Madras Murasu

சென்ட்ரலுக்கு எதிரே சிவப்பு கட்டிடம் ஒரு மறக்கப்பட்ட சரித்திரம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், எதிரே கம்பீரமாக நிற்கும் சிவப்பு நிற கட்டிடத்தை பார்த்திருப்பீர்கள். பலருக்கு அது வெறும் பழைய கட்டிடம். ஆனால் அதுதான் சென்னையின் 137 வருட வரலாறு – ராஜா சர் ராமசாமி முதலியார் சத்திரம்.

இந்த சத்திரம்பிறந்த கதை மிகவும் சுவையானது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1880-களில் மெட்ராஸுக்கு ரயிலில் வரும் ஏழை பயணிகள் தங்க இடம் இல்லாமல் தவித்தனர. இதை அறிந்த ஒரு நல்ல உள்ளம் கொண்ட வள்ளல் இலவச விடுதி ஒன்றை கட்ட விரும்பினார். இதை தெரிவித்து அரசாங்கத்தை அணுகியபோது 1888 ஆகஸ்டில் 1.33 ஏக்கர் நிலத்தை அவருக்கு இலவசமாக கொடுத்தது. ரயில் பயணிகளுக்கு இலவசமாக தங்க இடம் கொடுக்க வேண்டும் என்றும் வேறு வியாபார நோக்கில் பயன்பயன்படுத்தினால் நிலத்தை திரும்ப அரசு எடுத்துக் கொள்ளும் என்றும் நிபந்தனை விதித்தது.

அப்படி அந்த நிலத்தில் உருவானதுதான் இந்த சத்திரம். இந்தோ-சாராசெனிக் கட்டிடக்கலை வடிவில் இரண்டு பக்கமும் கோபுரங்கள் மற்றும் வெள்ளை கோடுகள் கொண்ட சிவப்பு வளைவுகள் கொண்ட அந்த மிகப் பெரிய கட்டிடத்தின் முகப்பில் அதனை கட்டியவர் பெயர் மூன்று மொழிகளில் “ராஜா சார் ராமசாமிமுதலியார் சத்திரம்” என்று பொறிக்கப்பட்டது.1960 வரை இங்கு ஆயிரக்கணக்கானோர் இலவசமாக தங்கினர். பிறகு இது சட்ட பூர்வமாக பராமரிக்கும் பொறுப்பு அரசின் AG & OT வசம் சென்றது.

2010-ல் மெட்ரோ ரயில் பணிக்காக இந்த இடம் தேவைப்பட்டது. வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றது. அப்போது CMRL சென்னை மெட்ரோ நிர்வாகம் நீதிமன்றத்தில், “பாரம்பரிய கட்டிடத்தை இடிக்க மாட்டோம், பாதுகாப்போம்” என்று உறுதி அளித்து அந்த இடத்தைப் பெற்றது. அந்த கட்டிடத்தின் முற்பகுதி இடிக்க படாமல் சீரமைக்கப்பட்டது. இப்போது அங்கு மெட்ரோ ரயில் அருங்காட்சி அமைத்து பாதுகாக்கப்படுகிறது.

இதை கட்டிய ராஜா சர் சவாலை ராமசாமி முதலியார் (1840-1911) அந்நாள் மெட்ராஸின் வாழ்ந்த வள்ளல் தன்மை கொண்ட செல்வந்தர்.

பாண்டிச்சேரியில் ஒரு சாதாரண செங்குந்தர் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கட்டிட கான்ட்ராக்டர், வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டு கடனாளியாகி மெட்ராஸுக்கு பிழைக்க வந்தவர். Dymes & Co என்ற பிரிட்டிஷ் கம்பெனியில் ‘துபாஷ்’ ஆக சேர்ந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த சமயம் (1861-65) அமெரிக்க பருத்தி கிடைக்காமல், பிரிட்டன் மெட்ராஸ் பருத்தியை வாங்கியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்தார். துணி, சவாலை வியாபாரம் செய்ததால் ‘சவாலை’ என்று அழைக்கப்பட்டார்.

1886-ல் மெட்ராஸின் முதல் இந்திய Sheriff அவர் தான்.
மெட்ராஸ் நகராட்சியின் முதல் இந்திய கமிஷனரும் அவரே. சுகுண விலாச சபாவை உருவாக்கியவர்.

அவருடைய வள்ளல் தன்மை சம்பாதிக்கும் பணத்தை தர்ம காரியங்களுக்கு தாராளமாகக் கொடுத்தவர். 1876-78-ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் மெட்ராஸுக்கு வந்த ஏழைகளுக்கு அன்றைய மதிப்பில் ரூ.44,000 செலவு செய்து சோறு போட்ட புண்ணியவான்.

தன் முதல் மனைவி ராணி தையல் நாயகி அம்மாள் நினைவாக பல சத்திரங்களையும், மெட்ராஸ், ராயபுரம், கடலூர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றத்தில் மருத்துவமனைகளையும் கட்டினார்.

அவர் கட்டிய பல சத்திரங்களில் இன்று மிச்சம் இருப்பது சென்ட்ரல் எதிரில் உள்ள இது ஒன்றுதான். அதை இடிக்காமல் அப்படியே அவர் நினைவாக வைக்க உறுதி செய்த மெட்ரோ நிறுவனத்திற்கு நன்றி பாராட்டவேண்டும்.

அடுத்த முறை சென்ட்ரல் செல்லும் போது அந்த சிவப்பு கட்டிடத்தை பாருங்கள். அது வெறும் கட்டிடம் அல்ல, ஒரு தமிழன் உழைப்பால் உயர்ந்து, ஊருக்கு உதவிய வரலாற்றுச் சின்னம். அதன் பக்கத்தில் சென்டர் ஸ்கொயர் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் எழும்பி வரும் 27மாடி கட்டிடம் அமையும் அந்த வளாகத்திற்கு (ராஜா சர்) சவாலை ராமசாமி (முதலியார்) வளாகம் எனப் பெயரிட்டு நன்றி பாராட்ட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.

Scroll to Top