கனிமொழி கருணாநிதி எம்.பி., ஆற்றிய உரை வருமாறு:-
“இன்று உலக எழுத்தறிவு நாள். இந்த நாளிலே மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி. மாபெரும் தமிழ்க் கனவு என்றால் என்ன? மாணவ மாணவிகளை சந்தித்து உரையாடும் நிகழ்வுக்கு இந்த பெயர் ஏன் வைக்கப்பட்டிருக்கிறது?
மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி அழகான ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. அண்ணாவை பற்றி மற்றவர்கள் எழுதியிருக்கக் கூடிய கட்டுரைகள், பேச்சு, செயல்பாடுகளின் தொகுப்பு அது.
தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிய ஒரு தலைவர், மிகப்பெரிய குடும்பத்தில் பிறக்காமல் ஏழ்மை சூழ்ந்த மிகச் சாதாரண குடும்பத்திலே பிறந்த ஓர் இளைஞர், தன் வாழ்நாளெல்லாம் புத்தகங்களை நேசித்த ஒரு மனிதர், தன் வாழ்க்கையை எப்படி செதுக்கி, தமிழ்நாட்டின் கனவுகளை செதுக்கி, இன்றுவரை இந்த நாட்டில் இருக்கக் கூடிய அறிவுஜீவிகள் எல்லாம் போற்றக் கூடிய, இன்றும் பாராளுமன்றத்திலே அவரது பேச்சுகளை மேற்கோள் காட்டக் கூடிய அளவுக்கு ஒரு மனிதரால் தமிழகத்தின் கனவுகளை கட்டி எழுப்ப முடிந்தது என்றால் அவர்தான் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணாவின் கனவுகள்!
அந்த பேரறிஞரைப் பற்றி அவருடைய கனவுகளைப் பற்றி நாம் பேசும்போதுதான்… தமிழகத்தின் கனவுகளையும் இங்கே இருக்கக் கூடிய மாணவர்களின் கனவுகளையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒன்றாக இந்த மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியை நம்முடைய முதலமைச்சர் உருவாக்கியிருக்கிறார்.
தமிழ்நாடு எப்போதுமே எழுத்தை, கல்வியைக் கொண்டாடக் கூடிய ஒரு மாநிலமாக திகழ்கிறது. இன்றைய மாணவர்களாகிய நீங்கள் எந்த செய்தியையும் செல்போன், சோஷியல் மீடியா மூலமாக உடனக்குடன் தெரிந்துகொள்ள வாய்ப்புடையவர்களாக இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நிலையில் உலகின் மற்ற நாடுகளுடைய பண்பாடுகள், நாகரிகங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம்படிக்கக் கூடிய தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. அப்படித் தேடும்போதுஉலகின் எந்த மொழியிலாவது எந்த நிலப்பரப்பிலாவது, எந்த பண்பாட்டிலாவது கல்வியை தமிழ் மக்கள் கொண்டாடியதுபோல் கொண்டாடி இருக்கிறார்களா என்றால்இல்லை.

ஏனென்றால் எல்லா இடங்களிலும் கல்வி என்பது மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான். ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின் சில உயர் குடிகளுக்கு தான் கல்வி என்ற நிலை உருவாகியது.
அதற்கு முன்னால் இருந்தே தமிழர்கள்இந்த மண்ணில் இருக்கக்கூடியவர்கள் கல்விஎன்பது அறிவு என்பது எழுத்து என்பது எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார் ஔவையார். குறிப்பிட்ட சிலருக்கு தான் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொல்லவில்லை, எல்லோருக்குமே எண்ணும் எழுத்தும் கண் என்று சொன்னார் ஔவையார். வள்ளுவரும் இதேதான் சொல்கிறார். கல்வி என்ற கண் இவருக்கு மட்டும் தான் என்று தமிழ் கூறவில்லை. அனைத்து மனிதர்களுக்கும் கல்வி என்பது கண். எல்லோருக்கும் கல்வி வேண்டும். கல்வி இல்லை என்றால், எழுத்தறிவு இல்லை என்றால் கண் இல்லை. அது புண் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கல்வியை கொண்டாடிய மண்தான் தமிழ்நாடு.
தடைகள் வந்தன..!
இங்கே நமது மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது சொன்னார். மார்க்கோ போலோ இங்கே 1292ல் வந்த போது மக்கள் எவ்வளவு சீரும் சிறப்போடும் நாகரிகத்தோடும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார் என்று இங்கே பேசும்போது சொன்னார்.
