Home Uncategorized ’’ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்..!’’ பெ. மணியரசன் கோரிக்கை

’’ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்..!’’ பெ. மணியரசன் கோரிக்கை

0
’’ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்..!’’ பெ. மணியரசன் கோரிக்கை

’’காவிரி நீரும் இல்லை; பருவமழையும் இல்லை, பேரிடர் நிவாரணம் போல் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தஞ்சை மாவட்டம் – பூதலூர் இரம்யா மண்டபத்தில் 22.10.2023 ஞாயிறு மாலை, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் உழவர்களின் அவசரக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குக் கோயில்பத்து பா. தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், பொருளாளர் த. மணிமொழியன், செயற்குழு உறுப்பினர்கள் வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு, பொறியாளர் தி. செந்தில்வேலன், அல்லூர் சாமி. கரிகாலன், ஒரத்தூர் ச. சிவப்பிரகாசம், பூதலூர் ந. சுந்தரவடிவேல், பூதராயநல்லூர் ஆ. இராமலிங்கம், பிரமன்பேட்டை ச. பழனிராசு, சித்தாயல் மு. கருணாநிதி, வைரப்பெருமாள்பட்டி முருகானந்தம், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா. வைகறை, ஒன்றியச் செயலாளர் பி. தென்னவன் முதலிய உழவர் செயல்பாட்டளர்களும் மற்றும் உழவர் பெருமக்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு

நடப்பு ஒரு போகச் சம்பாவும், தாளடியும் நடவும் முடியாமல், நேரடி விதைப்பும் செய்ய முடியாமல், காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. திக்கற்ற அனாதைகள் போல் உழவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

தமிழ்நாடு அரசே, டெல்டா மாவட்டங்களில் பருவ மழையும் உரியவாறு பெய்யவில்லை. எங்கள் விளைநிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. எங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்தும் பம்பு செட்டுகளும் இல்லை. நிலத்தடி நீரும் இல்லை. எங்கள் கதி என்ன?

காலம் காலமாக நாங்கள் செய்து வந்த காவிரி ஆற்றுப் பாசனச் சாகுபடி கர்நாடகத்தின் அடாவடியால் தடுக்கப்பட்டு விட்டதால், பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. இயற்கைப் பேரிடர் போல் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பேரழிவிலிருந்து உழவர்கள் குடும்பங்களைப் பாதுகாக்க, இந்திய அரசின் பேரிடர் நிவாரணத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்த்து, தண்ணீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் தரிசாய் போட்டுள்ள உழவர்களுக்கு 1 ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை கிடைக்க தமிழ்நாடு அரசு உறுதியாக வழிவகை செய்ய வேண்டும்.

தரிசு நிலங்களை இப்போதுள்ள காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வழங்கப் பதிவு செய்து கொள்ள மாட்டா என்பது தமிழ்நாடு அரசுக்கு நன்கு தெரியும். எனவே, நேரடியாகத் தமிழ்நாடு அரசு உழவர்களுக்கு நிவாரணம் வழங்க, இந்திய அரசிடமிருந்து பெற்றோ அல்லது தனது சிறப்புத் திட்டத்தின் மூலமோ வழிவகை செய்ய வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும், இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும்.

பிரான்சு உள்ளிட்ட மேலை நாடுகள் பலவற்றில், தரிசு நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

20 மணி நேரம் மும்முனை மின்சாரம்

பம்பு செட் சாகுபடியிலும் போதிய நீரின்றி பயிர் காய்ந்து அழிவு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை எல்லா உழவர்களுக்கும் தமிழ்நாடு அரசே செலுத்த வேண்டும்.

ஓர் ஊரில் 25 விழுக்காடு நிலத்தில் சாகுபடி காய்ந்து போனால்தான் அவ்வூரைக் காப்பீட்டு வழங்கலில் சேர்க்க முடியும் என்ற ஈவிரக்கமற்ற கொடிய – கார்ப்பரேட் வேட்டையைக் கைவிடச் செய்ய வேண்டும். தனி ஒரு உழவர் நிலம் தண்ணீரின்றியோ வேறு காரணத்தாலோ காய்ந்து விளையாமல் போனால் அந்த நிலத்திற்கும் காப்பீடு வழங்க வேண்டும்.

சம்பா காப்பீடுப் பதிவுக் கடைசி நாள் 15.11.2023 என்பதை மாற்றி, 15.12.2023 என்று கால நீட்டிப்பு செய்ய தமிழ்நாடு அரசு உரியவாறு செயல்பட வேண்டும்.

சாகுபடி செய்யும் உழவர்களுக்கு கூட்டுறவு வங்கி மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் அனைத்திலும், சாகுபடிக் கடன் எந்த நிபந்தனையுமின்றி எளிதாகக் கிடைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்கண்ட உயிர்க் கோரிக்கைகளை நிறைவேற்றி, உழவர் குடும்பங்களையும் மக்களுக்கான உணவு உற்பத்தித் தொழிலையும் பாதுகாக்குமாறு தமிழ்நாடு அரசைக் காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

உழவர்களின் துயரக் குரலைச் செவிமடுத்து, தமிழ்நாடு அரசு நீதி வழங்காவிடில் டெல்டா மாவட்டங்களில் உழவர்கள் உயிர் காக்கும் பெருந்திரள் அறப் போராட்டங்களை அங்கங்கே நடத்துவதென்று மேற்படி பூதலூர் உழவர் கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here