திருவாரூர்
மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர்.
குருப்பெயர்ச்சி விழா
திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டும் குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இன்று இரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடந்தது.