1610 ஆம் ஆண்டு ராபர்ட்டோ டி நோபிலி என்ற பாதிரியார் மதுரைக்கு வந்தார். அப்போது அவர் என்ன எழுதுகிறார் என்றால் இங்கே இருக்கக்கூடிய மனிதர்களுக்கு கல்வி அறிவு இல்லை, எல்லோரும் பண்ணையில் அடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், தமிழ் மக்களுக்கு உரிமை இல்லை அடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு மட்டும் தான் இங்கே பாடசாலைகள் இருக்கின்றன. அவர்களும் சமஸ்கிருத கல்வியை மட்டுமே பயின்று கொண்டிருக்கிறார்கள் என்று 1610 இல் வந்த ராபர்ட்டோ எழுதுகிறார். இதிலிருந்து நமது மேம்பட்ட கல்வி, நமது மேம்பட்ட நாகரிகம் ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து போய் இருக்கிறது என்பது தெரிகிறது.
கீழடியிலே ஓர் அழகான அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கிறது. கீழடி அகழ்வாராய்ச்சி என்பது எவ்வளவு போராட்டத்திற்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அங்கே அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து நடத்தக் கூடாது என்று பல தடைகள் வந்தன. அதையெல்லாம் மீறி தான் அங்கே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த கீழடி அருங்காட்சியகத்தில் நீங்கள் சென்று பார்த்தீர்கள் என்றால் நம்முடைய பானை ஓடுகளிலே எழுத்து இருக்கிறது.
2600 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தமிழி என்ற நம்முடைய எழுத்துமுறை இருந்திருக்கிறது. இதுவரைக்கும் இந்தியாவிலேயே தொன்மையான எழுத்து வடிவம் என்பது அசோகர் காலத்திலே இருந்தது தான் என்று சொல்லுவார்கள்.
ஆனால் நம்முடைய தமிழ் எழுத்து வடிவம் என்பது அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாமல்… அது வேறு நாம் வேறாக இருந்திருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு தனித்துவமான தமிழ் வடிவம் எழுத்துவடிவம் நம்மிடம் இருந்து இருக்கிறது.
அனைவருக்கும் கல்வி என்று வாழ்ந்தவன் தமிழன்!
கல்வெட்டிலே அரசர்கள் தான் அதிகம் எழுதியிருக்கிறார்கள். தங்களது ஆட்சியைப் பற்றி தங்களது பெயரை பற்றி எழுதச் செய்வார்கள். ஆனால் பானை ஓட்டில் சாதாரண இடங்களில் சாமானிய மனிதர்கள் எழுதுகிறார்கள் என்றால் எந்த அதிகாரமும் வைத்துக் கொண்டு இருக்காதவர்கள். அவர்களுக்கும் எழுத்து தெரிந்திருக்கிறது என்றால்… சாதாரணமாக சின்ன ஊரில் கிடைக்கக்கூடிய பானை ஓட்டில் கூட எழுத்துக்கள் இருந்தது என்றால் கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற பெருமையுடைய மாநிலம் தான் தமிழ்நாடு. வேறு எங்கும் இதுபோல இல்லை.
சிலர் மட்டும்தான் படிக்க வேண்டும். மற்றவர்கள் படித்தால் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொல்லக்கூடியவர்கள் இருந்த நிலையிலே… அனை வருக்கும் கல்வி என்று அப்போதே வாழ்ந்தவன் தமிழன். இந்தப் பெருமை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

கீழடியில் நடக்கக்கூடிய அகழ்வாராய்ச்சிகளாக இருக்கட்டும்… கொற்கையில் நடக்கக்கூடிய அகழ்வாராய்ச்சிகளாக இருக்கட்டும்… ஆதிச்சநல்லூரில் நடக்கக்கூடிய ஆய்வுகள் இவற்றையெல்லாம் நீங்கள் போய் பார்க்க வேண்டும். உங்களில் எத்தனை பேர் போய் இவற்றையெல்லாம் பார்த்து இருக்கிறீர்கள்? (பலரும் பார்க்கவில்லை என்கிறார்கள்). எத்தனை பேர் ஜெயிலர் பார்த்தீர்கள்?” என்று கேட்க அரங்கத்தில் சிரிப்பொலி.
