மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை என்பது அரசியல் சாசனத்திற்கான நெருக்கடியை ஏற்படுத்தும். இதில் எந்த விதிமுறைகளும் பின்பற்றபடவில்லை. ஒரு மாநில அமைச்சர் ஒத்துழைப்பு தருவேன் என்ற பிறகும் அடிப்படை உதவிகள் கூட வழங்காமல் 18 மணி நேரத்திற்கும் மேலாக வைத்து கொடுமை செய்துள்ளார்கள். மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை அனுப்பி மிரட்டுவது போல தமிழ்நாட்டிலும் முயற்சிக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி ஆகியன பாஜகவின் கிளை அமைப்புகளாக செயல்படுகின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்பது ஒரு ஜனநாயக படுகொலை, பாஜகவின் சர்வாதிகார அரசியலின் வெளிப்பாடு, மேலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையின் உச்சம்தான் இந்த கைது நடவடிக்கையாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை அமலாக்கத்துறை செயல்படுத்த முயற்சிக்கிறது. நேற்று அதிகாலை தொடங்கி நள்ளிரவை தாண்டியும் அவரை ஒரே இடத்தில் அமரவைத்து விசாரணை என்ற பெயரால் துன்புறுத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. அவர் உடல்நிலை பாதிக்கும் அளவுக்கு மனிதாபமானம் இல்லாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் எஜமான்கள் மோடி – அமித்ஷாவை திருப்திபடுத்தும் கேடுகெட்da செயலை செய்திருக்கிறார்கள்.
மிரட்டல் திமுகவுக்கு மட்டுமில்லை
இந்த நடவடிக்கையின் மூலமாக திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் மிரட்ட முயற்சிக்கிறது பாஜக. கூட்டணியை பரிசீலனை செய்வோம் என்று அதிமுக சொன்னதற்கு ‘உன்னையும் கைது செய்வோம்’ என்று மிரட்டியிருக்கிறது பாஜக. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத இயக்கம் திமுக தான். அன்றைக்கு அதிமுக ஆட்சியில் ரெய்டு வந்த போதும் திமுகதான் எதிர்த்துக் குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக எந்தக் காலத்திலும் பாஜகவின் எந்த விதிமீறலையும் எதிர்த்து குரல் எழுப்பாது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு தலைவர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து, உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது பாஜக. ஆனால், திமுக மீதும் திமுக தலைவர்கள் மீதும் எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாத நிலையில் திண்டாடும் பாஜக, மக்கள் மத்தியில் பரப்பும் பொய் பிரசாரத்திற்கு புலனாய்வு அமைப்புகளை ஏவி சோதனை நடத்துவதை செய்கிறது. திமுக மீதான போலி Narrative ஊழல் கட்சி என்பதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக, புலனாய்வு அமைப்புகளை ஏவி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை வெற்றிகரமான கட்டத்திற்கு எங்கள் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகர்த்தியிருக்கிறார். வரும் 23-ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எங்கள் தலைவர் பங்கேற்க உள்ளார். அவருடன் 25 தலைவர்கள் ஆலோசனை நடத்தி வியூகம் வகுக்க உள்ளனர். அதனால் அபரிமிதமான பதற்றத்தில் தவிக்கும் பாஜக அமலாக்கத்துறை மூலம் நேரடியாக மிரட்டும் வேலையை செய்கிறது.
ஒரு தனி நபரின் அரசியல் பகையும், ஒரு கட்சியின் சித்தாந்த ரீதியான அரசியல் பகையும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் உச்சமாக மாறியிருக்கிறது. கொங்கு மண்டலத்திலாவது சற்று வாக்குகளை வாங்க முடியும் என பாஜக நம்பிக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையை முற்றாக சிதைத்தவர் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாஜகவில் யார் நின்றாலும் தமிழ்நாடு மக்கள் அவர்களை தோற்கடிப்பார்கள் என்ற சூழல் இருக்கும்போது தனது தோல்விக்கு காரணம் செந்தில் பாலாஜி என நினைத்து அவரை பழிவாங்கும் எண்ணத்தில் சுற்றிக்கொண்டிருந்தார் அண்ணமலை.
