இந்தியாவில் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த 20 ஆம் தேதி தடை விதித்த நிலையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, மலேசியா, போன்ற வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வழக்கத்தை விட இரு மடங்கு அளவில் அரிசி வாங்கிச் செல்கிறார்கள். ஒருவித பதட்டமான சூழ்நிலை வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, அரிசி உணவு சாப்பிடுவோர் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன.
ஏற்றுமதிக்கு தடை விதிப்பு:
இந்தியாவில் அரிசி விலையை கட்டுப்படுத்த அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை விதித்தது. இந்தக் கட்டுப்பாட்டில் அரிசி விலை உயரலாம் என்று வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அச்சம் கொண்டு அதிக அளவில் அரிசியை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
வெளிநாடுகளில் கடைக்கு அரிசி பை வந்ததும் விரைவில் விற்பனையாகிவிடுகிறதாம். இதனால் ஒரு வாடிக்கையாளருக்கு இத்தனை கிலோ அரிசி பை மட்டுமே விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு கடைகள்.
உணவு விலை:
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்கள் உள்ளன. அரிசி ஏற்றுமதி தடை விதிப்பு காரணத்தால் அரிசி விலை உயரும் நிலை உண்டாகும். இதனால் வெளிநாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும்.
நாட்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 25 சதவீதம் ஆகும். இந்த ஏற்றுமதி இந்தியாவில் இருந்து அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறுகிறது.
இந்தியாவில் அரிசி ஏற்றுமதி தடை உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளதால் அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவை ஊக்குவிப்போம் என்று சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியரே – ஒலிவியர் கோரிஞ்சாஸ், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்தியர்கள் கவலை
இந்தியாவில் விதிக்கப்பட்ட அரிசி ஏற்றுமதி தடையால் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் கவலை கொள்கிறார்கள். அத்துடன் அரிசி விலை உயர்வு காரணமாக முன்னெச்சரிக்கையாக அதிக அளவில் அரிசியை வாங்குகிறார்கள்.
இந்தியாவில் விவசாயிகளின் நலனைக் கருதி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நானோ உரங்களை உயர் மானிய விலையில் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அச்சம் வேண்டாம்:
இந்நிலையில், எந்த சூழ்நிலையிலும் அரிசி தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு நெல் அரவை ஆலை அதிபர்கள் அறிவித்துள்ளார்கள். அரிசி மூட்டைக்கு ரு.2 குறைக்கப்படும் என்றும் அரிசி தட்டுப்பாடு அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவித்துள்ளார்கள். மேலும், மத்திய- மாநில அரசுகள் இந்த விஷத்தில் அதிக கவனமுடன் செயல்படுவதாக அறிவித்துள்ளன. விலை அதிகரிக்கவோ, அரிசி தட்டுப்பாடு ஏற்படவோ வாய்ப்பு இல்லை என்று உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளது.
– கோ. தீபா புவனேஸ்வரி

