“திராவிடம் என்றால் என்ன என்று சிலரைக் கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம்!” என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் இன்று (27.10.2023) நடைபெற்ற வழக்கறிஞர் ஏ.என். புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை:
இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று மணவிழாவை நடத்திவைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
சீர்திருத்தத் திருமணங்கள்
இன்று நடைபெற்றிருக்கக்கூடிய இந்த திருமணம், சீர்திருத்தத் திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணமாக நடந்தேறியிருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறுகிற நேரத்தில், அதிலும் குறிப்பாக நாம் வாழ்த்துகிற நேரத்தில் ஒன்றை தவறாமல், மறக்காமல், வழக்கமாக, வாடிக்கையாக வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். என்ன அந்த செய்தி என்று கேட்டால், இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நாம் பெற்றிருக்கவில்லை. சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
ஒரு தமிழ் திருமணம்
அந்த நிலையை மாற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 1967-இல் ஆட்சிப் பொறுப்பேற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக சட்டமன்றத்திற்கு உள்ளே முதன்முதலாக நுழைந்து, சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு அண்ணா அவர்கள் பெற்றுத்தந்தார். ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல, ஒரு தமிழ் திருமணம். இன்னும் பெருமையோடு சொல்லவேண்டும் என்று சொன்னால், நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். எனவே அந்த அங்கீகாரத்தோடு இது ஒரு தமிழ்த் திருமணமாக நடந்தேறியிருக்கிறது. அது எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்படிப்பட்ட இந்தத் திருமணத்தில் நாம் எல்லாம் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு மணமக்களைத் தமிழ் உணர்வோடு வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
கலைஞர் பார்த்து மகிழ்ச்சி
நம்முடைய கழக வழக்கறிஞராக அருமை சகோதரர் புருஷோத்தம் அவர்கள் அவரைப் பற்றிப் பேசும்போது இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள். புருஷோத்தம் அவர்கள் தன்னை இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொண்டு இயக்கப்பணிகளை எப்படியெல்லாம் ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்பதை அவரை அறிந்தவர்கள், அவரைப் புரிந்தவர்கள் குறிப்பாக இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மிகத் தெளிவாக உணர்வார்கள், அறிவார்கள்.
1981-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பை ஏற்படுத்தி, அந்த மாணவர்களை எல்லாம் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, அப்படி நடத்திய நிகழ்ச்சிக்குத் தலைவர் கலைஞரை அழைத்து வந்து, அதைத் தலைவர் கலைஞர் பார்த்து மகிழ்ச்சி அடையக்கூடிய அளவுக்கு நடத்திக் காட்டியவர் நம்முடைய அருமை சகோதரர் புருஷோத்தம்.
10 மேம்பாலங்கள் கட்டினோம்
1991-இல் இருந்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராகப் பொறுப்பேற்றார். அப்படி பொறுப்பேற்றிருந்த நேரத்தில்தான் வரலாற்றில் யாரும் மறந்திடாத ஒரு கொடுமையான செய்தி. என்ன செய்தி என்று கேட்டால், அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அதிமுக ஆட்சி. இன்றைக்கு சென்னை மாநகரத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, 10 மேம்பாலங்கள் கட்டினோம். இதுவரைக்கும் சென்னையைப் பொறுத்தவரைக்கும் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த மாநகரமாக இருந்தாலும், மேம்பாலங்கள் கட்டுவது என்பது மாநகராட்சியின் வேலையல்ல. அது பொதுப்பணித் துறைதான் கட்டவேண்டும். ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் தான் கட்டவேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டுவார்கள். மாநகராட்சி கட்டிய வரலாறே கிடையாது.
சிறிது தடைபட்டது
ஆனால் 1996-லிருந்து 2001 வரைக்கும், அதற்குப் பிறகு 2006-இல் இருந்து தொடர்ந்து நான் இந்த மாநகரத்தின் மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்களைப் போக்குவரத்தின் நெரிசலின் அடிப்படையில் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டோம். வேகப்படுத்தினோம், விரைவுப்படுத்தினோம். அந்தப் பாலங்களைக் கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டு, அந்தக் காலத்திற்குள் 10 பாலங்களையும் கட்டி முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆனால் 10 பாலங்களில் ஒரு பாலம் பெரம்பூரில் இருக்கக்கூடிய மேம்பாலம். அதில் சிறிது டெக்னிக்கல் பிரச்சினை இருந்தது. அதனால், விரைவாக குறித்த நேரத்தில் கட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சிறிது தடைபட்டது. ஆனால் மீதம் இருக்கக்கூடிய 9 மேம்பாலங்களைக் குறித்த காலத்தில் மட்டுமல்ல, குறித்த காலத்திற்கு முன்பே கட்டிமுடித்த பெருமை நமக்குண்டு.