“நீங்கள் படங்கள் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் இங்கே தான் இருக்கின்றன நம்முடைய கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகங்கை.
நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது பற்றிய ஆச்சரியமான விஷயங்களை அங்கே நாம் பார்க்க முடியும். இன்டர்நெட்டில் நாம் பார்க்கிற சுவாரசியமான விஷயங்களை விட மிக சுவாரசியமான விஷயங்களை இத்தகைய அகழ்வாராய்ச்சிகளிலே நாம் தெரிந்து கொள்ள முடியும்.
இப்போது தண்ணீர் கொண்டு வருவதற்கான பைப் போட்ட உடனே கூட உடைந்து விடுகிறது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் தண்ணீர் கொண்டு வருவதற்காக அமைத்த குழாய்கள் இன்னமும் உடையாமல் எந்த பிரச்சினையும் இல்லாமல் அங்கே கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நமக்கு எப்படிப்பட்ட திறமைகள் இருந்திருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
இங்கே வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் போது பல்வேறு நிறுவனங்கள் இங்கே வந்து அந்த முகாம்களில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். ஆனால் நம்முடைய மாணவர்கள் அப்பாவை விட்டு போக மாட்டேன் அம்மாவை விட்டு போக மாட்டேன் என்று சொல்கிறார்கள். இப்போதெல்லாம் நேருக்கு நேர் பார்த்து கொண்டு பேசக்கூடிய அளவுக்கு செல்போன்கள் இருக்கின்றன. நினைத்த நேரத்தில் ரயிலை பிடித்து ஊருக்கு ஓடி வந்து விடலாம். ஆனால் நாம் வெளியே செல்வதற்கு எவ்வளவு சிந்திக்கிறோம்?
ஆனால் அன்றைக்கு தமிழ்நாட்டிலே இருந்து எகிப்திலே போய் வியாபாரம் செய்திருக்கிறார்கள். அங்கே இருக்கக்கூடிய மனிதர்கள் இங்கே வந்து வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி என்றால் அன்றைய தமிழர்களின் புதிய விஷயங்களை எதற்கும் அச்சப்படாமல் தேடக்கூடியதில் இருந்த ஆர்வம் நம்மை உருவாக்கி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தலைமுறை தாண்டி சிந்தித்த தமிழர்கள்!
இங்கே எல்லாருக்கும் எல்லாம் எல்லோரும் சமம் என்பதுதான் தமிழ்நாட்டின் நியதியாக இருந்திருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் தமிழ் மண் சொல்கிற கலாச்சாரம்.
இன்று காலநிலை மாற்றத்தை பற்றி சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறோம். காலநிலை மாற்றம் மனிதர்கள் உட்படஎல்லா உயிரினங்களையும் அழித்துக்கொண்டு இருக்கிறது. விலங்குகள், மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள் இவற்றையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது.
இந்த அச்சம் ஒவ்வொருவருடைய மனதிலும் இருக்கக்கூடிய சூழ்நிலையிலே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லி எல்லா உயிர்களையும் மதிக்கக் கூடிய அளவுக்கு… தலைமுறைகளை எல்லாம் தாண்டி சிந்தித்தவர்கள் தான் தமிழர்கள். அவர்கள் வழியிலே தான் நாம் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் உருவாக்கிய அந்த அறிவு, புரிதல் இதெல்லாம் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டும் எப்படி வித்தியாசமாக சிந்திக்கிறது என்ற ஒரு கேள்வி பலருக்கு தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் தொன்மையாக காலம் காலமாக… நமது சிந்தனைகள் எல்லோருக்குமானதாக இருந்து கொண்டிருக்கிறது.
யாரையும் நீ வேண்டாம், நீ விலகி, இரு உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லாத ஒரு பண்பாடாக… ஒரு நாகரிகமாக ஒரு இனமாக தமிழ் இனம் வாழ்ந்திருக்கிறது. அதனால்தான் நாம் இந்திய தேசம் தொடக்கூடிய எல்லைகளை முன்கூட்டியே தாண்டி இருக்கக் கூடியவர்களாக நாம் உருவாகி இருக்கிறோம்.
ராபர்ட்டோ அடிமைகளாக இருக்கிறார்கள் என்று சொன்ன தமிழ்நாட்டில் கல்வி வளம் பெற்ற ஒரு தமிழ்நாடாக இன்றைக்கு உயர்கல்வியிலே மிகச்சிறந்த இடத்தை பெற்றிருக்கக் கூடிய தமிழ்நாடாக இன்று மாறியிருக்கிறது என்றால் அதற்கான வரலாறை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கி.ரா.வின் ‘கதவு’கதை!
கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் கி ராஜநாராயணனை உங்களுக்கெல்லாம் தெரிந்து இருக்கும். எல்லோராலும் கொண்டாடக் கூடிய எழுத்தாளர் அவர். அவருடைய கதவு என்ற சிறுகதையிலே இரண்டு குழந்தைகள் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் ஒரு கதவு இருக்கும். வசதியே இல்லாத குடும்பம். அம்மா தினமும் கூலி வேலைக்கு போவார். அப்பா வெளியூரில் வேலை செய்கிறார். இந்த ரெண்டு குழந்தைகளும் வீட்டில் கதவில் ஏறி விளையாடுவது தான் தினசரி அவர்களுடைய பொழுதுபோக்கு. டிவி எல்லாம் அப்போது இல்லை.
கதவில் ஏறி ஏறி விளையாடி… டிக்கெட் போட்டு உன்னுடைய ஸ்டேஷன் வந்துருச்சு… என்னுடைய ஸ்டேஷன் வந்துருச்சு என்று சொல்லி விளையாடி அந்த கதவோடு அவர்களுடைய வாழ்க்கை ஒன்றிணைந்து இருந்தது.
இந்த நேரத்தில் தான் அவர்கள் வரி செலுத்தவில்லை என்று சொல்லி நான்கு பேர் வந்து அந்த கதவை கழட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். இப்போது அந்த வீட்டில் கதவு இல்லை. குழந்தைகள் வருத்தமாக இருக்கிறார்கள்.
ஒரு நாள் தம்பி மாலையில் வந்து சாப்பாடு கொடு என்று தன் அக்காவிடம் கேட்கிறான். அக்காவும் குழந்தைதான். சாப்பாடு இல்லை என்று சொல்கிறாள். காலையிலே கஞ்சி காய்ச்சினியே எங்கே என்று கேட்கிறான்.
கஞ்சி வச்சிருந்தேன். நம்ம வீட்டுல கதவு இல்லாததால நாய் வந்து குடிச்சிட்டு போயிடுச்சு என்று அவள் சொல்கிறாள். அவன் பசியோடு தூங்க செல்கிறான்.
கதவு இல்லாததால் வாடைக்காற்று வீட்டுக்குள்ளே வருகிறது. கைக்குழந்தைக்கு அந்த காற்றால் பாதிக்கப்பட்டு ஜுரம் வந்து விடுகிறது. வைத்தியம் பார்க்க முடியவில்லை அந்த குழந்தை இறந்து விடுகிறது. அவர்களுடைய வாழ்க்கையே மாறி விடுகிறது.
ஒரு நாள் அந்த தம்பி அக்காவிடம் சொல்கிறான். நம்ம வீட்டுக் கதவை அங்க போட்டு வச்சிருக்காங்க போய் பார்க்கலாம் என்று. இருவரும் போய் அந்த கதவை பார்த்துவிட்டுஅவ்வளவு மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறார்கள்.
இந்தக் கதவுக்கு பின்னால் இருக்கிற வறுமை, இந்த கதைக்கு பின்னால் இருக்கக்கூடிய உணர்வு, இந்த கதைக்கு பின்னால் இருக்கக்கூடிய நிராசைகள், இந்த கதைக்கு பின்னால் இருக்கக்கூடிய அந்த பிள்ளைகளின் கல்விக் கனவு கலைந்து போன வன்மம் இவை அத்தனையையும் கதவு என்னும் கதையிலே கி.ரா. கொண்டு வந்திருக்கிறார்.
இப்படித்தான் பல குழந்தைகள் வாழ்வதற்கு வழி இல்லாமல்… அந்த குடும்பமே ஒருவேளை உணவுக்காக போராட வேண்டிய காலகட்டத்திலே நாம் வாழ்ந்திருக்கிறோம். ஒருவேளை உணவுக்காக ஒரு குடும்பமே அடிமையாக வேலை செய்யும். ஒருவேளை உணவுக்காக தங்கள் வாழ்க்கையையே எஜமானர்களுக்கு எழுதிக் கொடுத்துவிடக்கூடிய அவலத்தோடு இந்த மண்ணிலே பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலே சாதித்த கல்வி!
