’’இணையவழி (ஆன்லைன்) சூதாட்டத் தடைச் சட்டம் பற்றிய நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் பரிசீலித்து, தேவைப்பட் டால் மேல்முறையீடு செய்வோம்’’ என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இணையவழி சூதாட்டத்தை தடை செய்து மாநில அரசு சட்டம் இயற்று வதற்கு எந்தவித தடையும் இல்லை என நீதிமன்றம் தெளிவாகச் சொல்லி உள்ளது. ஆனால் ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார். நாங்கள் அவரிடம் எங்க ளுக்கு உரிமை உள்ளது என்பதை எடுத்துக் கூறியிருந்தோம்.
இப்போது நீதிமன்றம், மாநில அரசு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இணையவழி சூதாட்டம் ஒழுங்கு முறைப்படுத்துதல் – தடை செய்தல் என்பதுதான் அந்த சட்டத்திற்குப் பெயர். ஒழுங்கு முறைப்படுத்துவது என்பது எந்தெந்த விளையாட்டுகளை, எப்படி ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற் கான குழுக்கள் அமைத்து, ஒழுங்கு படுத்தி விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம். இரண்டாவது கட்டம் ரம்மி மற்றும் போகர் விளையாட்டுகளை அனுமதிக்க முடியாது.
ஏனென்றால், அதில் ஏராள மான மக்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் போகர், ரம்மி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக தனிப் பட்டியலில் அதைத் தந்துள்ளோம். நேரில் விளையாடும் ரம்மிக்கும், ஆன்-லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது.
ஆன்-லைன் ரம்மி-யில் திறமைக்கு வாய்ப்பில்லை. அது ஒரு ‘ப்ரோக்ராம் செட்-அப்’. எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கலாம். அது திறமை அடிப்படையில் வராது. அதனால் அதைத் தடை செய்ய வேண்டும் என்பது எங்களின் கருத்து. நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில், எங்களின் தரப்பை முன்வைக்க வில்லையோ என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து சட்டத்துறை பரிசீலனை செய்யும். தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்வோம். ஒன்றிய, மாநில அரசு வழக்குரைஞர்களுடன் கலந்து பேசுவோம்.
பாஜக சொல்வதை எல்லாம் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்து சமய அறநிலையத் துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களின் சொத்துகளை பாதுகாப்பதற்கும் அதை நிர்வகிக்க அறக்கட்டளைகளை உருவாக்குவதற்குமான அமைப்பு. இந்த அமைப்பையே எடுத்து விடுவோம் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப் போவதில்லை. அதனால், இந்துசமய அறநிலையத் துறையை அவர்கள் எடுக்கப் போவதுமில்லை. போகிற போக்கில் எதைவேண்டுமானாலும் பேசுவதற்கு பாஜகவிற்கு உரிமை உண்டு.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் கூறலாம். அண்ணாமலை தன்னைப் பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக விமர்சனங்களை முன்வைக்கிறார். தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இவை அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளேத் தவிர வேறு ஏதும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
ஆன்லைன் தடை சட்டம் குறித்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் ஆர்.என்.ரவி இழுத்தடித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஒரு வழியாக அந்த சட்டம் நிறைவேறியது. இப்போது, உயர்நீதிமன்ற தீர்ப்பால், தடை ரத்தாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தடையை உறுதி செய்யும் வகையில் சட்டப்போராட்டம் நடத்த இருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது சற்று ஆறுதலை தந்துள்ளது.