பிரச்சனை வந்துவிடும்
அதற்குப் பிறகு, ஆட்சி மாற்றம் வந்தது. ஆட்சி மாற்றம் வந்த காரணத்தினால், அந்தப் பெரம்பூர் பாலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதை ஏன் கிடப்பில் போட்டார்கள் என்ற விஷயத்தை நான் சொல்கிறேன். அது ஒரு பெரிய விஷயம். ஆனால் அதற்குப் பிறகு நாம் மீண்டும் ஆட்சிக்கு வருகிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, நாம் ஆட்சியிலிருந்தபோது அடிக்கல் நாட்டிப் பாதி பணியை முடித்து டெக்னிக்கல் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் பாலம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நம்முடைய தலைவர்தான், எந்தத் தலைவர் அடிக்கல் நாட்டினாரோ அதே தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பாலத்தைத் திறந்து வைத்தார். இதுதான் ரெக்கார்டு. அதோடு இன்னொரு அதிசயம் என்ன என்று கேட்டால், அரசு சார்பிலோ அல்லது மாநகராட்சி சார்பிலோ ஏதாவது கட்டிடம் கட்டுகிறோம், பாலங்கள் கட்டுகிறோம், ரோடு போடுகிறோம், தெருவிளக்கு போடுகிறோம், கால்வாய் கட்டுகிறோம் இதுபோன்ற பணிகளைச் செய்கின்றபோது ஒரு காலத்தை நிர்ணயிப்போம். காலத்தை நிர்ணயிப்பது மட்டுமல்ல, ஒரு மதிப்பீடு போடுவோம், இந்த மதிப்பீட்டுக்குள் கட்டப் போகிறோம் என்று முடிவெடுப்போம். கடைசியில் கணக்கெடுத்துப் பார்த்தால், அந்த மதிப்பீடு போட்டதைவிடத் தாண்டிப் போயிருக்கும். ஏனென்றால் சில டெக்னிக்கல் பிரச்சனை வந்துவிடும், அதனால் காலதாமதமாகும். அப்போது விலைவாசி ஏற்றத்தின் அடிப்படையில், நாம் அதிகமாகச் செலவு செய்யக்கூடிய சூழ்நிலை வந்துவிடும். இது எதார்த்தமான நிலை.
ஜெயலலிதா ஆட்சி
ஆனால் சென்னை மாநகரத்தில் கட்டியபோது எவ்வளவு காலத்திற்குள் கட்டிவிடுவோம் என்று சொன்னோமோ, அந்த காலத்திற்குள் கட்டிமுடித்தோம் என்பது மட்டுமல்ல, எந்த மதிப்பீட்டில் கட்டிமுடிக்கவேண்டும் என்று சொன்னோமோ அதைவிடக் குறைவாக அந்தப் பாலத்தைக் கட்டிமுடித்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இடையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அந்தப் பாலத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஒரு வழக்கு போட்டார்கள். ஜெயலலிதா ஆட்சில் அந்த வழக்கு போட்டார்கள்.
