ஆலயமாகவும், தமிழகத்தில் உள்ள பேராலயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
மதங்கள் தாண்டி, மக்கள் அனைவரும் வழிபடும் சிறப்பு மிக்க பனிமய மாதா பேராலயத்தில், வழிபடும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டிக்கொண்டேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


