விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சார்ந்த திருமதி முத்தமிழ்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சார்ந்த முதல் பெண் ஆவார். மே 23-ஆம் தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார்.
முத்தமிழ்ச் செல்வி-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவியாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 28.03.2023 அன்று வழங்கினார். மேலும், தன்னார்வ அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூபாய் 15 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
சென்னை கோவளம், மீனவ கிராமத்தைச் சார்ந்த ராஜசேகர் பச்சை (வயது 28), எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்திய அலைசறுக்கு வீரரான (surfing player) இவர் சென்னை-படூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி (B.C.A) பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் மே 19 -ஆம் தேதி காலை 5.30 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று (30.05.2023) சென்னை முகாம் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அமைச்சர் உதயநிதி, என். முத்தமிழ்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோரைப் பாராட்டி, இதுபோன்று மென்மேலும் பல சாதனைகளை படைத்திட வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் இதுபோன்று ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் விளங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

