Madras Murasu

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமானது ஏன் ? வேல்முருகன்

’’வெளிநாட்டு ஊடகங்கள் விமர்சனம் செய்யும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமானது ஏன் ?’’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம்:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை காவல் நிலையத்தின் எதிரே தீக்குளித்து, பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒறையூர் ஊராட்சியில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஊராட்சி செயலாளர் அருள்குமாருக்கும், பணித்தளப் பொறுப்பாளராகப் பணியாற்றிய கண்மணிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இருவரும் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளனர். இப்புகார்கள் தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கண்மணியின் கணவர் லட்சாதிபதியை விடுவிக்கக் கோரி, கடந்த நவம்பர் 13 அன்று காவல் நிலையம் சென்ற கண்மணி, காவல் நிலையத்தின் எதிரே தனது உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்துள்ளார்.
தீப்பற்றிய நிலையில் காவல் நிலையத்திற்குள் ஓடிய அவரை, அங்கிருந்த காவல்துறையினர் தீயை அணைத்து மீட்டுள்ளனர். பலத்த தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்மணி, நவம்பர் 16 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
’’ஒரு பெண் தனது கணவருக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை நாடிய நிலையில், தனது உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்குக் காரணம் என்ன?’’
இருதரப்பினரும் புகார் அளித்திருந்த நிலையில், காவல்துறையின் விசாரணை ஏன் இத்தகைய விபரீதத்தில் முடிந்தது? கண்மணியின் முறையீட்டை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறையினர் மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? அன்றைய தினம் காவல் நிலையத்தில் என்ன நடந்தது? கண்மணியின் உயிரிழப்புக்குக் காரணமான சூழலை உருவாக்கியவர்கள் யார்?
மக்கள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடி வரும் காவல் நிலையத்திலேயே ஒரு பெண்ணின் உயிர் பறிபோயிருப்பதற்கு யார் பொறுப்பேற்பது? காவல்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், பொதுமக்களின் புகார்களை விசாரித்து நீதி வழங்க வேண்டிய காவல் நிலையத்திலேயே இத்தகைய துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது காவல்துறையின் பொறுப்புணர்வையும் அரசின் நிர்வாகத் திறனையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
’’இன்று தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலைமை எந்த அளவிற்குச் சீர்கெட்டுப் போயிருக்கிறது என்றால், உள்நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களும் விவாதிக்கும் அளவிற்கு மாநிலத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. தினந்தோறும் நிகழும் வன்முறைகளும், காவல் நிலைய மரணங்களும் தமிழகத்தின் அமைதிப் பூங்கா என்ற பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளன.’’
எனவே, உயிரிழந்த கண்மணியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். அவரது குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, சுதந்திரமான உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதி கேட்டுக் காவல் நிலையத்தை நாடிய ஒரு பெண், இன்று உயிரோடு இல்லை. அவரது குடும்பத்திற்கு உரிய நீதி கிடைப்பதையும், இனியொரு பெண்ணுக்கு இத்தகைய அவல நிலை ஏற்படாமல் தடுப்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
Scroll to Top