ஆனால் இன்று நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த உணவு அரசியலில் இருந்து நாம் வெளியே வந்திருக்கிறோம். கல்வி என்பது எல்லோருக்கும் ஆனது என்பது தமிழ்நாட்டிலே சாதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னமும் இந்த சாதனையை நிகழ்த்தாத பல மாநிலங்கள் இந்தியாவிலே இருக்கின்றன.எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் உணவு என்ற நிலையை நாம் உருவாக்கி இருக்கிறோம்.
சில பேர் சொல்லலாம் எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறார்கள் என்று. இது இலவசம் இல்லை. ஒருவேளை உணவுக்காக அடிமைகளாக இருந்த நிலையை மாற்றி எழுதியது. இதற்குப் பின்னால் இருக்கிற சமூக நீதியை புரிந்து கொள்ள வேண்டும். உணவிற்காக அடிமையாக இருந்தவர்களை விடுதலை செய்தோம் என்ற நிலைமைதமிழ்நாட்டில் சாத்தியப்பட்டிருக்கிறது என்ற பெருமை நமக்கு உண்டு.
பள்ளிகள் இல்லாத இடங்களே கிடையாது!
பல மாநிலங்களில் பல இடங்களில் இன்றும்பள்ளிக்கூடங்களே கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் இல்லாத இடங்களை கிடையாது. பெருந்தலைவர் காமராஜரில் தொடங்கி இன்று வரை பள்ளிக்கூடங்கள் உயர்கல்விக்கான கல்லூரிகள் என்று ஒவ்வொரு அரசும் தொடர்ந்து பணி செய்து இருக்கிறது. இது சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றிலே மிக முக்கியமான பகுதி.
பள்ளிகள் இருந்தும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு பெரிய அளவில் வரவில்லை. அப்போது சென்னையிலே ஜஸ்டிஸ் பார்ட்டி அரசு பள்ளிகளில் மதிய உணவு என்பதை சிறிய அளவில் கொண்டு வருகிறார்கள். அதை அவர்களால் மேற்கொண்டு எடுத்து செல்ல முடியவில்லை. அதற்குப் பிறகு பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வந்து படிக்காமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்ததை பார்க்கிறார். ஏன் மாடு மேய்க்கிறீங்க பள்ளிக்கூடத்துக்கு போகலையா என்று கேட்டபோது, ‘நான் மாடு மேய்க்காம பள்ளிக்கூடத்துக்கு போனா நீ சாப்பாடு போடுவியா?’ என்று அந்த மாணவர்கள் கேட்டார்கள்.
காமராஜர் உருவாக்கிய மதிய உணவுத்திட்டம்!
சென்னை வந்த முதலமைச்சர் காமராஜர் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை உருவாக்கி காட்டினார். அதற்குப் பிறகு தொடர்ந்து வந்த ஆட்சியினர் அது எந்த ஆட்சியாக இருந்தாலும் தி.மு.க.வாக இருக்கட்டும் அ.தி.மு.க.வாக இருக்கட்டும் யாரும் அந்தத் திட்டத்தை நிறுத்தவில்லை. அதை இன்னும் விரிவு படுத்திக் கொடுத்தார்கள்.
ஒன்றிய அரசாங்கம் 2035-ல் 50 சதவீதம் மாணவர்களை உயர்கல்விக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கு வைத்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் விகிதம் சென்ற ஆண்டு 52 சதவீதத்தை தாண்டி விட்டோம். இதற்கு காரணம் அந்த பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்து செய்திருக்கிற முயற்சிகள்.
கல்லூரிகளை உருவாக்கிய தலைவர் கலைஞர்!
பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக படிப்பை நிறுத்தி விடக்கூடாது.அதனால்தான் திருமண உதவித் தொகைதிட்டத்தை தலைவர் கலைஞர் கொண்டு வந்தார். எட்டாவது வரை படிக்க வையுங்கள் பத்தாவது வரை படிக்க வையுங்கள் உங்கள் மகளை நாங்கள் திருமணம் செய்து தருகிறோம் என்று ஒரு அரசு இருக்கிறது என்றால்… அந்த மாணவர்களின் கல்வி மீது அரசுக்கு எவ்வளவு அக்கறை இருக்க வேண்டும்!