இரவோடு இரவாக, தலைவர் கலைஞரைக் கைது செய்த கொடுமையை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதையெல்லாம் இங்கே சொல்ல விரும்பவில்லை. ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த சோகமான நிகழ்ச்சியை எல்லாம் இங்கே எடுத்துக் கூற விரும்பவில்லை. கலைஞரைக் கைது செய்தபோது, அன்றைக்கு ஒரு பொதுநல வழக்காக நம்முடைய புருஷோத்தம் அவர்கள் தொடுத்தார். அந்த பொதுநல வழக்கை தொடுத்த காரணத்தினால்தான் அன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே. ஜெயின் அவர்கள் அதை விசாரித்து ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனத்தைத் தெரிவித்து உடனடியாக விடுதலை செய்தார். இதுதான் புருசோத்தமனுக்கும், நம்முடைய இயக்கத்திற்கும், இயக்கத்தில் இருக்கக்கூடிய தலைவருக்கும் உள்ள வரலாறு என்பதை நான் பெருமையோடு இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
உரிமை தருகிறோம்
அவருடைய திறமை, அதற்குப் பிறகு படிப்படியாக மாநில அரசு வழக்கறிஞராக நியமனம் பெற்றார். ஒன்றிய அரசின் மூத்த குழு வழக்கறிஞராவும் இரண்டு முறை பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார். கழகத்தின் சார்பில் நடத்தக்கூடிய எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதில் வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள் என்று சொன்னால், அதில் அவரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இன்றைக்கு, அவருடைய மகள், அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்று சொல்வார்கள், அப்பாவுக்குப் பொண்ணு தப்பாமல் பிறந்திருக்கிறார். மணமகளாக வீற்றிருக்கக்கூடிய பூர்ணிமா மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், மாநகராட்சி மன்ற உறுப்பினராக மட்டுமல்ல, சுகாதார நிலைக்குழு உறுப்பினராக பொறுப்பேற்று அந்த கடமையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றபோது, இங்கே கூட சொன்னார்கள். நம்முடைய டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகிறபோது, பெண்களுக்கு எந்தளவுக்கு உரிமை தருகிறோம், முதன்முதலாக திரு. ராஜீவ்காந்தி அவர்கள் 33 விழுக்காடு ஒதுக்கீட்டை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் வழங்கவேண்டும் என்று சொன்னபோது எந்த மாநிலமும் நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை, முதல் மாநிலம் தமிழ்நாடுதான் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நான் சென்னையின் மேயராக இருந்தபோது. இதுதான் திராவிட மாடல்.
இன்றைக்கு பெரிய பெரிய பதவில் உட்கார்ந்து கொண்டு, யார் யாரோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அந்த பதவி என்பதே வேஸ்ட். அதுவும் பெரிய பெரிய மாளிகையில் உட்கார்ந்து கொண்டு, திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? இப்போது நடந்து கொண்டிருக்கிற கல்யாணம் – இதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன? என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து இருக்க வேண்டும். அது இன்னும் நம்முடைய பிரச்சாரத்திற்கு வலு சேர்த்துக்கொண்டே இருக்கிறது.
ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம்
நான் இங்கே இருக்கக்கூடிய ஒன்றிய அரசில் இருக்கக்கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித் ஷா -வைக் கேட்டுக்கொள்ள விரும்புவது, தயவுசெய்து இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது இருக்கவேண்டும். அதில் எங்களுக்கு பல சௌகரியங்கள். எது வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைக்குப் பொதுமக்கள் யாரும் இதை பொருட்படுத்தவில்லை. இன்றைக்கு சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கக்கூடிய செய்திகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, இந்தச் சூழ்நிலையில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறதோ, அந்த உறுதிமொழிகளை எல்லாம் சிறப்பாகத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கிறீர்கள்.
தயாராக இருக்கவேண்டும்
இன்றைக்குக் கருத்துக்கணிப்பு வரக்கூடிய சூழ்நிலை எல்லாம் பார்க்கிறபோது, எப்படி தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றோமோ, அதேபோல் வட மாநிலத்தில் நடைபெற இருக்கக்கூடிய 5 மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக, உறுதியாக இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மோடி அவர்கள் தலைமையில் ஆண்டு கொண்டிருக்கக்கூடிய ஒன்றிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. 2024-ல் நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்கவேண்டும், தயாராக இருக்கவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, மணமக்களை பொறுத்தவரைக்கும் எப்போதும் கோரிக்கைகள் வைக்கமாட்டேன். அதிலும் நம்முடைய மணமகள் டாக்டர், மணமகன் திரு. ராதாகிருஷ்ணன், இன்ஜினியர், BE படித்திருக்கிறார். நாட்டில் இருக்கக்கூடிய நிலவரங்கள் அத்தனையும் அவர்களுக்கு நன்றாக புரியும்.
தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்
அதனால் அவர்களுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், ஒரே ஒரு வேண்டுகோள், தமிழ்நாட்டில் இருக்கிறோம், தமிழர்களாக வாழ்கிறோம், தமிழுக்காகவே போராடுகிறோம், தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று அன்போடு கேட்டு, அன்போடு மட்டுமல்ல, உரிமையோடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

