தமிழ்நாடு நாள் ஜுலை 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு (2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் எதிர்வரும் ஜுலை 18 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் “தமிழ்நாடு நாள்” குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.
அதேபோன்று “தமிழ்நாடு நாள்” முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 18.07.2023 முதல் 23.07.2023 வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில், இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறும். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.
சென்னை, மாநிலக் கல்லூரியில் 18.07.2023 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், அமைச்சர்கள் கலந்து கொண்டு தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு நாள் கருத்தரங்கில் “வளர்க தமிழ்நாடு” எனும் தலைப்பில் சுப.வீரபாண்டியன், “வாழ்க தமிழ்நாடு” எனும் தலைப்பில் முனைவர் மா.ராசேந்திரன், “எழுக தமிழ்நாடு” எனும் தலைப்பில் ஆழி செந்தில்நாதன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வண்ணம், சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது.
எனவே, மாணவ / மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் “தமிழ்நாடு நாள்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
– கோ. தீபா புவனேஸ்வரி

