மருத்துவத் துறையில் கால்நடை மருத்துவம் ஒரு தனிப் படிப்பு. பொதுவாகக் கிராமப்புறங்களில் கால்நடை மருத்துவத்தின் தேவை இன்றுவரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. நகரங்களிலும் கால்நடை மருத்துவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வேளான்மைதான் நமது நாட்டின் முதுகெலும்பு. 70 சதவிகித மக்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களில் உள்ளனர். பால் உற்பத்தி, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவை முக்கியத் தொழில்களாக உள்ளன. மழை -வெயில் என்று காலநிலை மாறுபாடுகளால் கால்நடைகளை நோய்த் தொற்று தாக்குதலுக்கு உள்ளாகின்றன. நகர்புறங்களில் நாய் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அயல்நாட்டு நாய் வகைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
அதனால், தொழிற்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள் பொது மருத்துவத்தில் காட்டும் ஈடுபாட்டை, கால்நடை மருத்துவத்திலும் காட்டலாம். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் இந்த வேலை முடிந்துவிடுவதாக நினைக்க வேண்டாம். சிங்கம், புலி, சிறுத்தை, யானைக்குக்கூட சிகிச்சை அளிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும். இந்திய ராணுவத்திலும் வேலை வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன.

மேலும், அழிந்து வரும் காட்டுயிர்களைப் பேணுதல், அவற்றுக்கு ஏற்படும் புதிய நோய்களைக் கண்டறிவது என இந்தப் படிப்பின் வீச்சு பெரிது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களைப் பற்றியும் படிக்கும் வாய்ப்பு இதில் உண்டு. இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்கு சிறந்த வாய்ப்பு இந்தப் படிப்பு.
யாரெல்லாம் கால்நடை மருத்துவம் படிக்கலாம்?
# கால்நடைகள் மீதான பற்றும் சூழலியல் பாதுகாப்பின் மீது ஈடுபாடும் கொண்டவர்கள்
# வெயில், மழை பாராமல் உறைவிந்து குடுவையை மாட்டிக்கொண்டு கிராமம் கிராமமாக சுற்றிவரத் தயங்காதவர்கள்.
# கால்நடைகளையும் அவற்றை வளர்ப்பவர்களையும் நேசிப்பவர்கள்.
# கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைப்பவர்கள்.
# கால்நடை டாக்டர் படிப்பு முடித்த பலர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என்று உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.

கால்நடை மருத்துவம் படிப்பதில் உள்ள சாதகங்கள் என்ன?
நீட் (NEET) தேர்வு மதிப்பெண் தேவையில்லை. அரசு கல்லூரிகளில் மட்டுமே கால்நடை மருத்துவப் படிப்பு வழங்கப்படுவதால் கல்விக் கட்டணம் மிகக் குறைவு. மனித மருத்துவ பட்டப் படிப்புக்கு இணையாக
ஐந்தரை ஆண்டுகளைக் கொண்டது. மனித மருத்துவத்தைப் போன்றே கால்நடை மருத்துவத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன.
தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு என நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன. இளநிலை பட்டப்படிப்பை முடித்ததும் முதுநிலை, முனைவர் பட்டம் போன்ற மேற்படிப்பு வாய்ப்புகள் இருக்கின்றன.
கால்நடை மருத்துவர் ஆவதால் கிடைக்கும் சாதகங்கள் என்னென்ன?
# அரசு வேலையில் சேரலாம்.
# பெருநகரத்தில் வசிப்பவர்கள் செல்லப்பிராணி மருத்துவமனையை அமைத்துக் கொள்ளலாம்.
# சிறுநகரங்களில் வசிப்பவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று கால்நடை மருத்துவ சேவையை அளிக்கலாம்.
# அலுவலகச் சூழலில் பணிபுரிய விரும்புவர்கள் வங்கிகளிலும் காப்பீட்டு நிறுவனங்களிலும் வேலை பெற வாய்ப்பு உள்ளது.
# கால்நடைப் பண்ணை ஆலோசகராகச் செயல்பட்டு வருவாயைப் பெருக்கிக்கொள்ளலாம்.
# முதலீடு இட்டு கால்நடைப் பண்ணை வைத்து தொழில் முனைவோராகவும் உருவெடுக்கலாம். பல இளைஞர்களுக்கு வேலை வழங்கலாம்.

தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் (Tamil Nadu State Candidates), அயல்நாடு வாழ் இந்தியர் (NRI’s) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRI’s) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored), அயல்நாட்டினர்
(Foreign National) என்று மூன்று பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஒவ்வொன்றுக்கும் கட்டணம் மாறுபடும்.
விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்கள் / சான்றிதழ்களை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்து, பல்கலைக்கழக வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பி.வி.எஸ்.சி & ஏ.எச் அல்லது பி.டெக் அல்லது இரண்டையும் தேர்ந்தெடுத்து (தகுதியானவர்கள்) விண்ணப்பிக்கலாம்.
பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம்), பி.டெக். (கோழி வளர்ப்புத் தொழில்நுட்பம்) மற்றும் பி.டெக். (பால் தொழில்நுட்பம்) ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை ஒரே பி.டெக். விண்ணப்பத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்.
தர வரிசை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டு விதிகள் மற்றும் விண்ணப்பதாரர் தேர்வு செய்த முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கலந்தாய்வுக்கு பதிவு செய்ய வேண்டும்.

தகுதிகள்:
பி.வி.எஸ்.சி & ஏ.எச் / பி.டெக். படிப்புகளில் சேர்க்கைக்கான தகுதிகள்
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும்.
உயர்நிலைப் பாடப்பிரிவில் (10+2) /சிபிஎஸ்இ/ வேறு ஏதேனும் தேர்வில் (வழக்கமான முறையில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதற்குச் சமமானதாக அங்கீகரிக்கப்பட்டு பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.
கூடுதலாக, முதல் தமிழ்நாடு மாநிலத் தேர்வு வாரியத்தின் HSC தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள், 11 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் (GO Ms. No. 195, பள்ளிக் கல்வித் துறை, தேதி: 14.09.2018 தமிழ்நாடு அரசு).
மொத்த மதிப்பெண் கணக்கீட்டிற்கு விண்ணப்பதாரர் பெற்ற கல்வித் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது: பட்டியலின சாதி (SC), அருந்ததியர் (SCA)மற்றும் பட்டியலின பழங்குடி (ST)பிரிவுகளின் விண்ணப்பதாரர்கள்- வயது வரம்பு இல்லை.
மற்ற விண்ணப்பதாரர்கள் – 21 ஆண்டுகள். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் அதிகபட்ச வயது தளர்வு அளிக்கப்படும்.
மாணவர் சேர்க்கை: www.tanuvas.ac.in

