“படிப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள். சாதி, மதம், அரசியல் கடந்து ஒற்றுமையாக இருங்கள்” என்று பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ பேசினார்.
சங்கரன்கோவில் வட்டம் பந்தபுளி கிராமத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான சக்கதேவி ஆலையத்திற்கு கடந்த 12.05.2023 அன்று, சுடர் ஏந்தி தொடர் ஓட்டமாக இளைஞர்கள் சென்றார்கள். பந்தபுளி கிராமத்தில் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்து அங்கிருந்த பொதுமக்களிடையே மதிமுக தலைமைக் கழக செயளாளர் துரை வைகோ பேசினார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன் திருமலைக்குமார் மற்றும் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.
துரை வைகோ பேசுகையில், “வாஜ்பாய், பிரதமராக இருந்தபோது, மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் -க்கு தபால் தலை வெளியிட செய்து அவரது தியாகத்தையும், வீரத்தையும், புகழையும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்ற பணியை தலைவர் வைகோ செய்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசான குருசாமி நாயக்கர் மீது குடும்பத் தகராறின் காரணமாக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மரணதண்டனை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் உச்சநீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. குருசாமி நாயக்கர் போட்ட கருணை மனுவை குடியரசு தலைவர் மூன்று முறையும் நிராகரித்தார். தூக்கில் இடுவதற்கு தேதி, நேரம் எல்லாம் குறிக்கப்பட்டு விட்டது. பரபரப்பான இறுதி கட்டத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலையின் உதவியுடன் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகியின் வாரிசு கழுத்தில் விழ இருந்த தூக்குக் கயிற்றை தலைவர் வைகோ அறுத்து எறிந்தார்.
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்வதை தலைவர் வைகோ வழக்கமாக வைத்துள்ளார். பொடாவில் இருந்த நாட்களை தவிர்த்து கடந்த ஐம்பது வருடங்களாக, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்வதைப் போலவே மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவிலும் தவறாது கலந்து கொண்டு அவரின் தியாகத்தை போற்றுகிறவர்.
குருசாமி நாயக்கர், தான் வாழ்ந்து மறையும் கடைசி காலம் வரை ஆண்டுதோறும் தலைவர் வைகோ -வுடன் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழாவில் தானும் கலந்து கொண்டு உடனிருப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசான வீமராஜா -க்கு கடந்த ஆண்டு சாலை விபத்து ஏற்பட்டது. அதற்கு முன்புவரை மாதாமாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தியாகிகள் உதவித் தொகையை அவர் பெற்று வந்தார். ஆனால் விபத்து ஏற்பட்ட பிறகு வீட்டிலேயே இருக்கும் சூழல் இருந்ததால் உதவித் தொகையை அவரால் பெற முடியவில்லை. இதை அறிந்த தலைவர் வைகோ, நாட்டு விடுதலைக்காகப் போராடிய தியாகியின் நேரடி வாரிசான வீமராஜாவிற்கு அரசு அதிகாரிகளே நேரில் சென்று உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கும், அந்த சமுதாய மக்களுக்கும் தலைவர் வைகோ எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறார்.
நான் இங்கிருக்கிற இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது நல்லா படிங்க.. கல்வி ஒன்று தான் உங்களை உயர்த்தும். கல்வி மட்டும் இருந்தால் இந்த உலகத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
சாதி, மதம், அரசியல் கடந்து ஒற்றுமையாக இருங்கள். மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வலியுறுத்திய சமூக ஒற்றுமையை கடைபிடியுங்கள்.
நிறைய காவல்துறையினர் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள். காரணம், ஒரு சின்ன அசம்பாவிதம் கூட ஏற்பட்டு விட கூடாது என்பதால்..
இங்கிருக்கிற இளைஞர்கள் உணர்வு வேகத்தில் ஏதாவது செய்து விட்டால் கூட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யும் சூழல் ஏற்படும். ஒருமுறை வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டால், அரசு வேலைக்கு செல்ல முடியாது. வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் பெற முடியாது. உங்கள் எதிர்காலம் பாதிக்கும். இளைஞர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, நன்றாக படியுங்கள். ஒற்றுமையாக இருங்கள்” என்று குறிப்பிட்டார்.

