சென்னை அணியினை மகேந்திர சிங் தோனி வழிநடத்தும் விதம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார் .
கடந்த ஐபிஎல்-லில் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்த சென்னை அணியை இந்த ஆண்டு இறுதி ஆட்டத்துக்குள் அழைத்துச் சென்றுள்ளார் தோனி. முக்கிய வீரர்களாகக் கருதப்பட்ட பென் ஸ்டோக்ஸ், ஹங்கர்கேகர் ஆகியோர் காயமடைந்த போதிலும் இளம் படையை வைத்துக்கொண்டே இறுதி ஆட்டம் வரை அணியை அழைத்துச் சென்று தனது கேப்டன்சி மாஸ்டர் கிளாஸை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் தோனி.
ஒவ்வொரு பந்துக்கும் ஆட்ட உத்திகளை மாற்றிக்கொண்டே இருக்கும் தோனிக்கு என்று ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவ்வளவு ஏன் கிரிக்கெட் ஜாம்பவான்களே தோனியைப் பாராட்டாமல் இருந்ததில்லை. தில்லிக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு சென்னை அணி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. அப்போது சிறு குழந்தையைப் போல ஓடிச் சென்று தோனியிடம் தான் அணிந்திருந்த சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார் சுனில் கவாஸ்கர். இப்படி ரசிகர்கள் தொடங்கி கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரங்களுமே கூட தங்களை தோனியின் ரசிகர் என அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.
அந்த வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் வர்ணனையாளருமான மேத்யூ ஹைடன் சமீபத்தில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அப்போது அவர்,”தோனி ஒரு மாயாஜாலக்காரர். பிறரது குப்பைகளை அவர் பொக்கிஷமாக மாற்றக்கூடியவர். சென்னை அணிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே நல்ல பிணைப்பு உள்ளது. அதன்மூலம் சவாலை எதிர்கொள்ளவும் முடிவுகளை எடுக்கவும் சரியான வழிமுறைகளைக் கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் தோனியே அதற்குக் காரணம். இந்திய அணிக்கு தோனி இதைச் செய்தார்.
தற்போது சென்னை அணிக்கும் அவர் இதையே செய்துகொண்டிருக்கிறார். தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா மாட்டாரா என்று விவாதிப்பது இப்போது தேவையில்லாதது. தனிப்பட்ட முறையில் அவர் விளையாடமாட்டார் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் தோனியை அவ்வளவு எளிதாக யாரும் கணிக்கமுடியாது” என்றார்.