’’கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத அவலம் நிலை ஏற்பட்டுள்ளது. குவைத்தில் தவித்துக் கொண்டிருக்கும் மனைவியை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பண்ருட்டி தி.வேல்முருகன், வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திப்பிராஜபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் 22.10.2023 அன்று மாரடைப்பால் காலமானார். இவரது மனைவியான மகாலட்சுமி, குவைத் நாட்டில் பணியாற்றி வருகிறார்.
இதனால் அதிர்ச்சியையும், வேதனையையும் அடைந்த மகாலட்சுமி, தனது கணவர் ரவிச்சந்திரன் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக முயன்று வருகிறார். ஆனால், சில விதிமுறைகளால் வர முடியாத சூழ்நிலை இருப்பதால், மகாலட்சுமி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறிப்பாக, குவைத்தில் பணியாற்றி வரும் நிறுவனம் மகாலட்சுமியை அனுப்ப மறுப்பதாக தெரிகிறது. இதுகுறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர், வெளிவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு, மறைந்த ரவிச்சந்திரன் மற்றும் மகாலட்சுமியின் மகள் ரம்யா நீலமேகம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி, குவைத்தில் இருந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மகாலட்சுமி, அதில், தனது கணவர் ரவிச்சந்திரனின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என்றும் அவரது முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்றும் தான் தமிழ்நாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கணவரின் முகத்தை இறுதியாக பார்க்க முடியாதோ என்ற தவிப்பும், அச்சமும், மகாலட்சுமியிடம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் குவைத்தில் தவித்து வரும் மகாலட்சுமியை, தமிழ்நாட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

