Home செய்திகள் ’’சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் யார் தெரியுமா..?’’

’’சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் யார் தெரியுமா..?’’

0
’’சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் யார் தெரியுமா..?’’

சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்துடன் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.

தமிழ் வளர்ச்சித் துறையின் 2022–2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 19.04.2022ஆம் நாளன்று, “ஊடகங்களில் தமிழ்ச் செய்திகளைத் தவறில்லாமலும், அழகாகவும், சரியாகவும் உச்சரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு பேரைத் தெரிவு செய்து அவர்களை பாராட்டி ஒவ்வொருவருக்கும் ரூ.25,000/- பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாயிலாக தமிழ் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்’’ எனவும் அறிவிக்கப்பட்டது.

அவ்வறிவிப்பிற்கிணங்க, 10.10.2023ஆம் நாளன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் தமிழ் ஒலிப்பு சிறப்பு வகுப்புகள் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

நா பிறழ் தொடர் காணொலி

2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்புக்கான விருதாளர்களைத் தேர்வு செய்ய ஏதுவாக அனைத்து காட்சி ஊடக நிறுவனங்களிடமிருந்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களை பற்றிய குறிப்புகளுடன், ‘’ மை அணலில் பற்றிய அணுப் போன்ற அனலால் அனு வெந்து போனது; அணுக்கத்தார் அனுக்கம் என்றும் தொல்லை அண்ணத்தில் அன்னம் படலாம்; கன்னம் படலாமா? கன்னி அணிந்த கண்ணி காணத்தில் வந்ததா? கானத்தில் சேர்ந்ததா? அலம் பிடித்தால் அளம் வருமோ? அளைக்குள்ளே புகுந்த அலை அழைத்து வருமோ? கறையானை அவள் அல்லில் செய்த அவலை அள்ளி எடு, ஒலியும் ஒளியும் ஒழிந்து போனால் ஒள் உளதாகுமோ?. கழகத்தார் ஆடும் கழங்கு கலகம் விளைக்குமா? களங்கம் தருமா? அரம் கொண்டு அறம் அரியலாமா? அரியை அறியா அரிவை அருவை அறுத்த இறவியன்றோ? ஒருத்தலை ஒறுத்து ஒருவினால் ஒறுவு இலதாகுமோ?. தமிழுக்குக் கரையில்லை கறுப்பென்பது கறையுமில்லை’’ போன்ற நா பிறழ் தொடர்களை உச்சரித்து அதனை காணொலியாக பெறப்பட்டு 12.10.2023 அன்று கூடுதல் இயக்குநர் (செய்தி) அறையில் தேர்வுக்குழுவின் முன் காட்சிபடுத்தப்பட்டது.

நான்கு ஊடகவியலாளர்கள்; ஒவ்வொருவருக்கும் ரூ.25,000

இவ்விருதிற்கென 23 நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட 88 வீடியோ நறுக்குகள் தேர்வுக் குழுவினரால் கேட்கப்பட்டு அவற்றில் சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருதுக்குத் தகுதியானவர்களாக திருமதி. திவ்யா நாதன், திருமதி. சுஜாதா பாபு, திருமதி.பொற்கொடி மற்றும் கா. செல்வக்குமார் ஆகிய நான்கு ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

சென்னை, தலைமைச்செயலகத்தில் இன்று (31.10.2023) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25,000/-க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here