நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியிட்ட இரங்கல் அறிக்கை:
தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப., அவர்களின் அன்னையார் லீலாவதி, உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
அவரது மறைவால் வாடும் உதயச்சந்திரன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
நாமக்கல் NGGO’s காலனியைச் சேர்ந்தவர் த.உதயச்சந்திரன். தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளராகவும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது தாயார் லீலாவதி (வயது 72) கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் NGGO’S காலனியில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இரவு ஏழு மணி அளவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதித்துறை செயலர் உதயச்சந்திரனுக்கு ஆறுதல் கூறவும், அவருடைய தாயார் லீலாவதி உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் நாமக்கல் நகருக்கு வருகிறார்.

