‘’மொழி இல்லை எனில் பண்பாடு இல்லை; ஒரு சமூகத்தின் ஆணிவேரே அதன் தாய் மொழி தான்’’ என்று தமிழ் அறிஞரும் அமெரிக்க வாழ் இந்தியருமான வ.பொ.சண்முகம் கூறினார்.
“தொல்காப்பியமும் திருக்குறளும் ஓர் ஆய்வு” – என்ற பொருளில் கருத்தரங்கம் கோவை சக்தி சாலையில் உள்ள ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் கருத்தரங்கம் தொடங்கியது. கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் தேவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் அனுஜா கருத்தரங்கிற்கு தலைமை ஏற்றார். அவர் தனது தலைமை உரையில், தாய்மொழி வளர்ச்சி நன்றாக இருந்தால் தான் பண்பாடு, கலாச்சாரம் மிகச்சிறந்த இடத்தைப் பெறும். தமிழ் மொழியின் சிறப்பைப் பின்பற்றிச் செயல்படும் கல்லூரிகள் அனைத்துத் துறைகளிலும் மேன்மை பெறும். தமிழ் மொழியே அடித்தளம், அதன் மீது ஆயிரமாயிரம் அழகிய வடிவமைப்புகளை நாம் அமைக்கலாம். சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை உள்ள படைப்புக்களை ஆய்வு நோக்கில் அணுகி அதன் ஆழத்தை அறிந்து, அடுத்த தலைமுறைக்கு எளிமைப்படுத்தி கொடுத்தல் நம் பேராசிரியர்களின் கடமையாகும். படைப்பாற்றலை விரிவாக்க இது போன்ற கருத்தரங்குகளை நடத்தி இலக்கியங்களை வெளியுலகிற்கு கொண்டுவந்து, மொழியின் வளமையையும் தொன்மையையும் சிறப்பையும் உலகிற்கு காட்டுவதுடன், கணினி வழி காலத்திற்கு ஏற்றார் போல கல்லூரித் தமிழ் துறைகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் மொழியின் வளர்ச்சி உயர்நிலையை அடையும் என அழகு தமிழில் பேசினார்.
சிறப்பு விருந்தினராக வருகை தந்த அமெரிக்க வாழ் இந்தியர் வ.பொ.சண்முகம் அய்யா, உதவி பேராசிரியர் ந. கணேசன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில் அய்யாவின் பணிகள் பற்றியும், தமிழ் ஆய்வுகள் பற்றியும், ஓய்விற்கும் பின்னும் “தொல்காப்பியமும் திருக்குறளும் ஓர் ஆய்வு” என்ற தனது ஆய்வுக் கட்டுரைகள் பற்றியும், மொழியின் பற்றையும் எடுத்துச் சொல்லி அறிமுகம் செய்தார். “அறிந்ததை அழகாய் செய், தெரிந்ததைத் தெளிவாய்ச் செய், புரிந்ததைப் புதுமையாய் செய், உணர்ந்ததை உண்மையாய் செய், உலகம் உன் கையில்” என்ற கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப சிக்காகோவில் பொறியாளராக வாழ்ந்தாலும் தமிழில் தான் செய்த ஆய்வைப் பேராசிரியர்கள், மாணவர்கள் அறிய கொடுப்பது சிறப்பு என அவரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் வ.பொ.சண்முகம் தனது சிறப்பு உரையில் – மொழி என்பது மனித உணர்வுகளை, உள்ள எழுச்சிகளை, சிந்தனைக் கருத்துக்களை வெளிக்கொணர உதவும் மிகப்பெரும் சக்தி வாய்ந்த கருவி என்று பேசியதோடு, மொழி இல்லை எனில் பண்பாடு இல்லை, ஒரு சமூகத்தின் ஆணிவேரே அதன் தாய் மொழி தான் என தொடங்கினார். “தொல்காப்பியமும் திருக்குறளும் ஓர் ஆய்வு” என்ற தனது ஆய்வு நிலைகளையும் கருத்துகளையும் திருக்குறள் கருத்தோடு தொல்காப்பியப் பாக்களோடும் ஒப்பிட்டுக் கூறினார். ஒவ்வொரு திருக்குறளுக்கும் தொல்காப்பியத்தில் கூறப்பட்ட கருத்துக்களையும் பொருள் நயங்களையும், பகுத்துப் பகுத்து, நுண்ணறிவுக் கருத்துச்செறிவையும் பவர் பாயிண்ட் எனப்படும் ஒளிப்படம் வாயிலாக திரையில் காட்டி விளக்கம் தந்தார். இலக்கணம், சொல் அமைப்பு, கருத்து ஒற்றுமை, வடிவாக்கம் என ஒவ்வொரு வரியையும் ஆழமாய் சிந்திக்கக் கொடுத்தது ஒவ்வொருவரின் சிந்தனையையும் தூண்டி விட்டது.
பிற்பகல் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழாசிரியர்கள் கேட்ட வினாக்களுக்கு விளக்கமளித்துப் பேசினார். ஆக்கபூர்வமான வினாக்கள், ஆழமான கருத்தில், ஆய்வு நோக்கில் வந்த வண்ணம் இருந்தன. அதற்கு உயர்த்திரு சண்முகம் ஐயா பல இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டுகள் கூறி தொல்காப்பியத்தையும் இணைத்துத் தெளிவு படுத்தினார்.
பின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கம் பற்றிய பின்னோட்டம் கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் உள்வாங்கிய விதம், புரிந்து கொண்டது, பயன்படும் விதம், நாம் இனி ஆய்விற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை என்ற விதத்தில் கருத்துக்கள் சிறப்பாக வெளிப்பட்டன. 30 பேராசிரியர்களும் அழகாக அவற்றை வெளிப்படுத்தினார்கள்.
கல்லூரித் தமிழ்த் துறை உதவி பேராசிரியர் முனைவர் கோமதி நன்றி நவில, நாட்டுப் பண்ணுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவு பெற்றது.

