“முதலீட்டுக்கு உகந்த சூழல் குறியீடு” அறிக்கையை நித்தி ஆயோக் வெளியிட்டது
இடுகை இடப்பட்ட நாள்: 17 JUL 2026 6:11PM by PIB Chennai
ஜூலை 2024-ல் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழு கூட்டத்தில், முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான முக்கியக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கிய முதலீட்டுக்கு உகந்த ஆவணம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி நிதி ஆயோக்கிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, மாநிலங்கள் முழுவதும் சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதன் மூலமும், முதலீட்டுக்கு உகந்த சூழலை வளர்ப்பதன் மூலமும் போட்டி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், ‘முதலீட்டுக்கு உகந்த சூழல் குறியீடு’ ஒன்றை உருவாக்குவது பற்றி 2025–26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நிதி ஆயோக், முதலீட்டுக்கு உகந்த சூழல் குறியீடு என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முதலீடுகளுக்கு உகந்த சூழலை எவ்வளவு திறம்பட உருவாக்குகின்றன, செயல்படுத்துகின்றன, நிலைநிறுத்துகின்றன என்பதை மதிப்பிடுவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் தரவு சார்ந்த கட்டமைப்பை வழங்குகிறது. இந்தக் குறியீடு, முதலீட்டு முடிவுகளைப் பாதிக்கும் முக்கிய கொள்கை, நிறுவன, ஒழுங்குமுறை மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான காரணிகளை மதிப்பீடு செய்வதுடன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் உள்ள முதலீட்டுச் சூழலமைப்பின் ஒப்பீட்டு மதிப்பீட்டையும் வழங்குகிறது.
தேசிய அளவிலான சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான பரந்த கொள்கை வழிகாட்டுதலை வழங்கினாலும், வலுவான உள்கட்டமைப்பு, திறமையான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், செயல்திறன் மிக்க நிறுவனங்கள் மற்றும் கணிக்கக்கூடிய கொள்கை முறைகள் ஆகியவற்றின் மூலம் முதலீட்டுச் சூழலை வடிவமைப்பதில் மாநில அரசுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவின் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கும், அதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், உயர் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கும் இந்த மாநில அளவிலான முதலீட்டுச் சூழலியல்களை வலுப்படுத்துவது அவசியமாகும். இந்தக் குறியீடு, ‘2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடையும் வகையில், சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் ஊக்குவிப்பதன் மூலம், போட்டித்தன்மை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி முறையை வளர்க்க முயல்கிறது.
