ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அடுத்த கட்ட செயல்திட்டம் குறித்து தேசிய சுகாதார ஆணையம் ஆலோசனை
மத்திய அரசின் சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார ஆணையம், ஆயுஷ்மான் பாரத், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஆகியவற்றின் செயலாக்கம் குறித்த இரண்டு நாள் தேசிய ஆய்வுக் கூட்டத்தை இன்று (17.07.2026) புது தில்லியில் தொடங்கியது. இந்த தேசிய ஆய்வுக் கூட்டத்தை, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தொடங்கி வைத்தார்.
தொடக்க அமர்வின் போது, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் திட்டச் செயலாக்கத்தை வலுப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், மேலும் தரப்படுத்தலை ஊக்குவிக்கவும், திரு ஜாதவ் வழிகாட்டு நெறிமுறைகளின் தொகுப்பை வெளியிட்டார்.
அரசின் முதன்மை சுகாதார முன்முயற்சிகளின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், செயலாக்க முன்னுரிமைகளை அடையாளம் காணவும், மத்திய-மாநில ஒத்துழைப்பு மூலம் சுகாதார சீர்திருத்தங்களின் அடுத்தகட்டத்தை வகுக்கவும், இக்கூட்டம் மூத்த அதிகாரிகளை ஒன்றிணைத்துள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய திரு பிரதாப்ராவ் ஜாதவ், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக தேசிய சுகாதார ஆணையத்தைப் பாராட்டினார். அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகளை உறுதிசெய்யும் உணர்வின் அடிப்படையில் இத் திட்டம் உருவாக்கப்பட்டது எனவும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு பணமில்லா சிகிச்சையும் இந்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் திரு ஜாதவ் கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளில் இத்திட்டத்தின் சாதனைகளை எடுத்துரைத்த அவர், நாடு முழுவதும் 37,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் மூலம், ₹1.91 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சிகிச்சையை இத்திட்டம் எளிதாக்கியுள்ளது என்றார். இதன் மூலம் இது உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமாகத் திகழ்கிறது என்று திரு பிரதாப் ராவ் ஜாதவ் குறிப்பிட்டார்.
திட்டச் செயலாக்கம், டிஜிட்டல் சுகாதாரத்தை ஏற்றுக்கொள்வது, தரவுப் பகுப்பாய்வு, புத்தாக்கம் சிறந்த நடைமுறைகள் குறித்த கலந்துரையாடல்களுடன், இந்தக் கூட்டம் நாளையும் (2026 ஜூலை 18) தொடர்கிறது.
