“தானியங்கி இயந்திரங்கள் மூலம் மட்டுமே பால் விற்பனை செய்யும் திட்டம்”, இயந்திரங்கள் கொள்முதல் மூலம் கோடி, கோடியாய் கொள்ளையடிக்கவும், ஆவினை அழித்து தனியாருக்கு தாரை வார்க்கவும் திட்டமிடும் ஆவின் அதிகாரிகள். -தமிழ்நாடு (தவெக) அரசு ஆவினை காப்பாற்றக் கோரி முதலமைச்சர், பால்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் வாயிலாக பால் முகவர்கள் சங்கம் கடிதம்.
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் ஆவின் பாலினை தானியங்கி இயந்திரங்கள் மூலம் விநியோகம் செய்ய இருப்பதாகவும், இனிமேல் நெகிழி உறைகளில் பால் விநியோகம் செய்யப்போவதில்லை எனவும் ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஏற்கெனவே ஆவின் நிறுவனத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை, கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்ட விற்பனை விலை குறைப்பு, முறையற்ற விலை உயர்வு போன்ற பல்வேறு காரணிகளால் கோடிகளில் ஏற்பட்ட இழப்பு காரணமாக பால் உற்பத்தியாளர்களுக்கான பணப்பட்டுவாடா தாமதம், கொள்முதல் விலை அதிகரிக்கப்படாததால் குறைந்து போன ஆவினுக்கான பால் கொள்முதல், அதனால் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவும் ஆவின் பால் தட்டுப்பாடு என கடந்த ஆட்சியில் இருந்தே பல்வேறு பிரச்சனைகள் ஆவினை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கும் சூழலில் புதிய அரசு அமைந்த பிறகும் திருந்தாத, திருந்த முன்வராத ஆவின் அதிகாரிகளின் அண்ட புளுகு, ஆகாச புளுகு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.
ஏனெனில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பொதுமக்களுக்கு தரமான பாலினை விநியோகம் செய்ய வேண்டுமானால் முதலில் அதற்காக எண்ணற்ற இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதோடு அந்த இயந்திரங்களை தினசரி சுத்தமாக பராமரிப்பதும், ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களின் தினசரி தேவைக்கேற்ப அந்த இயந்திரங்களில் பால் பண்ணைகளில் முறையாக குளிரூட்டப்பட்ட பாலினை டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து குறித்த நேரத்தில் சேமித்து வைத்து, அதன் குளிர்நிலை குறையாமல் பார்த்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது என்பது உள்ளிட்டவை மிகவும் சவாலான விசயமாகும். ஆனால் நெகிழி உறைகளில் பால் விநியோகம் செய்யும் போதே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து சுகாதாரமற்ற வகையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வரும் போது தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஆவின் பால் விநியோகம் என்பது போகாத ஊருக்கு வழி தேடும் செயலாகும்.
நீலகிரி மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களில் விற்பனை செய்வதை விட லிட்டருக்கு 4.00ரூபாய் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்வதை ஆவின் நிர்வாகமே நடத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் போது அதனை மறைக்கவே “போகாத ஊருக்கு வழி இருப்பதாக” உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமன்றி பால் கலப்படங்களை கண்டறிவதற்கான மில்க் அனலைசர் இயந்திரங்கள் (4லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சுமார் 83லட்சம் ரூபாய்க்கு கொள்முதல்), பால் உற்பத்தியாளர்களுக்கான ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் என எண்ணற்ற இயந்திரங்கள் கடந்த அதிமுக, திமுக ஆட்சியில் கொள்முதல் செய்து அவை இன்றளவும் பல்வேறு மாவட்ட ஒன்றிய பால் பண்ணைகளிலும், பால் கொள்முதல் நிலையங்களிலும் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டு, கோடிகளில் ஊழல், முறைகேடுகள் செய்த அதே அதிகாரிகள் தற்போதும் ஆவினில் தொடர்வதால் அதே ஊழல், முறைகேடுகளை மீண்டும் அரங்கேற்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து சுமார் 3.60லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு இயந்திரங்கள் வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே எந்த ஒரு உண்மையான தகவலையும் ஆவின் நிர்வாக இயக்குநருக்கோ, பால்வளத்துறை அமைச்சருக்கோ தமிழ்நாடு அரசுக்கோ ஆவின் அதிகாரிகள் வழங்குவதில்லை என்கிற நிலையில் தற்போதைய புதிய ஆட்சியாளர்களிடமும் அதனையே பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
மேலும் சுமார் 30ஆண்டுகளுக்கு முன் தூக்குச் சட்டி, சொம்பு உள்ளிட்ட பாத்திரங்களோடு தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஆவின் பால் வழங்கும் நிலையங்கள் முன் பொதுமக்கள் வரிசைகட்டி நின்று கலப்பட மிகுந்த பாலினை வாங்கிச் சென்று அல்லல்பட்ட அந்த காலம் மறைந்து நெகிழி உறைகளில் ஆவின் பால் விநியோகம் செய்யும் போதே பொதுமக்களின் தினசரி தேவையை தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிர்வாகத்தால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத போது மீண்டும் கற்கால நடைமுறையில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஆவின் பால் விநியோகம் என்பது ஆவினை அழித்து, தனியார் வளரவே வழிவகுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஒருவேளை ஆவின் அதிகாரிகள் அதைத் தான் விரும்புகின்றரோ தெரியவில்லை.?.
எனவே நெகிழிக்கு மாற்றம் கொண்டு வரப் போகிறோம் என கூறிக் கொண்டு மக்களை கற்காலத்திற்கு அழைத்துச் சென்று ஆவினை அழிக்கும் முயற்சியில் ஈடுபடாமல் நெகிழிக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மக்கும் நெகிழி உறைகளை (Biodegradable or Compostable bags) மக்காச்சோள மாவு, கரும்பு சக்கை மற்றும் தாவரக் கழிவுகளில் இருந்து உருவாக்கியுள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் மதர் டெய்ரி மற்றும் கர்நாடக மாநில கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி உள்ளிட்ட பால் நிறுவனங்களைப் போல பால் மற்றும் பிற பால் பொருட்களுக்கு நெகிழி கழிவுகளைக் குறைக்க நிலையான மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பேக்கேஜிங் முறைகளை அறிமுகப்படுத்தி இயற்கை வளங்களை காத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திடவும், இயந்திரங்கள் கொள்முதல் மூலம் கோடி கோடியாய் கொள்ளையடித்து, ஆவினை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்கவும் ஆவின் நிறுவனத்தில் அதிரடி மாற்றங்கள் எனும் அறுவைச் சிகிச்சை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் & மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
