’’உலகின் உற்பத்தி மையமாக மாறும் தமிழ்நாடு..!’’ வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை கட்டுரை

உலகின் சிறந்த உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை பன்னாட்டு நிறுவனங்கள் தேர்வு செய்யத் தொடங்கி உள்ளதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரை வெளியிட்டுள்ளது.

0
35

கொரோனா பரவலுக்கு பிறகு, சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் கடுமையாகி வரும் நிலையில், சர்வதேச வர்த்தகம் குறித்து சிறப்புக் கட்டுரை ஒன்றை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெளிவரும் 133 ஆண்டு பெருமை கொண்ட இந்த பத்திரிகையில் வந்துள்ள கட்டுரை தமிழ்நாடு தொழில் துறையில் பீடு நடை போடுவதை சுட்டிக் காட்டுகிறது.

அந்த பத்திரிகையின் கட்டுரைச் செய்தியில், சர்வதேச வர்த்தகப் போட்டி காரணமாக சீனாவில் இயங்கி வரும் பல நிறுவனங்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளதாகவும், பல நிறுவனங்கள் வியட்நாம், தாய்லாந்து, மெக்சிகோ, மலேசியாவுக்கு தங்கள் தொழிற்சாலைகளை மாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு, சீனாவில் சர்வதேச நிறுவனங்களுக்கு தொழில் முதலீடுக்கு உகந்த சூழ்நிலை இல்லை என்றும் கூறுகிறது.

அதனால், மெக்சிகோ, வியட்நாமை விட அதிக தொழிலாளர்கள், பெரிய சந்தையை கொண்டுள்ள இந்தியாவின் பக்கமும் பல நிறுவனங்கள் பார்வையை திருப்பி உள்ளதாகவும், சீனாவுக்கு மாற்றாக இந்தியாவையும் ஒரு தொழில் உற்பத்தி தளமாக மாற்ற சர்வதேச நிறுவனங்கள் முனைந்துள்ளதாகவும், சர்வதேச நிறுவனங்கள் தமது பொருட்களை உற்பத்தி செய்ய சீனாவை மட்டுமே சார்ந்திருக்க விரும்பவில்லை என்றும் அக்கட்டுரை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தமிழ்நாட்டையே பல நிறுவனங்கள் நாடி வருவதாகவும் தெரிவித்துள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல், தற்போது டென்மார்க்கின் வெஸ்டாஸ், காற்றாலை இறக்கை தயாரிக்கும் ஆலையை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவி உள்ளதையும், சூரிய மின்கல தகடுகள், காலணிகள், பொம்மைகள், காற்றாலை சூழலிகள் தயாரிக்கும் சர்வதேச நிறுவனங்களும் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

ஐபோன், ஐபாட் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் தமிழ்நாட்டை தனது உற்பத்தி தளமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதையும், ஆப்பிள் தனது மொத்த ஐபோன் உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதையும், பாக்ஸ்கான், பெகட்ரான் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐபோனை ஸ்ரீபெரும்புதூரில் தயாரித்து வழங்கி வருவதையும் இக்கட்டுரை பட்டியல் போட்டு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, ஸ்ரீபெரும்புதூரில் கார் தொழிற்சாலைகளும், இதர தொழில்களும் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி உள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல், சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், தமிழ்நாட்டின் தொழில்வளத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இங்கு நிலவும் தொழில் சுமூகச் சூழல் சர்வதேச உற்பத்தி நிறுவனங்களுக்கு உகந்ததாக இருப்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வருவதாக அந்த கட்டுரையில் ஆணித்தரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீரிய முயற்சியால் சர்வதேச உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவது கண்கூடாக தெரிகிறது. தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கட்டும். வாழ்த்துகள்..!

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்