கல்லூரிகள் ரொம்ப தூரத்தில் இருந்தால் அனுப்ப மாட்டார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்பவே மாட்டார்கள். அவர்கள் ஊருக்கு அருகிலேயே கல்லூரிகளை உருவாக்கினால் அவர்கள் நிச்சயமாக படிக்கும் வாய்ப்பு உண்டாகும் என்பதற்காக தான் தலைவர் கலைஞர் அவர்கள் சின்ன சின்னஊர்களில் கூட கல்லூரிகளை உருவாக்கினார். இன்று நாம் தேசிய அளவைவிட, அவர்கள் 27% தான் இருக்கிறார்கள். ஆனால் நாம் உயர் கல்வி விகிதத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்றால்… எத்தனை பேர் இழுத்து வந்திருக்கிற தேர் தான் இது.
இத்தனை பேர் போராடி இத்தனை பேர் கஷ்டப்பட்டு கல்வியை அனைவருக்குமானது என்ற நிலையை நாம் தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறோம். இது நம்மிடமிருந்து தட்டி பறிக்கப்படக் கூடாது என்றால் நீங்கள் இந்த போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மெடிக்கல் காலேஜ் குள்ளேயே போக முடியும். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் அதாவது ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் மருத்துவர்கள் ஆக முடியும் என்ற நிலை இருந்தது. நீதிக்கட்சி ஆட்சியிலே தான் அந்த சட்டம் மாற்றப்பட்டது. அதற்குமுன் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியாத நிலை இருந்தது. ஆண்கள் போல பெண்கள் வேடமிட்டுச் சென்று படித்த அவலங்களும் உண்டு.

கல்விக்காக இந்த உலகம் இவ்வளவு போராடி இருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் தான் நாம் பெற்றிருக்கக் கூடிய இந்த உரிமைகளை பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும். ஏனென்றால்இவ்வளவு கஷ்டப்பட்டு இதை நம் கையில் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.
இன்று நாம் எல்லோரும் சர்வ சாதாரணமாக கல்லூரிகளுக்கு சென்று படிக்கிறோம் என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் போராட்டங்கள் என்ன… என்பதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் இந்த காலகட்டத்தில் நான் பெற்றிருக்கும் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
நீங்கள் உங்கள் பெற்றோரிடம் போன் கேட்டிருப்பீர்கள். அவர்கள் வாங்கி தர தாமதிப்பார்கள். அவன் வச்சிருக்கான் இவன் வச்சிருக்கான் எனக்கு போன் வாங்கி தா என்று சொல்வீர்கள். பழைய போன் ஆக இருந்தால் கூட கொடு என்று சொல்வீர்கள். ஒரு கட்டத்தில் உங்களுக்கு போன் வாங்கி கொடுத்த பிறகு அப்போதுதான் உங்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.
இன்று நாம் கல்லூரியில் உட்கார்ந்து இருக்கிறோம், நாளை நினைத்தால் சிலிக்கான் வேலியில் போய் வேலை செய்ய முடியும் என்ற நிலையை இன்று நாம் அடைந்திருக்கிறோம் என்றால் அதற்கான வேல்யூ என்ன மதிப்பு என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நமக்காக பல போர்க்களங்களை சந்தித்தவர்கள், ரத்தம் சிந்தியவர்கள், கண்ணீர் விட்டவர்கள் இவர்களுடைய வரலாறுகளைநாம் தெரிந்து கொள்ள வேண்டும் அது தெரிந்தால்தான் இதை நம்மால் பாதுகாக்க முடியும்.
ஏனென்றால் நமக்கு இருப்பது மாபெரும் தமிழ் கனவு. அந்த கனவு எல்லோரும் சமம் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் இருக்க வேண்டும். ஆண் -பெண், சாதி -மதம் என்ற வித்தியாசம் இல்லாமல் ஒரு அழகான உலகத்தை நாம் உருவாக்க வேண்டும். எல்லோரும் என்றும் இங்கே தலை நிமிர்ந்து வாழக்கூடிய சுயமரியாதையோடு வாழக்கூடிய பெரியார் கனவு கண்ட ஒரு வாழ்க்கை வாழக்கூடிய உரிமை இருக்கிறது. அதுதான் நம்முடைய தமிழ் கனவு அதை உருவாக்கக் கூடியவர்கள் நீங்கள்தான்.”
இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கல்லூரிமுதல்வர் சுப்புலெட்சுமி, நகர் மன்றத் தலைவர் கருணாநிதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!
இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. உரையாற்றினார்.