புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்தக் கூட்டு முயற்சியை முறைப்படி தொடங்கிவைத்தார்.
இந்த ஒருங்கிணைப்பின் மூலம் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் டிஜிட்டல் பல்கலைக்கழக தளத்தில் கற்றுக்கொள்பவர்கள், சேலர் பல்கலைக்கழகத்தின் உயர்தரமிக்க, தங்களுடைய வேகத்திறனுக்கேற்ப கற்கக்கூடிய உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஆன்லைன் படிப்புகள், கற்றல் வளங்களை அணுகமுடியும். டிஜிட்டல் கல்வியைத் தொடர்வதில் கற்பவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும், விருப்பத் தேர்வுகளையும் அளிப்பதோடு தேசிய, சர்வதேச கற்றல் வாய்ப்புகளை ஒரே தளத்தில் கொண்டு வரும் ஒருங்கிணைந்த சூழலையும் இம்முயற்சி உருவாக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கல்விசார் ஒத்துழைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த கல்வி ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் கற்றல் சூழலை வலுப்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கிய அம்சமாக இந்தக் கூட்டு முன்முயற்சி உள்ளது.
