வித்தியாசமான விளையாட்டு போட்டிகளில் ஐரோப்பிய நாடுகள் எப்போதுமே தூள் கிளப்பும். மனைவியை தலைக்குமேல் துக்கிக்கொண்டு ஓடுவது, ஜாக்கெட்டுகளுக்குள் ஐஸ்கட்டிகளைப் போடுவது என்று அசத்துவார்கள். போட்டியில் கலந்துகொள்வோர்க்கும் பார்ப்போர்க்கும் இன்பத்தைக் கொடுப்பார்கள். அப்படித்தான் ஓர் போட்டியை அறிவித்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் ஒருவர்.
அந்த வினோத விளையாட்டு என்னவென்றால், ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் அதிர்ச்சி செய்தி வேகமாக பரவி வருகிறது.
ஜூன் 8 -ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகளில் பெரும்பாலான செய்திகள் டுட்வீட்களை ஆதாரங்களாக காட்டியுள்ளன. இந்த தகவலைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என கடுமையான விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.
ஆனால் ஸ்வீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது. அதாவது, ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
‘ஸ்வீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார்.
எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடன் அரசு பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு அந்நாட்டு விளையாட்டுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விளையாட்டு இப்போது உலகம் முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது.