விரைவில் சோதனை
அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை இன்ச் ஐ இன்சாக விமர்சித்து அம்பலப்படுத்தி வந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ரபேல் வாட்ச் பில் எங்கே? என்ற கேள்வியை செந்தில் பாலாஜி எழுப்பியதை அண்ணாமலை தனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக கருதுகிறார். கடந்த மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பாஜக கூட்டணி தோல்விக்கு காரணக்கர்த்தாவாக களத்தில் பணியாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் வேட்கை பாஜகவுக்கு அதிகமானது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, “அமலாக்கத்துறை Busy ஆக உள்ளதாகவும் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை விரைவில் சோதனை செய்யும்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு பாஜகவும் அதிமுகவும் அவர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பியிருந்தார்கள், தற்போது அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, டெல்லி, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது தற்போது தமிழ்நாடு அரசிற்கு எதிராக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.
கனவை செந்தில் பாலாஜி கலைத்து விட்டார்
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக அதிகமாக மேற்கு மாவட்டத்தில் வெற்றி பெற்றது. பாஜகவும் 2 இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர் ஆகிய 5 மாநகராட்சிகளையும், 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளில் அதிக இடங்களையும் கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதற்கு முழு காரணமாக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று கூறப்பட்டது. பாஜக அனைத்துத் தேர்தல்களிலும் மண்ணைக் கவ்வினாலும், கொங்கு நாடு என்று கனவு கண்டனர். ஆனால், அந்த கனவையும் செந்தில் பாலாஜி கலைத்து விட்டார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே கரூர் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் வெற்றி பெற பெரிதும் காரணமாக இருந்தவர் செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கருர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும் என்று சவால் விட்டு வெற்றியும் பெற வைத்தார். அதில் தோல்வியுற்றவர்களில் பாஜகவின் மாநிலத் தலைவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் செந்தில் பாலாஜி பணியாற்றினால் நோட்டாவை விடவும் நிலமை மோசமாகிவிடும் என்ற பயத்தில் இது போன்ற சோதனைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறையும் பழிவாங்கும் நடவடிக்கையும்
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் குற்றங்களை கண்டறிவதில் தான் அமலாக்கத் துறை கவனம் செலுத்தி வந்தது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் எதிர்க்கட்சிகளின் மீது ஏவி பயம் ஏற்படுத்துவதற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை தனது அரசியலுக்காக பாஜக பயன்படுத்துவது என்பது ஜனநாயக படுகொலையாகும். தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கு ஆகும். இதன் மூல வழக்கு CCB (CHENNAI CRIME BRANCH) உடையது. இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு அரசு வேலைக்கு பணம் பெற்றார் என்பது தான் புகார். ஆனால் புகார் கொடுத்தவர்களே வழக்கை திரும்பப்பெற்றுவிட்டனர். அமைச்சர் நேரடியாக பணம் பெற்றாரா என்றால் இல்லை. புகார் கொடுத்தவர்களே வழக்கை திரும்பப் பெற்றவுடன் இதில் அமலாக்கத்துறை எப்படி? ஏன் வந்தார்கள்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உள்ளான அரசியல்வாதிகளில் 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய விசாரணை அமைப்புகள் எந்த அளவிற்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இந்த புள்ளி விபரம் ஒன்றே போதும். ஒன்றிய அரசின் அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி 14 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. “ஒன்றிய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குநரகம் போன்ற அமைப்புகள் பாஜகவின் அரசியல் எதிரிகளை மட்டுமே குறிவைத்து வருகின்றன” என்று எதிர்கட்சிகள் மனுவில் குற்றம்சாட்டியுள்ளன. “பாஜக அரசு புலனாய்வு அமைப்புகள் மூலம் நேருவுக்கும் சம்மன் அனுப்பி அவரது நினைவிடத்தில் நோட்டீஸ் ஓட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கிண்டலாக தெரிவித்தார். அதைக்கூட பாஜக செய்யும் சூழல் தான் தற்போது உள்ளது.

