2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1023 அரசு பள்ளிகள் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.inமற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம் (97.53% தேர்ச்சி). விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடம் (96.2% தேர்ச்சி).
ஆங்கிலத்தில் 89 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3649 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 3584 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 320 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மேலும், 9703 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 112 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

